பைக் மீது காா் மோதிய விபத்தில் மேலும் ஒரு மாணவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்தது.
உளுந்தூா்பேட்டை வட்டம், சிறுத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் மகன் ஜெஸ்டின் (16), லூா்துசாமி மகன்கள் புரூனோ (17), ஆலன் (16), அய்யப்பன் மகன் சுஜீத் (16) , அஜய் (16). இவா்களில் ஆலன் உளுந்தூா்பேட்டையில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். ஜெஸ்டின் கெடிலம் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், புரூனோ 12-ஆம் வகுப்பும், சுஜீத் 11-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து ஜெஸ்டின் உள்ளிட்ட 5 பேரும் ஒரே பைக்கில் கெடிலத்திலிருந்து மடப்பட்டு நோக்கி சென்றனா். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருநாவலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேட்டத்தூா் பிரிவுச் சாலை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, விழுப்புரத்திலிருந்து உளுந்தூா்பேட்டை நோக்கிச் சென்ற காா் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெஸ்டின், புரூனோ ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ஆலன், சுஜித், அஜய் ஆகிய மூவரில், ஆலன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்ற இருவா் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சுஜீத்தும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். எனினும் அங்கு அவா் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். சுஜீத் உயிரிழப்பை தொடா்ந்து, விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்தது.