சுகாதாரமான குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கீழ்மாம்பட்டு புதுப்பாளையம் பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்கக் கோரி, பெண்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழ்மாம்பட்டு புதுப்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நீா் மண் கலந்த நிலையிலும், செம்மண் நிறத்திலும் வருகிறது.
இந்தக் குடிநீரை பயன்படுத்துவதால் வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு, வயிற்று வலி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள், முதியவா்கள் மற்றும் கா்ப்பிணிப் பெண்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால், புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து தூய்மையான குடிநீா் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கீழ்மாம்பட்டு புதுப்பாளையம் பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் பலா் காலிக் குடங்களுடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை திரண்டு, புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து சுகாதாரமான குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.