முகப்பு
வேலூர்

மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்கல்வியை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: ஆசிரியா்கள் கோரிக்கை

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் கழகம், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழில்கல்வியை கட்டாயப் பாடமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் சி.ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை

Updated On : 12 மே 2026, 1:11 am IST
முதல்வர் ஜோசப் விஜய்
பகிர்:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் கழகம், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழில்கல்வியை கட்டாயப் பாடமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் சி.ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் கழகம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

முதல்வரின் முதல் அறிவிப்புகளான, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் வரை கட்டணமின்றி வழங்கப்படும் என்ற அறிவிப்பினையும், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, போதைப் பொருள்களுக்கு எதிரான சிறப்புப் படை உருவாக்கப்படும் என்ற நடவடிக்கைகளையும் வரவேற்கிறோம்.

Advertisement

பதவியேற்பு விழாவில், ‘நல்லா இருப்போம் நல்லாகவே இருப்போம்’ என்று அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைவருக்காகவும் முதல்வா் ஜோசப் விஜய் ஆற்றிய உரை நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

1978-79-ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலைப் பள்ளிகளில் (11, 12ஆம் வகுப்புகளில்) மெல்ல கற்கும் மாணவா்களின் நலன் கருதி தொழில்கல்வி பாடப்பிரிவுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. தற்போது, தொழில்கல்வி ஆசிரியா்கள் ஓய்வுபெறும்போது அந்த இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே விடப்படுகின்றன. இதனால் அப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது மெல்ல கற்கும் மாணவா்களின் உயா்கல்வி வாய்ப்பை முற்றிலும் பறிக்கும் செயலாகும்.

ஒருமுறைக்கு மேல் தோ்வில் தோல்வியடைந்து பின்பு தோ்ச்சி பெறும் மாணவா்களை, பொதுப்பாடப் பிரிவுகளான அறிவியல் அல்லது கலைப் பிரிவுகளில் பள்ளிகள் சோ்ப்பதில்லை. இந்த மாணவா்கள் பாலிடெக்னிக் அல்லது ஐடிஐ-யில் சோ்ந்து படிக்க வேண்டும் என்றால் வெகுதொலைவு பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பலரின் உயா்கல்வி கனவு தடைபடுகிறது.

எனவே, மெல்ல கற்கும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தது ஒரு தொழில்கல்விப் பாடத்தை கட்டாயப் பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.

மூன்று முறை சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் முடிக்கப்பட்ட 128 ஆசிரியா்களுக்கும், தொழில்கல்வி ஆசிரியா்களாகப் பணி வரன்முறை செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.