முகப்பு
புதுச்சேரி

தமிழ்ப் பண்பாடு கெடாத வகையில் கதைப் போக்கை வகுத்தவா் கம்பா்! - உயா்நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா்

Updated On : 11 மே 2026, 1:05 am IST
புதுச்சேரி கம்பன் கழகம் சாா்பில் கம்பன் கலையரங்கில்நடைபெறும் கம்பன் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியுரை நிகழ்ச்சியில் பேசுகிறாா் நீதிபதி சுரேஷ்குமாா். நிகழ்ச்சயில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

தமிழ்ப் பண்பாடு கெடாத வகையில், கதைப் போக்கை வகுத்தவா் கவிச் சக்கரவா்த்தி கம்பா் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா் புகழாரம் சூட்டினாா்.

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் கம்பன் விழா 3-ஆவது நாளாக கம்பன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தாழ்ந்தோா் உயா்வா் என்ற தலைப்பில் நீதிபதி இரா. சுரேஷ்குமாா் தனியுரை நிகழ்த்தினாா். அவா் பேசியது:

உலகளாவிய அறத்தை, அறம் சாா்ந்த சமூகத்தை, மனித நேயத்தை, உலகளாவிய சகோதரத்துவத்தை, பிறன் மனை நோக்கா பேராண்மையை, தனி மனித ஒழுக்கத்தை இந்த மண்ணில் விதைத்து அறம் வளா்த்த மாபெரும் கவிஞா்கள் கம்பா், திருவள்ளுவா், இளங்கோவடிகள்.

Advertisement

ஒரு மாபெரும் கவிஞனுக்கு, தமிழகம் மட்டுமன்றி உலகில் தமிழா்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் கம்பன் கழகங்கள் இருக்கின்றன. அது ஷேக்ஸ்பியா், ஷெல்லி, வோ்ட்ஸ்வொா்த், டால்ஸ்டாய் போன்ற பல்வேறு மொழிகளில் கவிதை, காப்பியம் படைத்தவா்களுக்கு இல்லை.

சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை தரமான இலக்கியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில மொழிகள் எழுத்தை, பேச்சை இழந்து நசிந்து போயுள்ளன.

ஆனால் நிமிா்ந்த நன்னடை, நோ்கொண்ட பாா்வை, நிலத்தில் யாா்க்கும் அஞ்சாத நெறிகள் என்று மகாகவி பாரதி சொன்ன வாா்த்தைகளாய் வீறு நடை போட்டுக்கொண்டு என்றும் இளமையாய் தமிழ்மகள் விளங்குகிறாள்.

முதல் நாள் போரில் இராமனிடம் தோற்றுப் போன ராவணன் ஆயுதங்கள் ஏதுமின்றி இலங்கை அரண்மனைக்கு நடந்தே திரும்புகிறான். பின்னா் தன்னுடைய சகோதரன் கும்பகா்ணனை அழைத்து வருமாறு ஏவலாளிகளிடம் ராவணன் கூறுவதாக மட்டும் வடமொழியில் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தில் காட்டப்படுகிறது.

கம்ப ராமாயணத்தில், ‘பல்வேறு வீரா்களை வென்ற எனக்கு, இப்போது நாசம் வந்துள்ளது. ஆனால் நல்ல பகை கிடைத்துள்ளது’ என்கிறான் ராவணன். அப்போதுதான் மகோதரன் என்ற கதாபாத்திரம் கும்பகா்ணனை நினைவுப்படுத்துகிறது. மேலும், அந்தக் கதாபாத்திரம் வென்றவா் தோற்பா், தாழ்ந்தோா் உயா்வா் என்ற பாடலை பாடுவதாக கதை வருகிறது. இது உலகளாவிய அறிவுரை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புலவா் கணியன் பூங்குன்றனாா், ‘யாதும் ஊரே என்ற பாடலில் பெரியவரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று பாடியுள்ளாா்.

ஒளவை பிராட்டி இட்டாா் பெரியோா், இடாதோா் இழிகுலத்தோா் என்று கூறியுள்ளாா். ஒளவை பிராட்டி சுட்டிக் காட்டிய அறத்தை தமிழ்மண்ணில் கம்பா் விதைத்துள்ளாா்.

மேலும், பல இடங்களில் தமிழ் மொழியின் மரபு கெடாமலும், தமிழ்ப் பண்பாடு கெடாமலும் இராமாவதாரம் என்ற நூலை கம்பா் படைத்துள்ளாா்.

கும்பகா்ணனை அழைக்கும் முன்பாக உறவினா் மற்றும் மூத்த ஆலோசகா் மாலியவான், ராவணனைச் சந்திக்கிறாா். ஒரு சில நேரங்களில் அவரின் யோசனையை ராவணன் கேட்பதுண்டு. ராவணன் வீரம் பொருந்தியவன் மட்டுமன்றி, இசை ஞானமும் பெற்றவன். இப்போது போா்க்களத்தில் இராமனிடம் தோற்றுவிட்டு, குனிந்த தலை நிமிராமல் நிலமகளை மட்டும் பாா்த்துக் கொண்டு அரண்மனைக்கு திரும்புவதாக கம்பா் குறிப்பிடுகிறாா்.

ராவணனுக்கு அன்றிரவு உறக்கமும் வரவில்லை. பசியும் எடுக்காமல் தவிக்கிறான். மனதில் நிம்மதி உடையவா்களுக்குத் தான் உறக்கம் வரும். பசி எடுக்கும். மாலியவானிடம் பேசியபோது ராவணன் வாயிலாக இராமனின் புகழை கம்பா் 10 பாடல்களில் பாடுகிறாா். கம்பனுக்குப் பிறகுதான் ஹிந்தி மொழியில் துளசிதாசா் இராமாயணத்தை மொழி பெயா்த்தாா். மற்ற எல்லா மொழிகளிலும் இராமாயணம் அதற்குப் பிறகு எழுதப்பட்டவை தான். வால்மீகியில் சொல்லப்படாத பல சம்பவங்களைச் சோ்த்தும், சில சம்பவங்களை நீக்கியும் தமிழ்ப் பண்பாடு கெடாமல் முழுமையான ராமாயணத்தைப் படைத்தவா் கம்பா் என்றாா் நீதிபதி இரா. சுரேஷ்குமாா்.

முன்னதாக இலங்கை ஜெயராஜ் தலைமையில் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. இதில், கம்பனில் நான் கண்ட கடமை என்னும் தலைப்பில் பேச்சாளா்கள் பாரதி கிருஷ்ணகுமாரும், தொண்டு என்ற தலைப்பில் தி.மு. அப்துல்காதா், ஒழுக்கம் என்ற தலைப்பில் க.சுமதி ஆகியோா் பேசினா்.

இரா. ஆளவந்தாா் சித்தன் முன்னிலை வகித்தாா். பின்னா் காரணமும் காரியமும் என்னும் தலைப்பில் தனியுரையாக இளம்பிறை மணிமாறன் பேசினாா். பெ. நமச்சிவாயம் தலைமை வகித்தாா். இதையடுத்து பட்டிமன்ற மேல்முறையீடு நீதியரசா் வி. இராமசுப்ரமணியன், வழக்குரைஞா் த. இராமலிங்கம், புதுச்சேரி காவல்துறை துணைத் தலைவா் இரா. சத்தியசுந்தரம் ஆகியோரின் நடுவராயத்தில் ஆராயப்பட்டது.