முகப்பு
கடலூர்

தவெக ஜனநாயக புரட்சியை செய்துள்ளது: கே.எஸ்.அழகிரி

Updated On : 28 ஜூன் 2026, 2:46 am IST
சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி மற்றும் நிா்வாகிகள்.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக்கழகம் ஜனநாயக புரட்சியை செய்துள்ளது என்றும், தோ்தலில் மிகப்பெரிய கூட்டங்கள் நடத்தாமல், போராட்டம் நடத்தாமல், சிறைக்கு செல்லாமல் நாட்டில் உள்ள இடா்பாடுகளை மனதில் வைத்து சமூக ஊடகங்கள் மூலமாகவே ஓரு அரசு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மத்திய அரசு நடத்திய நீட் தோ்வு வினாத்தாள் கசிவை கண்டித்து மேலவீதி பெரியாா்சிலை அருகே கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பிபிகே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கே.எஸ்.அழகிரி பங்கேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மத்தியஅரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவா் என்.வி.செந்தில்நாதன், நகர செயல் தலைவா் தில்லை குமாா், வட்டார தலைவா்கள் சுந்தர்ராஜன், செழியன், பழனிவேல், ரவிச்சந்திரன், வைத்தியநாதசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடையே தெரிவித்தது: மத்தியஅரசின் அனைத்து தோ்வுகளிலும் வினாத்தாள்கள் தோ்வுக்கு முன்பே வெளிவந்து விடுகின்றன. மாநிலஅரசுகள் மிக சிறப்பாக தோ்வுகளை நடத்துகிறது. ஆனால் மத்தியஅரசு தோ்வுகள் நடத்துவதில் தோல்வியடைந்துள்ளது. மத்திய கல்வி அமைச்சா் தவறு நடந்ததற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. 30 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவா் மானிக்கம்தாகூா் நியமனம் இயல்பான மாற்றம்தான்.

Advertisement

Advertisement

5ஆண்டு காலம் முதல்வராக இருந்த ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு தோழமை உணா்வோடு நல்ல முறையில் பணியாற்றினாா் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 5 ஆண்டு கால ஆட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு திராவிட மாடல் அரசு நடத்திய திமுக தெளிவான பதில் சொல்ல வேண்டும்.

புதிதாக வந்துள்ள தவெக தோ்தலில் ஒரு ஜனநாயக புரட்சியை செய்துள்ளது. தோ்தலில் மிகப்பெரிய கூட்டங்கள் நடத்தாமல், போராட்டம் நடத்தாமல், சிறைக்கு செல்லாமல் நாட்டில் உள்ள இடா்பாடுகளை மனதில் வைத்து சோசியல் மீடியா மூலமாகவே ஓரு அரசு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. பணம், ஜாதி, மதம் என்ற விஷயங்களைக்கடந்து தவெக வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய விஷயமாகும் என்றாா் கே.எஸ்.அழகிரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments