உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!
பெருமித அடையாளமான மாமன்னர் இராஜராஜன் - சரித்திரத் தலைவனை ஜாதியத் தலைவனாக அடையாளம் காண்பதைப்போல் அவலம் வேறேது இருக்கவியலும்?
தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார். தன் வரலாற்றுக் கோரிக்கை ஒன்றை முக்கிய அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் எப்படியாவது சேர்க்க இயலுமா எனக் கேட்டார். அதாவது, தமிழ்கூறு நல்லுலகின் பெருமித அடையாளமான மாமன்னர் இராஜராஜனின் சமாதி உடையாளூரின் வெயில் மழையில் காய்ந்து வரும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நினைவுமண்டபம் எழுப்பும் வாக்குறுதியே அவருடைய கோரிக்கை.
இந்தக் கோரிக்கையின் பின்புலத்தைக் கேட்டபோது, தென்கிழக்காசியாவில் தமிழர்கள் இன்றளவும் தலைநிமிர்ந்து நடப்பதற்கு மாமன்னர் இராஜராஜனின் தீர்க்கமான பார்வையே மூல காரணம் என்றும், அந்நினைவாலயக் கட்டுமானத்துக்கு தன் ஓய்வூதியப் பணத்தில் 50% தொகையைத் தருவதாகவும் அந்த நண்பர் கூறினார்.
இராஜராஜன் என்பது வெறும் சமாதியுடன் அடங்கிவிடும் பெயரன்று; இந்திய அரசியல் வரலாற்றுக்குப் பெரும் படிப்பினைகளைக் கற்றுத்தரும் பல்கலைக்கழகம் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் அவருக்குச் சொல்ல நேரிட்டது. பெருவுடையார் கோயில் கட்டுமானம், கடல் கடந்து ஆட்சியை விரிவாக்கம் செய்த பெருவீரம் என்ற எல்லைகளைத் தாண்டி விசுவரூபம் எடுத்து நிற்கும் அரிய ஆளுமை இராஜராஜன்.
Advertisement
அரசியலின் அரிச்சுவடியே அதிகாரம்தான். அதிகாரத்தின் சின்னமாகிய அரியணையைக் கைப்பற்றும் போட்டிகளில் சிந்திய குருதித்துளிகளிலேயே பேரரசுகளின் வரலாறுகள் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அரச குடும்பத்தில் தோன்றி, செல்வச் செழிப்பில் வளர்ந்த அருண்மொழிவர்மன் இதற்கு விதிவிலக்கு. அரசர் சுந்தரச்சோழனின் மறைவுக்குப் பின், சோழசிம்மாசனத்தை ஆள, அரசரின் தம்பி உத்தமச்சோழன் விரும்பினார்.
நினைத்திருந்தால் அந்த சிம்மாசனத்தை நொடிப்பொழுதில் கைப்பற்றும் வீரம் இராஜராஜனின் தோள்களில் தேங்கி நின்றது. ஆனால், அரியணை ஆவல் வற்றித் தீரும்வரை உத்தமச்சோழனே ஆட்சியில் இருக்கட்டும் என்று அந்த இளவரசன் ஒதுங்கி நின்றதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. இப்படி ஆசையையும் அரியணையையும் விடுத்து அப்பொன்னியின் செல்வன் விலகி நின்ற தொலைவு சுமார் 15 ஆண்டுகள்.
வாளெடுத்துப் போர்க்களங்களில் வெற்றி வாகை சூடிய மன்னர்கள்கூட, ஆயுதமில்லா நிர்வாகக் களத்துக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் புறமுதுகிட்டு ஓடியிருக்கின்றனர்.
ஆனால், ஒரேநேரத்தில் போர்க்கள வீரனாகவும், நிர்வாகப் புலியாகவும் திறம்பட இயங்கும் வல்லமை இராஜராஜனிடம் இருந்தது. அவர் மன்னராகப் பதவியேற்பதற்கு முன்பு சோழநாட்டின் ஆட்சிப் பரப்பெல்லையின் பல பகுதிகளைச் சோழநாட்டுடன் இணக்கமாக இருந்த சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அவர்களின் பிடிகளில் இருந்த பகுதிகளையெல்லாம் அவர் தன் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். ஒட்டுமொத்த சோழநாட்டையும் "வளநாடுகள்' என்னும் அலகுகளாகப் பிரித்து, அவற்றின் உட்பகுதிகளில் தன்னதிகாரம் கொண்ட கிராம சபைகளையும், ஊராட்சிகளையும் இணைத்தார். இவ்வாறு முடியாட்சிக்குள் குடியாட்சியை உருவாக்கிய புரட்சியாளன் இராஜராஜன்.
அரசு என்பதன் மைய அச்சாக உலகம் வியந்து பார்க்கும் பெருவுடையார் கோயிலை மாற்றிக் காட்டிய மன்னனும் இராஜராஜனே. தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஆன்மிகப் பெருக்கை ஊட்டுகிறது என்பது உண்மை. நிர்வாகவியலின் இலக்கணமாகத் திகழ்கிறது என்பது அதைவிடப் பேருண்மை. ஆயிரம் ஆண்டுகளுக்கு
முந்தைய தமிழக ஆட்சியியல் கலையை ஓர் ஆவணம் போல தாங்கி நிற்கும் அற்புதமாக அப்பெருங்கோயிலை மும்முடிச்சோழன் கட்டமைத்தார். தன்னால் தொடுக்கப்பட்ட போர்கள், கட்டிய கோயில்கள், அவற்றுக்கு வழங்கிய நிவந்தங்கள், நில வரி என எல்லா நிர்வாகத் தகவல்களையும் இனிய தமிழிலான அகவற்பாவில் கல்வெட்டுகளாய் அந்தக் கோயிலில் பொறித்து வைத்தார்.
நிகரிலி சோழனாகப் போற்றப்பட்ட இராஜராஜனோ, தன் அரசு நல்கிய நிலக்கொடைகள், தனிமனிதர்கள் ஈந்த நிலதானங்கள், அவற்றின் அளவுகள், பொன் ஆபரணங்கள், வெள்ளி, செம்புப் பொருள்கள் எனக் குண்டுமணியைக்கூட எடையிட்டு அனைத்தையும் ஆவணப்படுத்தி வைத்தார்.
பெருவுடையாருக்காகத் தந்த விளக்குகள், பாத்திரங்கள், நெல் உள்ளிட்ட தானியங்களின் கணக்கு, கோயிலில் சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள், கணக்கெழுதுபவர்கள், அவர்களின் ஊதியம், இறைப்பணி மகளிருக்காக ஒதுக்கிய வீடுகள் என எல்லாவற்றையும் ஆண்டுக்குறிப்புடன் கல்வெட்டில் ஆவணமாக்கிய உலகின் முதல் பேரரசன் இராஜராஜனே.
நன்செய், புன்செய் நிலங்களைத் தனித்தனியே அளந்து, அதில் இறையிலி நிலங்கள், ஊர்களின் பெயர்கள், குளங்கள், கோயில்கள், நகரப் பகுதி, கிராமம், தெருக்களின் விவரம், வாய்க்கால், நீர்நிலைகள் மற்றும் மயானங்கள் உள்பட ஒரு தகவலையும் அவ்வேந்தன் விட்டு வைக்கவில்லை. ஆடு, மாடு வகைகளை நாட்டுடைமையாக்கி, அவை தரும் நெய்யைக் கோயிலுக்குத் தனி, பராமரிப்பாளர்களுக்குத் தனியெனப் பிரித்து அதையும் கல்வெட்டில் பதிவு செய்தார். ஒதுக்கீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறந்தால், புதிய ஆடு, மாடுகளை "சாவா மூவாப் பேராடுகள்' என ஈடுசெய்து நிரப்பிய அற்புதமும் நடைபெற்றது.
கடல் போல் பரந்து கிடந்த சோழமண்டல நிலங்களைக் கணக்கிடுவதற்காகவே 16 சாண் கொண்ட அளவுகோல் ஒன்றை இராஜராஜன் உருவாக்கினார்.
உலகளந்தான் கோல் என்னும் பெயர் கொண்ட அந்த அளவுகோல் குறித்த கல்வெட்டுக் குறிப்புகள் திருவாலங்காட்டில் இன்றும் மின்னுகின்றன. தமிழ் மண்ணை அளந்த அச்சிவபாத சேகரன், தான் வென்ற, ஆனால் தனக்குச் சொந்தமில்லாத அயலக மண்ணை அளக்கவில்லை.
அளக்கவியலாப் பிரதேசங்களைக் கட்டியாண்ட இராஜராஜனோ அரியணையில் அமர்ந்தவுடன் தூக்கி எறிந்தது, "நான்' என்னும் எண்ணத்தைத்தான். உலகம் இன்றளவும் அதிசயித்துப் பார்க்கும் பெருவுடையார் கோயில் கல்வெட்டில், "நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும், அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும், மற்றும் குடுத்தார் குடுத்தநவும்' என்று மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து அமைத்த பெருங்கோயில் இதுவென எழுதி வைத்தார்.
அந்தக் கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி பெருந்தச்சன் குஞ்சரமல்லனுக்கு, "இராஜராஜப் பெருந்தச்சன்' என்று தன் பெயரையும் தானமாக ஈந்தார். மண்ணகத்துப் பெருமையாய் எழுந்து நிற்கும் பெருவுடையார் கோயில் கட்டுமானப் புகழை, அதைக் கட்டமைத்த தலைமைச் சிற்பி முதல் விளக்கெரிக்க நெய் வார்த்த ஏழைப் பெண்கள் வரை எளியவர்களுக்கு மடைமாற்றம் செய்தளித்த விதிவிலக்கான வேந்தன், இராஜராஜன்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் அக்கலைப் பெருங்கோயிலின் நிழல் தரையில் விழுகிறதா இல்லையா என்பது இன்றும்கூட ஒரு விவாதப் பொருள்தான். ஆனால், நிமிர்ந்து நிற்கும் அந்தப் பெருங்கோயிலின் பின்புலத்தில் அந்த மாமன்னன் உலகத்துக்கு விட்டுச் சென்ற செய்திகள் ஏராளம்.
