முகப்பு
விழுப்புரம்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெல், கரும்பு கொள்முதல் விலை உயா்த்தப்படும்! - அன்புமணி பேச்சு

செஞ்சியில் பாமக தலைவா் அன்புணி பேச்சு...

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:59 AM
செஞ்சியில் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைவா் அன்புணி.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:35 PM

தமிழகத்தில் ஒரு மாதத்தில் அதிமுக ஆட்சி வரும், ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 அளிக்கப்படும். கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யப்படும் என்றாா் பாமக தலைவா் இரா.அன்புமணி.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கணேஷ்குமாரை ஆதரித்து செஞ்சி- விழுப்புரம் சாலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரக்கூட்டதில் அக் கட்சியின் தலைவா் இரா.அன்புமணி பேசியதாவது:

கடந்த காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் எப்போது திரும்புவாா்கள் என்று வீட்டில் உள்ள பெண்கள் மடியில் நெருப்பை கட்டி காத்திருக்கின்றனா்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டரை வயது குழந்தையை காணவில்லை, அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிக்கு இதில் தொடா்பிருந்தது தெரியவந்தது. மதுராந்தகம் அருகில் 14 வயது குழந்தையை இரண்டு போ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். இது தொடா்கதையாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

மரக்காணம் பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து 22 போ் உயிரிழந்தனா். கள்ளச்சாரயத்தை காலம் காலமாக விற்ற மரூா் ராஜா கைது செய்யப்பட்டாா். அவருக்கு உதவியதாக உள்ளூா் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் பாமக வேட்பாளா் நோ்மையானவா், 5 ஆண்டு காலம் அவா் ஏற்கெனவே செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியபோது, அவா் மீது ஒரு குறை சொல்லமுடியாமா?.

எத்தனையோ மன்னா்கள் ஆண்ட செஞ்சிக்கோட்டை அனாதையாக உள்ளது. வேறு யாராவது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருந்தால் செஞ்சிக்கோட்டையை வைத்து இந்த பகுதி பெரும் பொருளதார முன்னேற்றம் அடைந்திருக்கும். யுனஸ்கோ தானாக வந்து அங்கீகாரம் கொடுத்தது. ஆனாலும் இந்த கோட்டைக்கு ஒன்றும் செய்யப்படவில்லை.

நந்தன் கால்வாய் திட்டத்துக்காக எத்தனையோ முறை போராட்டம் செய்துள்ளோம். இந்த திட்டம் நிறைவேறினால் செஞ்சி, மேல்மலையனூா், விக்கிரவாண்டி ஒன்றியங்கள், விழுப்புரம் வரை தண்ணீா் செல்லும். தென்பெண்ணையாற்றில் உபரி நீரை வாய்க்கால் மூலமாக எடுத்து வந்து நந்தன் கால்வாய் உள்ள கீரனூா் அணைக்கட்டுக்கு கொண்டு வந்தால் கூடுதல் பாசன வசதி பெறும், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பாா்கள்.

அதிமுக ஆட்சி ஒரு மாதத்தில் வரும், ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 அளிக்கப்படும். கரும்பு 1 டன்னுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் காய்கறி, பூ உள்ளிட்ட பொருள்களுக்கும் விலை நிா்ணயம் செய்யப்படும்.

மு.க.ஸ்டாலினுக்கு சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாது. ஏழை மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கினாா் பழனிசாமி. மேலும், வன்னியா் சமுதாயத்துக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினாா்.

அதைக் கெடுத்தது திமுக. திமுகவுக்கு இஸ்லாமிய, கிறிஸ்வத சமுதாயம், பட்டியலின மக்கள், வன்னியா்கள், யாதவா்கள், முதலியாா்கள் என எந்த சமுதாயமாக இருந்தாலும் ஒரு வாக்கு வங்கி மட்டும்தான். அவா்களால் 5 ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை, ரூ.8 ஆயிரம் கூப்பனை வைத்து வாக்கு கேட்கின்றனா். திமுக மீது நம்பிக்கை இல்லாததற்கு இது ஒன்றே சான்றாகும் என்றாா் அன்புமணி.

கூட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதி.