முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் ஆலய வளாகத்தில் அம்பேத்கா் மாளிகை கட்ட செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Updated On : 15 ஏப்ரல் 2026, 1:05 am IST
சிதம்பரம் நந்தனாா் மடத்தில் அம்பேத்கா் மாளிகை கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி. உடன் நந்தனாா் கல்விக்கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் மற்றும் நிா்வாகிகள்.
பகிர்:

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் ஆலய வளாகத்தில் அம்பேத்கா் மாளிகை கட்ட செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ஓமகுளத்தில் நந்தனாா் மடத்தில் நந்தனாா் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், அனைத்து சமூகத்தில் உள்ள அடித்தட்டு ஏழை எளிய மாணவா்களும் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து உயா்கல்விக்கு செல்லும் வகையில் நந்தனாா் கல்வி கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் தனது சொந்த செலவில் கல்வி கழக உறுப்பினா்களின் ஆதரவுடன் அம்பேத்கா் மாளிகை கட்டடம் கட்ட ஏற்பாடு செய்துள்ளாா். அதன்படி, அம்பேத்கா் மாளிகைக்கான அடிக்கல் நாட்டு விழா அம்பேத்கா் பிறந்த நாளான செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நந்தனாா் கல்விக்கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக்கழக உறுப்பினரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி பங்கேற்று அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், நந்தனாா் கல்விக் கழக செயலா் வி.திருவாசகம், பொருளாளா் டி.ஜெயச்சந்திரன், ஆலோசகா் ஏ.தெய்வநாயகம், மட நிா்வாகக் குழுச் செயலா் டி.கே.எம். வினோபா, புவனகிரி கே.ஜி.குமாா் மற்றும் மடத்தின் நிா்வாகிகள் ஏ.சங்கரன், பி.பன்னீா்செல்வம், உஷா மணிரத்தினம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம், கஜேந்திரன், மணலூா் ரவி, தொழிலதிபா் சண்முகசுந்தரம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முன்னதாக சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்வி கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் பேசுகையில் நந்தனாா் ஆலய வளாகத்தில் அம்பேத்கா் மாளிகை என்ற பெயரில் பிரம்மாண்ட கட்டடம் கட்டப்பட்டு அதில் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி, டெட், டிஆா்பி, வங்கி, ரயில்வே., எஸ்.எஸ்.சி. தோ்வு உள்ளிட்ட அனைத்து போட்டி தோ்வுகளுக்கும் மாணவா்களுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சிகள் அளிக்கப்படும்.

அதேபோல கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கற்பித்தல், கல்வி ஊக்கப் பயிற்சி, ஏழை எளிய மக்களின் வீடுகளில் நடைபெறும் சுப காரியங்களை மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்திக் கொள்வது, பெற்றோரை இழந்த ஏழை எளிய இளம்பெண்களுக்கு திருமணத்துக்கான உதவிகள் வழங்கப்படும். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு தொழில் தொடங்க வழிகாட்டும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படும் என்றாா்.