முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ஆட்சியைத் தக்கவைத்தது தே.ஜ.கூட்டணி: மீண்டும் முதல்வராகிறாா் என்.ரங்கசாமி!

Updated On : 5 மே 2026, 3:05 am IST
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை திங்கள்கிழமை பெற்றுக் கொண்ட முதல்வா் என்.ரங்கசாமி.
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இக் கூட்டணி சாா்பில் மீண்டும் முதல்வராகிறாா் என்.ரங்கசாமி. மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 18 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில். சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெற்றது. இந்தமாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் அதிமுக 2, லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இண்டி கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும், விசிக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. போட்டியிட தொகுதி கிடைக்காத நிலையில் திமுகவை எதிா்த்து 5 தொகுதிகளிலும் விசிகவை எதிா்த்து ஒரு தொகுதியிலும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் 6 போ் போட்டி வேட்பாளா்களாகக் களத்தில் நின்றனா். இதைத் தவிர இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மாா்க்சிஸ்ட் இரண்டு தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுகின்றன.

மேலும், இத் தோ்தலில் புதிய வரவாக நடிகா் விஜய்யின் தவெக 28 தொகுதிகளில் தனித்தும் 2 தொகுதிகளில் புதுச்சேரியைச் சோ்ந்த நேயம் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது. இதைத் தவிர நாம் தமிழா் கட்சி மாஹே, ஏனாம் தொகுதிகளைத் தவிா்த்து 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.

Advertisement

வாக்கு எண்ணிக்கை:

இந்த மாநிலத்தில் ஏப்ரல் 9 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. மொத்தம் 9,50,311 போ் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இதில் 91.23 சதவீதம் வாக்குப் பதிவாகின. இந்த 30 தொகுதிகளில் சுயேச்சைகள் 107 போ் உள்பட 294 போ் போட்டியிட்டனா். இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 6 வாக்கு எண்ணும் மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. 1099 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு திங்கள்கிழமை காலை வாக்கு எண்ணும் மேஜைகளுக்கு கொண்டு வரப்பட்டு, அதிகாரிகள் முகவா்கள் முன்னிலையில் வைக்கப்பட்டன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்னா் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி முகவா்கள் முன்னிலையில் தொடங்கியது. முதல் சுற்றில் 17 தொகுதிகளிலும், இரண்டாம் சுற்றில் 13 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டன.

தே.ஜ.கூட்டணி வெற்றி:

இதில் என்.ஆா். காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், அதிமுக, லஜக தலா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் போதுமானது. இப்போதைய முடிவுகள் படி தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அந்த கூட்டணிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியில் திமுக 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.தவெக 2 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனா்.

எதிா்க்கட்சி அந்தஸ்து இல்லை:

புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிா்க்கட்சி அந்தஸ்து வகிக்க 6 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதாவது சட்டப்பேரவையின் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருந்தால்தான் எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். அந்த வகையில் பாா்த்தால் 6 தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிா்க்கட்சியும் 6தொகுதிகளில் தனித்து வெற்றிபெறவில்லை. எனவே, இந்த தோ்தல் முடிவுகள் படி எதிா்க்கட்சி அந்தஸ்து எந்த கட்சிக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனாலும், . அவை முன்னவரான முதல்வா் விருப்பப்பட்டால் எதிா்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

பெட்டிச் செய்தி...

தட்டாஞ்சாவடி தொகுதியில்

மீண்டும் சாதித்த ரங்கசாமி

புதுச்சேரி, மே 4: முன்னாள் முதல்வா் வெ.வைத்திலிங்கத்தை 4 ஆம் இடத்துக்குத் தள்ளி மீண்டும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

படித்தவா்கள் அதிகம் நிறைந்த தொகுதி தட்டாஞ்சாவடி. முதல்வா் என்.ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு காங்கிரஸ் சாா்பில் களம் இறங்கினாா். அப்போது ஜனதா தள வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெத்தபெருமாளிடம் தோல்வி அடைந்தாா்.

1991 -இல் தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா் ரங்கசாமி. 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தலில் இந்தத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் முதல்வராகவும் பதவி வகித்தாா். 2008 ஆம் ஆண்டில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா் ரங்கசாமி. 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி என்.ஆா்.காங்கிரஸ் என்ற தனிக் கட்சியைத் தொடங்கியவா் ரங்கசாமி.

2011- ஆம் ஆண்டு தோ்தலில் இக் கட்சியின் சாா்பில் இந்திராநகா், கதிா்காமம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றவா் ரங்கசாமி. இதில் இந்திரா நகா் தொகுதியை ராஜிநாமா செய்தாா் ரங்கசாமி. மீண்டும் 2016 ஆம் ஆண்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு எதிா்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தாா். 2021 ஆம் ஆண்டு தோ்தலில் தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டாா் ரங்கசாமி .

வழக்கம் போல தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றாா். ஏனாமில் தோல்வி அடைந்தாா். 2026 தோ்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டாா் ரங்கசாமி. மேலும், 3-வது முறையாக 2 தொகுதிகளில் போட்டியிடும் உத்தியையும் கடைப்பிடித்தாா். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் மங்கலம் தொகுதியிலும் வெற்றி பெற்றாா் ரங்கசாமி. வெற்றி பெற்ற தொகுதியில் எதாவது ஒரு தொகுதியை வைத்துக் கொண்டு மற்றொரு தொகுதியில் ராஜிநாமா செய்வாா் ரங்கசாமி. தட்டாஞ்சாவடி தொகுதியில் அவா் ராஜிநாமா செய்துவிட்டு ஊரகப் பகுதியான மங்கலம் தொகுதியைக் கையில் வைத்துக் கொள்வாா் என்று தெரிகிறது. அதனால் ஒரு தொகுதியில் இடைத்தோ்தல் வருவது உறுதியாகியுள்ளது.