மனதின் குரல் கேட்கவில்லையா?
உயர் மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்குவதாக பிரதமர் மோடி அறிவித்த நாள் (நவம்பர் 8) முதலாகவே,
உயர் மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்குவதாக பிரதமர் மோடி அறிவித்த நாள் (நவம்பர் 8) முதலாகவே, அவரது அரசியல் எதிரிகள் அவரைக் கடுமையாக வசைபாடி வருகிறார்கள். எந்தத் திட்டமிடலும் இன்றி எடுக்கப்பட்ட, அவசர முடிவு என்று அவர்கள் குறை கூறுகிறார்கள்.
இதனால் லட்சக்கணக்கான இந்தியர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறு தொழில்கள் முடங்கியுள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துக்கு நீண்ட காலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
நவம்பர் 8-க்கு முன்னர் பிரதமர் மோடி பொது நிகழ்வுகளில் தெரிவித்த கருத்துகளைப் புரிந்தவர்களும், 2004- 2014 காலகட்டத்தில் மன்மோகன் சிங் ஆட்சியின்போது கருப்புப் பணம் பெருகியதை அறிந்தவர்களும் இவ்வாறு விமர்சிக்க மாட்டார்கள்.
இதில் முதல் கேள்வி, மோடி மேற்கொண்டுள்ள உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை அவசரகதியிலான முட்டாள்தனமான செயலா, அல்லது மிகவும் திட்டமிட்ட ராஜதந்திர நடவடிக்கையா என்பது. நவம்பர் 8-க்கு முந்தைய மோடியின் சில பேச்சுகளைக் கேட்டவர்களுக்கு, மின் பணப்பை, மின்னணு வங்கிப் பரிமாற்றம் போன்ற விஷயங்கள் குறித்து அவர் பல முறை கூறியிருப்பது தெரியவரும்.
அதிலும் குறிப்பாக, கடந்த மே 22-ஆம் தேதி அகில இந்திய வானொலியில் "மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதைக் கேட்டவர்களுக்கு, அவரது நவம்பர் 8 அறிவிப்பு அதிர்ச்சியைத் தந்திருக்காது. அந்த நிகழ்ச்சியை, தனது எதிர்காலத் திட்டத்தைக் கோடிட்டுக் காட்டுவதற்கான சரியான வாய்ப்பாக பிரதமர் பயன்படுத்தியிருக்கிறார்.
அதுவும் சுமார் 5 மாதங்கள் முன்னதாகவே, நாட்டு மக்கள் ரொக்கப் பணப் பரிமாற்றத்திலிருந்து பணம் குறைந்த பொருளாதாரப் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு மாற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி இருக்கிறார்.
அதில் அவர் கூறினார்: "நாம் நமது சில பழைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதிலுமே ரொக்கப் பணப் பயன்பாடு குறைந்த சமுதாயமாக, மின்னணு தொழில்நுட்பம் வாயிலாக மாறி வருகிறது. அதில்தான் நமது சேமிப்பு களவாடப்பட்டு விடுமோ என்ற கேள்வியே எழுவதில்லை...'
"பிரதமரின் ஜன்தன் திட்டம் அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் ரூபே வங்கி அட்டையும் கிடைத்திருக்கிறது. அதைக் கடன் அட்டையாகவும், பற்று அட்டையாகவும் பயன்படுத்தலாம். தவிர, அந்த அட்டைகளைச் செருகி பணம் செலுத்துவதற்கான பாயின்ட் ஆஃப் சேல் (பி.ஓ.எஸ்.) கருவிகளும் புழக்கத்தில் வந்துவிட்டன...'
"தற்போது செல்லிடப்பேசியிலேயே வங்கிப் பணப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இறுதியாக அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை பெரும்பாலும் அளிக்கப்பட்டு விட்டது. தவிர, அனைவரிடமும் செல்லிடப்பேசி இருப்பது மிக இயல்பாகிவிட்டது.
எனவேதான் ஜன்தன், ஆதார், செல்லிடப்பேசிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை (ஜாம்) மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவற்றின் மூலமாக, ரொக்கப் பணப் பயன்பாடு குறையும் நிலையை நோக்கி நாம் செல்ல முடியும்'.
-இவ்வாறாக பல மாதங்களுக்கு முன்னதாகவே, பின்னாளில் தான் மேற்கொள்ள உள்ள சீர்திருத்தத்துக்கு ஆதரவாக மக்களின் மனநிலையைத் திருப்ப பிரதமர் முயன்றுள்ளார். அதில் அவர் தீர்மானமாகவே கூறுகிறார்:
"இந்த மின்னணு பணப் பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்த நாம் பழகிவிட்டால், நமக்கு ரொக்கப் பணம் தேவைப்படாது. வர்த்தகம் ரொக்கமில்லாமலேயே தன்னியல்பாக நடைபெறும். அதன்மூலமாக சட்ட விரோதமான பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும். நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் கருப்புப் பணத்தின் மதிப்பும் குறையும்...'
"ஆகவே எனதருமை நாட்டு மக்களே, தற்போதேனும் நாம் இதைத் துவக்குவோம். நாம் இதனைத் துவக்கிவிட்டால், அதன் பலன்கள் நமக்குக் கிடைக்கத் துவங்கும்'.
இவ்வாறு பேசிய பிரதமர், புதிய நடைமுறைக்கு மாற மக்கள் அஞ்சக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். 20 ஆண்டுகளுக்கு முன் செல்லிடப்பேசிகளை நாம் பயன்படுத்துவோம் என்று கற்பனைகூட செய்திருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"தற்போதோ நம்மால் செல்லிடப்பேசி இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாது. ரொக்கப் பணமற்ற பரிவர்த்தனை என்பதும் அப்படித்தான். அது எவ்வளவு விரைவாக நிகழுமோ அவ்வளவு நல்லது' என்றார் மோடி.
