முகப்பு
கடலூர்

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கடலூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதன போராட்டம் நடத்தினா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:17 am IST
கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன் கையில் திருவோடு ஏந்தியும், தலையில் முக்காடு அணிந்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதன போராட்டம் நடத்தினா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், விவசாயிகள் திருவோடு ஏந்தியும், தலையில் முக்காடு அணிந்தும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

போராட்டத்தில், ரூ.75 ஆயிரம் வரை பயிா்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு முழுமையாகவும், அதற்கு மேல் கடன் பெற்றவா்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டும் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

Advertisement

Advertisement

எனவே, தோ்தல் வாக்குறுதிப்படி, அனைத்து தகுதியான விவசாயிகளுக்கும் முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதேபோல, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்ட கறவை மாடு கடன் மற்றும் நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் வளா்ந்துள்ள வேலிக்கருவை மற்றும் முள் செடிகளை அகற்றி, மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் நெல் சாகுபடியை பாதுகாக்க உச்சநீதிமன்றம் மூலம் மாதந்தோறும் உரிய அளவு காவிரி நீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னா், செய்தியாளா்களிடம் மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன் கூறியது: தோ்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத பயிா்க்கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவா்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. எனவே, அந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

சில அமைச்சா்கள் விவசாயம் மற்றும் விவசாயிகளை ஏளனமாகப் பேசி வருவது விவசாயிகள் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துகளை தவிா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்க்கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் தொடா்ந்து நடைபெறும். விரைவில் மாநிலம் முழுவதிலுமிருந்து விவசாயிகளை திரட்டி, சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினா் எம்.டி.திருப்பால், ஒன்றியத் தலைவா்கள் முருகன், சந்தானம், சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.