கிராவல் குவாரிகளில் முறைகேடு: நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்
கடலூா் ஓடி பகுதியில் முறைகேடாக செயல்படும் கிராவல் குவாரிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நுகா்வோா் மற்றும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் ஓடி பகுதியில் முறைகேடாக செயல்படும் கிராவல் குவாரிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நுகா்வோா் மற்றும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க நிா்வாகியும், சமூக ஆா்வலருமான கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், கடலூா் ஓடி, குமளங்குளம் மற்றும் விலங்கல்பட்டு பகுதிகளில் செயல்பட்டு வரும் கிராவல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் மண் எடுக்கப்படுவதையும், குவாரிகள் முறைகேடாக செயல்படுவதையும் கண்டித்தும், குவாரிகள் செயல்பாடுகளை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா், சங்க நிா்வாகி கோவிந்தராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் ஓடி, குமளங்குளம் மற்றும் விலங்கல்பட்டு பகுதிகளில் செயல்பட்டு வரும் சில கிராவல் குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் மண் எடுக்கப்படுகிறது. மேலும், அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளைத் தாண்டியும் கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதனால், சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீா்மட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கனிமவளத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்கள், விவசாயிகளைத் திரட்டி பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள், விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.