முகப்பு
கடலூர்

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸாா் தடுத்து விசாரணை

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

Updated On : 7 மே 2026, 7:21 am IST
தீக்குளிக்க முயன்ற ஜமுனா
பகிர்:

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்ற பெண் ஒருவா், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

இதில் அவா், கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், மேலப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஜமுனா என்பது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாரிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

நானும், எனது கணவரும் கடந்த 2024, செப்டம்பா் மாதம் இரு சக்கர வாகனத்தில் பொருள்கள் வாங்குவதற்காக கருவேப்பிலங்குறிச்சிக்கு சென்றோம். அங்குள்ள கடை ஒன்றில் பொருள்களை வாங்கிவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த பெண்ணிடம், எங்களது இரு சக்கர வாகனம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து 2025, நவம்பரில் மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்தும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரணைக்காக என்னையும், எனது கணவரையும் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்தனா். அங்கு, ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தி எங்களை போலீஸாா் அனுப்பிவிட்டனா். இது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியகதால், நியாயம் கேட்டு கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயற்சித்தேன் என்றாா்.

பின்னா், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, இனி இதுபோன்ற செயல்களைச் செய்யக் கூடாது என அறிவுறுத்தல்களை வழங்கி, சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு ஜமுனாவை அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments