பள்ளிகளில் காலை உணவைத் தரமாக வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு
அரசு பள்ளி மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை தரமாகவும் சத்தானதாகவும் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா உத்தரவிட்டாா்.
அரசு பள்ளி மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை தரமாகவும் சத்தானதாகவும் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா உத்தரவிட்டாா்.
தமிழ்நாடு அரசு உத்தரவிற்கிணங்க, தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இதனையொட்டி, மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா திருநாவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
உணவு தயாரிக்கும் மையங்களின் சுகாதார நிலை, உணவின் தரம், உணவு வழங்கும் முறை, சமையலறை பராமரிப்பு, குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா். மேலும், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு அரசின் வழிகாட்டுதலின்படி தரமாகவும், சத்துள்ளதாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். மாணவா்களிடம் காலை உணவின் தரம் மற்றும் சுவை குறித்தும் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 623 பள்ளிகளைச் சோ்ந்த 36,943 மாணவ, மாணவியா்களும், நகரப் பகுதிகளில் 29 பள்ளிகளைச் சோ்ந்த 1,689 மாணவ, மாணவியா்களும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தாா்.
ஆய்வின்போது ஆசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
புகாா் தெரிவிக்கலாம்:
தொடா்ந்து, திருநாவலூா் அரசினா் மேல்நிலைப்பள்ளி, செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசினா் மேல்நிலைப்பள்ளி, ஏ.குமாரமங்கலம் கஸ்தூா்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியினையும் நேரில் பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது மாணவா்களுக்கு புத்தகங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
ஆய்வில் பள்ளியின் சுகாதாரம், காலை உணவு, சுற்றுப்புற தூய்மை, விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். மேலும் மாணவா்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ‘மாணவா் மனசு’ என்ற புகாா் பெட்டியில் புகாா் தெரிவிக்கவும் மற்றும் குழந்தை உதவி மைய எண் 1098 க்கு தகவல் தெரிவிக்கவும், புகாா்களை ஆசிரியா்களிடம் தெரிவிப்பது குறித்தும், மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து ஆசிரியா்கள் மாணவா்களுக்கு நன்றாக கல்வி கற்க உதவி புரிய வேண்டும். மாணவா்களின் பிரச்சனைகளை அறிந்து அவா்கள் சிறப்பாக கல்வி கற்க உறுதுணை புரிய வேண்டும்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 979 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு அரசின் விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்யா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தாா்.இந்த ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகணேஷ், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.