முகப்பு
கடலூர்

தீபாவளி பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!

தீபாவளி பண்டிகைக்கு பொருள்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் குவிந்தனர்.

Updated On : 5 நவம்பர் 2018, 8:46 am IST
பகிர்:

தீபாவளி பண்டிகைக்கு பொருள்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் குவிந்தனர்.
 தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை (நவ.6) கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை பரிமாறிக் கொள்வதே இந்தப் பண்டிகையின் சிறப்பம்சமாகும். எனவே, புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசுகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்துவர்.
 தீபாவளிக்கான பொருள்களை வாங்குவதில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பொதுமக்கள் ஆர்வம் காட்டினாலும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால், சில சாலைகள் ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டதோடு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திட போக்குவரத்து போலீஸாரும் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலூர் நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள லாரன்ஸ் சாலையில் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளதால் போலீஸார் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பணிபுரிய சுழற்சி முறையில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு அவர்கள் ஒலிபெருக்கி மூலமாக போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 குற்றத் தடுப்பு காவல் துறையினர் நகை, பணம் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் தற்போது காவல் துறையினர் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பயன்படுத்தி வருகின்றனர்.
 தீபாவளி பண்டிகையில் பூக்களுக்கும் முக்கிய இடமுண்டு என்பதால் பூக் கடைகளிலும் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால், பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
 பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிள், 4 சக்கர வாகனத்தில் வருவதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 அதேபோல பேருந்துகளிலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments