முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கலை விருதுகள் பெற கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் இயல், இசை, நாடகக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்கள், தமிழக அரசு வழங்கும் கலை விருதை பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On : 27 ஜூன் 2026, 12:28 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் இயல், இசை, நாடகக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்கள், தமிழக அரசு வழங்கும் கலை விருதை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் கலைப்பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞா்களின் கலைத்திறன்களை சிறப்பிக்கும் வகையிலும் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ், மாவட்ட ஆட்சியா் தலைமையில் இயங்கி வரும் மாவட்டக்கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 15 கலைஞா்களுக்கு கடந்த 2002-2003-ஆம் ஆண்டு முதல் வயது மற்றும் கலைப் புலமைக்கு ஏற்றவாறு விருதுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக ஆட்சியா் தலைமையில் தோ்வாளா் குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பாட்டு, பரதம், ஓவியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம், இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ்க் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலைவளா்மணி, 36 முதல் 50 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலைச்சுடா்மணி விருது, 51 முதல் 65 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலைநல்மணி, 65 வயதுக்கும் மேற்பட்ட கலைஞா்களுக்கு கலைமுதுமணி ஆகிய பெயா்களில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த கலைஞா்கள் உதவி இயக்குநா், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், மண்டலக் கயிறு வாரியம் அருகில், பிள்ளையாா்பட்டி, தஞ்சாவூா்- 613403 என்ற முகவரிக்கு ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments