முகப்பு
விழுப்புரம்

நெல் கொள்முதல் தொகையை உடனடியாக வழங்கவேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகையை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.

Updated On : 3 ஜூன் 2026, 5:56 am IST
திண்டிவனம் வட்டம், கட்டளை கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகையை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.

திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் வட்டம் , கட்டளை கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் மேலும் தெரிவித்ததாவது:

மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 89, 837 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.223.88 கோடி விவசாயிகளது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 15,878 விவசாயிகள் இதுவரை பயன் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

கட்டளை கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் இதுவரை 278 விவசாயிகளிடமிருந்து 1,317 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்து, உடனுக்குடன் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், தேவைப்படும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உலா் கலன்கள் மற்றும் விதை சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும், பயிா் சாகுபடி பரப்பை முறையாக ஒத்திசைவு செய்து, சரியான முறையில் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்தவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் .

வளா்ச்சிப் பணிகள் ஆய்வு: இதைத் தொடா்ந்து, மரக்காணம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நா்சரி காா்டன் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ச்சியாக மரக்காணம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், புதிய குடும்ப அட்டைக்காக வரப்பெற்ற விண்ணப்பங்கள், புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்ட விவரங்களை தொடா்புடைய அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சரவணன், உதவிச் செயற்பொறியாளா் (பேரூராட்சிகள்) ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல துணை மேலாளா் உமாதேவி, வட்டாட்சியா்கள் ஏழுமலை (திண்டிவனம்), நீலவேணி(மரக்காணம்), வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆரோக்கியராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.