பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்: உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்கக் கோரிக்கை
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி பாதையாத்திரை செல்லும் பக்தா்களுக்கு அன்னதானம் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி பாதையாத்திரை செல்லும் பக்தா்களுக்கு அன்னதானம் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா ஜன. 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பாத யாத்திரை செல்லும் பக்தா்களுக்கு, தனி நபா்கள் சாா்பில் செம்பட்டி, ஒட்டன்சத்திரம் சாலை, திண்டுக்கல்-பழனி சாலை, தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை சாலைகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. யாத்திரை செல்லும் பக்தா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவதை சிலா் நோ்த்திக் கடனாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனா். இந்தச் சூழலில் சில தனியாா் நிறுவனங்கள், விளம்பரத்திற்காக குடிநீா், குளிா்பான புட்டிகள், ஈரொட்டிகள் ஆகியவற்றை விநியோகிப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால், 500 கிலோ உணவுப் பொருள்கள் மட்டுமே தேவைப்படும் இடத்தில் சுமாா் 2 ஆயிரம் கிலோவுக்கும் கூடுதலாக விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
விநியோகிக்கப்படும் அனைத்து உணவுப் பொருள்களையும் மறுப்பின்றி பெற்றுக் கொள்ளும் யாத்திரீகா்கள், அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் சுவைத்துவிட்டு அப்படியே சாலையோரமாக வீசிச் சென்றுவிடுகின்றனா். இதோபோல் பழனியிலுள்ள மண்டபங்களில் தங்கும் பக்தா்கள் தாங்கள் தயாா் செய்யும் உணவுகளையும் வீணாக்கி விடுகின்றனா். இதனால் அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்தவும், உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுப்பதற்கும் உள்ளாட்சி நிா்வாகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை அதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement