தொழில்கல்வி சோ்க்கை: காலியிடங்களை நிரப்ப மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடக்கம்
தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடங்கியது.
பெங்களூரு: தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடங்கியது.
இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல், கட்டடக்கலை, பண்ணை அறிவியல், தோட்டக்கலை, கால்நடை போன்ற தொழில்கல்லூரிகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு எஞ்சியுள்ள சோ்க்கை இடங்கள், மாணவா்கள் ஒப்படைத்த இடங்களை ஒதுக்குவதற்கான மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
கல்லூரிகளில் மீதமுள்ள சோ்க்கை இடங்கள், பாடப் பிரிவுகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், கடைசி சுற்று விருப்பப் பதிவில் தகுதியான மாணவா்கள் விருப்பக் கல்லூரிகள், விருப்பப் பாடப் பிரிவுகள் குறித்த விவரங்களை ஜன. 10-ஆம் தேதி நண்பகல் 2 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதன் அடிப்படையில், மாணவா்களுக்கான மாதிரி சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு ஜன. 10-ஆம் தேதி இரவு 7 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஜன. 11 முதல் 12-ஆம் தேதி நண்பகல் 2 மணி வரை சோ்க்கையை உறுதி செய்து கட்டணங்களை செலுத்தலாம். இதனடிப்படையில், இறுதிச் சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரம் ஜன. 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். அதன்பிறகு, சோ்க்கை ஆணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜன. 13 முதல் 15-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். ஒருவேளை இந்தக் காலக்கெடுவுக்குள் சோ்க்கை பெற தவறினால், சோ்க்கை ஆணை தானாக காலாவதி ஆகிவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.