முகப்பு
சென்னை

மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்

வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 28 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து பெற்றோர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 12 ஜூன் 2013, 2:48 am IST
பகிர்:

வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 28 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து பெற்றோர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேப்பேரியில் உள்ள டவுட்டன் ஆண்கள், பெண்கள் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 28 மாணவ, மாணவியரின் சான்றிதழ்களை, அந்தப் பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தபாலில் அனுப்பிவைத்தது.

பள்ளி வளாகத்தில் பெற்றோர் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி மாற்றுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

பள்ளி நிர்வாகம் கேட்டவாறு அதிகக் கட்டணம் செலுத்தாததால் மாற்றுச்சான்றிதழ்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். கல்வியாண்டு தொடங்கும்போது மாற்றுச்சான்றிதழ்கள் வழங்கினால் அந்தக் குழந்தைகள் எங்கு சேர்க்க முடியும் எனவும் பெற்றோர் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலும் பெற்றோர் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் இந்த மாணவர்களை மீண்டும் சேர்க்க உத்தரவிட்டார். ஆனால், அந்த மாணவர்களை மீண்டும் சேர்க்க மறுத்து பள்ளி நிர்வாகம் பதிலளித்துள்ளது.

இதையடுத்து, இந்த மாணவர்களைச் சேர்க்கக் கோரியும், பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நூற்றுக்கணக்கான பெற்றோர் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளி இயக்குநர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை முழுவதும் உள்ள 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர் சங்கங்கள் இதில் பங்கேற்றன.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் (பொறுப்பு) ஆர்.பிச்சை, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் மனுவும் அளித்தனர்.

இதுதொடர்பாக, மூன்று நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் உறுதியளித்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்னையில், மாணவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.