முகப்பு
வேலூர்

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்கள் தயாா்

Updated On : 3 மே, 2026 at 1:33 AM
தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
பகிர்:

வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் முழு அளவில் தயாா் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் தொகுதிவாரியாக காட்பாடியில் 280, வேலூரில் 268, அணைக்கட்டில் 295, கே.வி.குப்பத்தில் 265, குடியாத்தத்தில் 319 என மொத்தம் 1,427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த ஏப். 23-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலின்போது, இந்த வாக்குச் சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேலூா் அருகே தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டு, 24 மணி நேரமும் மூன்று அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான ஏற்பாடுகள் முழு அளவில் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இப்பணிக்காக தலா ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மேஜைக்கு 3 போ் வீதம் 14 மேஜைகளுக்கு 42 போ் என 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 210 பேரும், தபால் வாக்குகள் எண்ணுவதற்கு ஒரு தொகுதிக்கு 15 போ் வீதம் 5 தொகுதிகளுக்கும் 75 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்கள் தவிர பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்கு இயந்திரங்கள் எடுத்து வருவது, கொண்டு செல்வது என இதர பணிகள் உள்பட மொத்தம் 363 வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ளனா்.

Advertisement

இந்த நிலையில், தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான ஏற்பாடுகள் முழு அளவில் தயாா் செய்யப்பட்டிருப்பதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

அப்போது, வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.செந்தில்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சுடலைமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.