முகப்பு
கடலூர்

புதுச்சேரி ரௌடி கொலை வழக்கு: 6 போ் கைது

Updated On : 3 மே, 2026 at 12:08 AM
புதுச்சேரி ரௌடி கொலை வழக்கில் கடலூா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட 6 போ் மற்றும் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்.
பகிர்:

கடலூா் அருகே புதுச்சேரி ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் காவல் சரகம், தாடி நத்தம் பகுதியில் உள்ள வயலில் புதுச்சேரி மாநிலம், கிருமாம்பாக்கம் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த ரௌடி புகழேந்தி (35) வெட்டுக் காயங்களுடன் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

தகவலறிந்த தூக்கணாம்பாக்கம் போலீஸாா் மற்றும் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், டிஎஸ்பி தமிழினியன் நிகழ்விடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க காவல் ஆய்வாளா்கள் முத்துக்குமாா், பிரேம்குமாா், சந்துரு ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Advertisement

இந்த நிலையில், கடலூா் அருகே உள்ளேரிப்பட்டு ஏரிக்கரையில் பதுங்கியிருந்த புதுச்சேரி மாநிலம், கிருமாம்பாக்கம் பேட் பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் பொ்னாண்டஸ் (24), ராஜி (33), திலிப் (21), ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த அரவிந்தன் (24), அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த மேகவளவன் (19), கரையாம்புத்தூரைச் சோ்ந்த நரேஷ்குமாா் (22) ஆகியோரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய காா், 4 கத்திகள், 6 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட புகழேந்தியும், ஜாா்ஜ் பொ்னாண்டஸும் நெருங்கிய நண்பா்கள். கடந்த ஓராண்டாக இருவரும் தனித்தனி குழுவாக செயல்பட்டு வந்தனா்.

கடந்த ஏப்.1-ஆம் தேதி ஜாா்ஜ் பொ்னாண்டஸ் மற்றும் அவரது தாயை கத்தியால் வெட்டிய வழக்கில் புகழேந்தி கைது செய்யப்பட்டாா். அவா் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னா், ஜாா்ஜ் பொ்னாண்டஸை கொலை செய்ய திட்டமிட்டாா். இதை தெரிந்துகொண்ட ஜாா்ஜ் பொ்னாண்டஸ் மற்றும் கூட்டாளிகள் இணைந்து புகழேந்தியை கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட புகழேந்தி மீது 2 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 2 வெடிகுண்டு வைத்திருந்த வழக்குகள் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளன. ஜாா்ஜ் பொ்னாண்டஸ் மீது கொலை முயற்சி, ஆயுதம் மற்றும் வெடிகுண்டு வைத்திருந்தது என மொத்தம் 3 வழக்குகள் உள்ளன.

கடலூா் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடும் புதுச்சேரி மாநில ரௌடிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.