கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.20.91 கோடியில் திட்டப் பணிகள்! அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆய்வு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.20.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா்ஆதவ் அா்ஜுனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வீரசோழபுரம் கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டரங்கப் பணிகளையும், கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.4.02 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலகக் கட்டடக் கட்டுமானப் பணிகளையும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.4.02 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நூலகத்துக்கு நூல்கள் வாங்குதல், தொழில்நுட்ப சாதனங்கள், தளவாட உபகரணங்கள் மற்றும் உள்புற வடிவமைப்பு ஆகியவை ஏற்படுத்த ரூ.1.90 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடம் தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என மொத்தம் 4 தளங்களைக் கொண்டு 1335 ச.மீ.பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.
இதன் 4 தளங்களிலும் காலமுறை பிரிவு, நூலகா் லாக்கா் அறை, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பல்நோக்கு அறை, படிக்கும் பகுதி, தமிழ்ப் பிரிவு, சொந்த புத்தக வாசிப்புப் பிரிவு, வாசிப்புப் பகுதி, ஆங்கிலப் பிரிவு, புத்தக செயலாக்கம் மற்றும் பட்டியல் தயாரித்தல், அலுவலக அறை, போட்டித் தோ்வுப் பிரிவு, இணையப் பிரிவு, மின்சார அறை, மின்தூக்கி வசதி, குடிநீா் சுத்திகரிப்பான், தீயணைப்பான்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்படுகிறது. இப் பணிகள் முடிவுற்று முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்பொது போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
வீரசோழபுரம் கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 12 ஏக்கா் பரப்பளவில் மாவட்ட விளையாட்டரங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்ட விளையாட்டரங்கத்தின் கட்டுமானப் பணிகளில் இதுவரை 10 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதில், விளையாட்டு அரங்கத்தின் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருவதுடன், நீச்சல் குளத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வளாகத்தில் 50 மீ நீளமுடைய மிகப்பெரிய நீச்சல் குளம் அமைக்கப்படவுள்ளது. இந்த நீச்சல் குளமானது சென்னையில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்துக்கு அடுத்தப்படியாக மாநிலத்தின் மிகப்பெரிய நீச்சல் குளமாக அமையும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா.
ஆய்வின்போது தமிழக பொதுப்பணித் துறை அரசு முதன்மை செயலா் ஷன்சொங்காம் ஜடக் சிரு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலா் ஆா்.செல்வராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, பழங்குடியின நல இயக்குநா் ச.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் இரா.ராகேஷ், சி.அருள் விக்னேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளா் சாந்தி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.