இராஜராஜனின் வாழ்க்கைத் தொடக்கம் முதல் நிறைவு வரை ஒவ்வோர் அங்குலமும் பெருவுடையார் கோயில் கற்களைப் போன்று செதுக்கி வைக்கப்பட்ட பாடங்களே.
பூட்டுக் கட்டுமானப் பொறியியல் உத்தியில் கட்டப்பட்ட அந்தக் கோயிலின் கோபுரம், தண்ணீர்க் குவளையைக் கவிழ்த்தாற் போன்ற அமைப்புடையது. அந்தக் கோபுரத்தின் உட்பகுதியில் பரதக் கலையின் 108 கரணங்களுக்காக ஒரே அளவிலான 108 கற்கள் சதுரமாய்ச் செதுக்கிப் பூட்டப்பட்டுள்ளன.108 பெருங்கற்களில் 81 கரணங்களை மட்டும் சிற்பங்களாகச் செதுக்கிய அந்த மாமன்னர், 27 கற்களை மட்டும் வெறுமையாய் விட்டு வைத்தார். எதிர்காலத் தலைமுறை புதிதாய்த் தோன்றும் கரணங்களைச் செதுக்க ஏதுவாய் அந்தப் பணியை வருங்காலத்திடம் விட்டுச் சென்றார். ஆனால், ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் அந்தக் கற்களைச் செதுக்கும் உளியும், துணிவும் இன்னும் எந்த விரல்களுக்கும் இல்லை என்பதே நிதர்சனம்.
சிற்றப்பாவுக்காகப் பதவியை விட்டு விலகி நின்ற அப்பெருமன்னர், அதிகாரத்தின் உச்சத்திலிருந்த போதே, கடலுக்கப்பாலும் விரிந்து கிடந்த சோழப் பேரரசை மகன் இராஜேந்திரனின் தோள்களுக்கு மாற்றித் தந்த புதுமையைத் தமிழ்மண் இராஜராஜனிடத்தில் கண்டது.
அரசியல் பிழைத்தோர் நுழைய அஞ்சும் அறப்பீடமாக இராஜராஜனின் கலைக் கோயில் இன்றளவும் கம்பீரம் சூடி நிற்கிறது. தப்பெண்ணத்துடன் தடம் பதித்தாலே சிம்மாசனம் கவிழ்ந்து விடும் என்று அச்சத்துடன் விலகி ஓடும் வித்தகர்கள், உடையாளூரில் எப்படி நினைவாலயம் கட்ட வாக்குறுதி கொடுப்பார்கள் என்று அயலக நண்பரிடம் கேள்வியை வீசினேன். இதைத் தாண்டி, இராஜராஜன் எங்கள் ஜாதி என்று உரிமை கொண்டாடிக் கொண்டு ஆண்டுதோறும் சதய விழாவிலும் 30 இயக்கங்கள் தனித்தனியே இப்போதும் ஊர்வலம் வருகின்றன. அந்த சரித்திரத் தலைவனை ஜாதியத் தலைவனாக அடையாளம் காண்பதைப்போல் அவலம் வேறேது இருக்கவியலும்?
80 டன் எடை கொண்ட கல்லை உச்சியில் சுமந்த கலைப் படைப்பை இந்த மண்ணுக்கு நல்கிய அப்பேரரசன், தனக்கென நிலையான அரண்மனையையோ, இறந்த பிறகு வைக்க பள்ளிப்படைக்கோயிலையோ கட்ட எப்போதும் சிந்தித்ததில்லை. அத்துடன் சோழநாடு தனக்குச் சூட்டிய 40-க்கும் மேற்பட்ட சிறப்புப் பெயர்களைத் துறந்த அந்தக் காவிரிநாடன், சொந்தப்பெயரைக்கூட கோயில் பெருந்தச்சனுக்குத் தாரை வார்த்துத் தந்தார்.
குவிந்த செல்வங்களும், மனிதவாழ்வும் ஒருபோதும் நிலைக்காது; செயற்கரிய செயல்கள் மட்டுமே நிலைத்திருக்கும் என்பதைத் தன் வாழ்க்கையின் ஒவ்வோர் அங்குலத்தாலும் அப்பெருவேந்தன் வாழ்ந்து காட்டினான். அவன் வடித்த உலகளந்தான் கோல் அன்று மண்ணை அளந்தது; இன்று நம் மனத்தை அளக்கிறது...
கட்டுரையாளர்:
பேராசிரியர்,
அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.