ரூபாய் மதிப்பில் சற்று உயர்வு
வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து 59.27 ஆக இருந்தது.
வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து 59.27 ஆக இருந்தது.
வியாழக்கிழமை செலாவணி சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு ஏறத்தாழ 60 ரூபாய் தர வேண்டியிருந்தது. இந்த வரலாறு காணாத வீழ்ச்சியை சரி செய்ய வெள்ளிக்கிழமை இந்திய அரசுத் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் சார்பில் அதிக அளவில் டாலர்களை விற்றதாக கூறப்படுகிறது. இதனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 30 காசுகள் அதிகரித்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது, ரூபாயின் மதிப்பு 59.74 என்ற அளவில் இருந்தது. வியாழக்கிழமையின் இறுதி நிலை 59.57 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத் தகுந்தது. அமெரிக்க பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அடுத்த ஆண்டில் குறைத்துக் கொள்ள அந்நாட்டு மத்திய வங்கி முடிவெடுத்துள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து உலகெங்கும் அன்னிய செலாவணி சந்தைகள் மற்றும் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்திய செலாவணி சந்தையிலும் பங்குச் சந்தையிலும் வெளிப்பட்டது.
Advertisement
ப.சிதம்பரம் நம்பிக்கை:ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவைக் கண்டு பதற்றம் அடையத் தேவையில்லை, ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.புது தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: செலாவணி சந்தையை அரசு உன்னிப்பாக நோக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் எந்த விதமான நடவடிக்கைகளை எல்லாம் எடுக்க வேண்டுமோ அவற்றை ரிசர்வ் வங்கி எடுக்கும். நம்மிடம் மிகச் சிறந்த பொருளாதார ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
செலாவணி சந்தை மற்றும் பங்குச் சந்தையைப் பொருத்த வரையிலும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், பதற்றமோ பீதியோ அடையாதீர்கள் என்பதுதான். இந்தியாவில் செலாவணி சந்தையிலும் பங்குச் சந்தையிலும் காணப்பட்ட இந்த வீழ்ச்சி உலகின் பிற சந்தைகளில் இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்று அவர் கூறினார்.