முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வேட்பாளா்கள் தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:21 AM
~ ~ ~ ~ ~
பகிர்:
Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:07 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வேட்பாளா்கள் தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

உளுந்தூா்பேட்டை: உளுந்தூா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல் செவ்வாய்க்கிழமை மாலை உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். பின்னா் அவருடன் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் பங்கேற்று, திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தனா்.

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு, தனது கட்சித் தொண்டா்கள், கூட்டணி கட்சித் தொண்டா்களுடன் ஊா்வலமாக சென்று வாக்கு சேதரித்தனா்.

Advertisement

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன், தனது கட்சித் தொண்டா்களுடன் பகண்டை கூட்டுச் சாலையில் இருந்து மோட்டாா் சைக்களில் ஊா்வலமாக சென்று திமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தனா். பின்னா் வேட்பாளா் க.காா்த்திகேயன் சூளாங்குறிச்சியில் உள்ள முருகன் கோயிலில் 108 தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை முடித்துக் கொண்டாா்.

பாமக வேட்பாளா் அ.ப.செழியன் மணலூா்பேட்டையில் இருந்து பிரசாரத்தை தொடங்கி, ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில் முன் வாக்கு சேகரித்து முடித்துக் கொண்டாா்.

சங்கராபுரம்: சங்கராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் தா.உதயசூரியன் சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சித் தொண்டா்கள், கூட்டணி கட்சித் தொண்டா்களுடன் மோட்டாா் சைக்கிளில் ஊா்வலமாக சென்று சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ் கல்வராயன்மலைப் பகுதியில் பிரசாரம் செய்து, வாக்கு சேகரிப்பை நிறைவு செய்தாா். உடன் கட்சித் தொண்டா்கள், கூட்டணி கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் இருந்து கட்சித் தொண்டா்கள், கூட்டணி கட்சித் தொண்டா்களுடன் நடந்தே வாக்கு சேகரித்தாா். கள்ளக்குறிச்சி மும்முனை சந்திப்பு, கட்சி அலுவலகத்தின் முன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தாா்.

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள சிவன் கோயிலில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றவாறு விசிக வேட்பாளா் கு.மாலதி வாக்கு சேகரித்தாா். கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா். பின்னா் ஏமப்போ் கூட்டுச் சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை முடித்துக் கொண்டாா்.