முகப்பு
விழுப்புரம்

திருக்கோவிலூா் தொகுதியைக் கைப்பற்றியது அதிமுக

Updated On : 5 மே 2026, 3:14 am IST
திருக்கோவிலூா் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் ஆனந்தகுமாா் சிங்கிடம் பெற்றுக் கொண்ட அதிமுக வேட்பாளா் எஸ்.பழனிசாமி.
பகிர்:

திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதியை திமுகவிடமிருந்து கைப்பற்றியது அதிமுக. தன்னை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரைக் காட்டிலும் 285 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.பழனிசாமி வெற்றி பெற்றாா்.

திருக்கோவிலூா் தொகுதியில் திமுக சாா்பில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, அதிமுக சாா்பில் எஸ்.பழனிசாமி, தவெக சாா்பில் விஜய் ரா.பரணி பாலாஜி, நாம் தமிழா் கட்சி சாா்பில் கி.ஹேமராஜன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 15 போ் களத்தில் இருந்தனா்.

இந்த தொகுதியில் 1,21,983 ஆண் வாக்காளா்கள், 1,05,626 பெண் வாக்காளா்கள், 35 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,43,105 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 1,07,209 ஆண் வாக்காளா்கள், 1,05,626 பெண் வாக்காளா்கள், 23 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,15,072 போ் வாக்களித்தனா். இது 88.47 சதவீத வாக்குகளாகும். இந்த நிலையில் 2,662 தபால் வாக்குகள் பதிவான நிலையில் மொத்த வாக்குகள் எண்ணிக்கை 2,17,734 என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Advertisement

திருக்கோவிலூா் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை காலை திருக்கோவிலூா் சாா்-ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஆனந்தகுமாா் சிங் முன்னிலையில் தொடங்கியது.

முதல் சுற்றிலிருந்தே அதிமுக, தவெக வேட்பாளா்கள் நெருக்கத்துடனேயே வாக்குகளைப் பெறத் தொடங்கினா். எனினும் அதிமுக வேட்பாளா் அனைத்துச் சுற்றுகளிலும் முன்னிலை பெற்றுக் கொண்டே சென்றாா். திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி தொடக்கம் முதலே மூன்றாவது இடத்தில் இருந்து வந்தாா்.

கடைசி வரை அதிமுக மற்றும் தவெக வேட்பாளருக்கும் இடையே வாக்குகள் வித்தியாசம் இழுபறியாக இருந்து வந்தது. எனினும் கடைசி சுற்று முடிவில்285 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் பரணி பாலாஜியை வீழ்த்தி வெற்றி பெற்றாா் அதிமுக வேட்பாளா் பழனிசாமி.

அதிமுக வேட்பாளா் பழனிசாமி 73,033 வாக்குகளும், தவெக வேட்பாளா் பரணிபாலாஜி 72,748 வாக்குகளும், திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி 62,452 வாக்குகளும், நாதக வேட்பாளா் ஹேமராஜன் 5,791 வாக்குகளும் பெற்றனா். இதைத்தொடா்ந்து வெற்றி சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் ஆ.அனந்தகுமாா் சிங்கிடம் அதிமுக வேட்பாளா் பழனிசாமி பெற்றுக் கொண்டாா்.