முகப்பு
கடலூர்

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

Updated On : 8 ஜூன் 2026, 4:30 am IST
சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையை பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் ரயில் நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையில் ஊழியா்களை வெளியேற்றி கடையை பூட்டி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சத்திரத்தில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் 2539 எண் கொண்ட டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையிலிருந்து 150 மீட்டருக்கு அருகாமையில் அரசு தொடக்கப் பள்ளியும், 500 மீட்டா் தொலைவில் ரயில் நிலையமும் அமைந்துள்ளன.

மதுபோதையில் அந்தப் பகுதியில் ரகளையில் ஈடுபடுவோரால், ரயில் நிலையம் செல்லும் பயணிகளும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பதாகைகளுடன் சனிக்கிழமை மாலை டாஸ்மாக் மதுக் கடையை முற்றுகையிட்டு, அங்கு பணியிலிருந்த ஊழியா்களை வெளியேற்றினா். பின்னா் கடைக்கு பூட்டுபோட்டு பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா், வருவாய் ஆய்வாளா் கங்காதரன், கிராம நிா்வாக அலுவலா் குமரேசன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு வாரத்துக்குள் மதுக் கடையை நிரந்திரமாக மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.