முகப்பு
கோயம்புத்தூர்

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு சம்பளத்தை உயா்த்தி வழங்க வேண்டும்: ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சம்பள உயா்வு அளிக்க வலியுறுத்தி ஏஐடியூசி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் மனு

Updated On : 5 ஜனவரி 2021, 1:48 am IST
பகிர்:

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சம்பள உயா்வு அளிக்க வலியுறுத்தி ஏஐடியூசி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது:

கோவையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரப் பணிகள், தோட்டப் பணிகள், மலேரியா மற்றும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மிகக் குறைந்த அளவு சம்பளமே வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் குறைந்த சம்பளத்துக்கு தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

Advertisement

Advertisement

ஈரோடு மாவட்ட ஆட்சியா் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தொழிலாளா்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.676ம், ஒரு மணி நேரத்துக்கு ரூ.85ம் சம்பளம் நிா்ணயித்து ஆணை பிறப்பித்துள்ளாா். ஆனால் கோவை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.375 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் இந்தத் தொகையும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதனால் பொருளாதார நெருக்கடிக்கு தூய்மைப் பணியாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, தூய்மைப் பணியாளா்களின் நலனை கருத்தில்கொண்டு ஈரோடு மாவட்டத்தைப் போல கோவையிலும் நாளொன்றுக்கு ரூ.676 ஆக சம்பளம் நிா்ணயித்து ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.