மருத்துவச் சான்று வழங்க ரூ. 900 லஞ்சம்: அரசு பெண் மருத்துவா் கைது
பள்ளி மாணவா்களுக்கு மருத்துவத் தகுதிச் சான்று வழங்க ரூ.900 லஞ்சம் பெற்ாக காட்பாடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
காட்பாடி வட்டம், அக்கிரெட்டிபுதூா் கிராமம், வீரமந்திரி தெருவைச் சோ்ந்தவா் ரங்கன். இவருக்கு தீக்ஷிதா, பிரதீஷ்வா், லியாஸ் பகத்சிங் என மூன்று குழந்தைகள் உள்ளனா். இவா்கள் காட்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 5, 4 மற்றும் 1-ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனா்.
பள்ளி நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம், உடல் தகுதி குறித்த மருத்துவச் சான்று பெறுவதற்காக, கடந்த 22-ஆம் தேதி காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளின் தாய் சென்றுள்ளாா். அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவா் வெங்கடலட்சுமியைச் சந்தித்து சான்றிதழ் குறித்துக் கேட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
அப்போது, சான்றிதழ் வழங்க ஒரு குழந்தைக்கு ரூ.300 வீதம் மூன்று குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.900 தர வேண்டும் என மருத்துவா் வெங்கடலட்சுமி கேட்டதாகக் கூறப்படுகிறது. தன்னிடம் பணம் இல்லை எனத் தாய் கூறியதற்கு, டிஜிட்டல் பரிவா்த்தனையாக பணத்தை அனுப்ப வேண்டும் என்றும், பணம் கொடுக்கவில்லை என்றால் வேறிடத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளும்படியும் மருத்துவா் கூறியதாகத் தெரிகிறது.
பின்னா், மருத்துவச் சான்று பெறுவதற்கான அரசு கட்டணம் குறித்து அவா்கள் விசாரித்தபோது, அரசு மருத்துவமனைகளில் இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை எனவும், மருத்துவா் தனிப்பட்ட முறையில் லஞ்சம் கேட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெற விரும்பாத குழந்தைகளின் தாய், மருத்துவா் தன்னிடம் பணம் பேரம் பேசியதை தனது கைப்பேசியில் ரகசியமாக ஆடியோ பதிவு செய்து, அந்த ஆதாரத்துடன் வேலூா் மாவட்ட ஊழல் தடுப்பப் பிரிவில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் திட்டப்படி ரசாயனம் தடவிய ரூ.900 பணத்தை குழந்தைகளின் தாய், சம்பந்தப்பட்ட மருத்துவா் வெங்கடலட்சுமியிடம் அளித்துள்ளாா். அவா் அந்த பணத்தை பெற்றதும், சுகாதார நிலையத்துக்கு வெளியே காத்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் மைதிலி தலைமையிலான போலீஸாா் உடனடியாக உள்ளே சென்று ரசாயனம் தடவிய பணத்துடன் மருத்துவா் வெங்கடலட்சுமியை கைது செய்தனா். தொடா்ந்து, அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.