இவ்வாறு எந்தப் பிரதமராவது, கருப்புப் பணத்தின் மீது எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ள அதிரடி நடவடிக்கையை இத்தனை வெளிப்படையாக முன்கூட்டியே கூறியிருக்கிறாரா? கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த ரொக்கப் பணமற்ற பரிவர்த்தனையே பொருத்தமானது என்று மோடி கூறியிருப்பது ஐந்து மாதங்களுக்கு முன்னல்லவா?
அடுத்ததாக, இந்த ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையே தேவையற்றது என்றும், நாட்டுப் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல் என்றும் சிலர் பிரதமர் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு சிறந்த பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான எஸ். குருமூர்த்தி தெளிவாக பதில் அளித்துள்ளார்.
"முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் மோசமான ஆட்சியில் நிகழ்ந்த கட்டுப்பாடற்ற பொருளாதார மேலாண்மை காரணமாக ஏற்பட்டுள்ள அபாயமான சிக்கல்களைக் களையவே, தற்போதைய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கசப்பு மருந்து அளிப்பது போன்ற இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்' என்று அவர் கூறுகிறார்.
தில்லியில் விவேகானந்தா சர்வதேச மையத்தில் அண்மையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தான் சமர்ப்பித்த தரவுகளிலிருந்து மன்மோகன் சிங் ஆட்சி எவ்வாறு தோல்வியுற்றது என்பதை குருமூர்த்தி வெளிப்படுத்தியுள்ளார். அவரது முக்கியமான வாதங்கள் இதோ...
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 2004- 2014 காலகட்டத்தில் அதீதமாக வளர்ச்சி அடைந்தது. ஆனால், அதனால் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. மாறாக, சொத்துகள் பெருக்கத்தால் ஏற்பட்ட பணவீக்கம்தான் ஏற்பட்டது. மனை வணிகம், தங்க நகை வர்த்தகம் ஆகியவை மட்டுமே ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி கண்டன. அதுவே ஜி.டி.பி. உயர்ந்ததாக ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கியது.
அதனால்தான் ஜி.டி.பி. 8.4 சதவீதம் ஆண்டு வளர்ச்சி கண்டபோதும்,
அதனால் 27 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாயின. தவிர, நாட்டில் பதுங்கிய கருப்புப் பணத்தின் மதிப்பு பெருத்து, முறையற்ற சொத்துக் குவிப்பு அதிகரித்தது.
கணக்கில் வராத அத்தகைய பொருளாதாரத்தால் மக்களுக்குப் பயனில்லை. அதை தற்போதைய ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
இதற்கு முன்னிருந்த பணப் பதுக்கல் மற்றும் சொத்துக் குவிப்புக்கு மிகச் சரியான சான்று, அரசு நடவடிக்கைக்கு முன்னர் மக்களிடமிருந்த பெருமளவிலான உயர் மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கைதான்.
இந்த உயர் மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ரொக்கத்தில் 24 சதவீதமாக 2004-இல் இருந்தது. அதுவே 2010-இல் 79 சதவீதமாக உயர்ந்தது.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்த ரொக்கப் பணத்தில் ரூ. 500, ரூ. 1000 உயர் மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை 87 சதவீதமாகும். 2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் உயர்மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் சராசரி அளவு 51- 63 சதவீதமாக இருந்தது.
தவிர, அச்சிடப்படும் ரூ. 1000 நோட்டுகளில் மூன்றில் ஒரு பங்கும், ரூ. 500 நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கும் திரும்ப வங்கிக்கு வருவதில்லை என்று ரிசர்வ் வங்கி அளித்த தகவல், நமது பொருளாதாரம் எங்கே போய்க் கொண்டிருந்தது என்பதற்கான அபாய அறிகுறி.
கண்காணிப்புக்கு உள்படுத்தப்படாத அந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள், வங்கிகளுக்கு வெளியே கணக்கில் வராத ரொக்கமாக - கருப்புப் பணமாக- புழங்கிக் கொண்டிருந்தன. அவை நிலம், தங்கத்தின் விற்பனை அதிகரிப்பால், அவற்றின் விலையை கடுமையாக உயர்த்தின.
அதனால்தான் சொத்துகளின் வீக்கத்தால் ஏற்பட்ட ஜிடிபி உயர்வால் வேலைவாய்ப்பு பெருகவில்லை. உண்மையில் அது போலித்தனமான வளர்ச்சி. கண்காணிப்புக்கு உள்படாத உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளின் மோசமான விளைவு அது.
-இவை அனைத்தும் பொருளாதார நிபுணர் எஸ்.குருமூர்த்தியின் கருத்துகள். அவர் தில்லியில் உரையாற்றி பல நாள்கள் கடந்த பின்னரும், அவரது உரையில் கேட்ட முக்கியமான கேள்விக்கு யாரும் பதில் அளிக்கவில்லை.
2004- 2014 காலகட்டத்தில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மிக அதிக அளவில் அச்சிட்டது ஏன்? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் கருப்புப் பணம் எங்கே ஒளிந்திருந்தது என்ற கேள்விக்கான பதிலும் இருக்கிறது.
நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட கருப்புப் பணத்துக்கு எதிரான அதிரடி அறிவிப்பு முன்கூட்டியே திட்டமிடப்படாதது அல்ல என்பதும், தீர ஆலோசிக்கப்பட்ட பிறகு எடுத்த முடிவு என்பதும் இப்போது புலப்படுகிறது.
கட்டுரையாளர்:
தலைவர், பிரஸார் பாரதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.