முகப்பு
செய்திகள்

இசையே, உனக்கு என்னவென்று பெயரிடுவது?

இசையமைப்பாளர் இளையராஜாவின் கர்நாடக, மேற்கத்திய இசை குறித்து...

Updated On : 2 ஜூன் 2026, 11:37 am IST
இசையமைப்பாளர் இளையராஜா
பகிர்:

ஒலியை இசையென உணர்ந்த முதல் மனது யாருடையது? ஆதிமனிதன் தாளக் கருவிகளில் கண்ட கலையை கம்பிக் கருவிகளுக்கு மாற்றிய தருணம் எது? பழங்குடியிசையிலிருந்து செவ்வியலாக நோக்கி விரிந்த இசை இன்று பல்லாயிரம் பரிணாமங்களைக் கண்டுவிட்டது. ஒரு இசைத்துணுக்கின் இன்பம் என்ன? அது விளக்கும் தத்துவம் என்ன? அது கட்டியெழுப்பும் உணர்வுகள் என்னென்ன? ஆரம்ப காலங்களில் நம் திரையிசைப் பாடல்கள் முதலில் ஏதேனும் இசைக்கருவியின் இசையென முன்செருகலாக (prelude) ஆரம்பமாகும். சில வினாடிகளுக்குப் பின் ஆணோ பெண்ணோ பல்லவியைப் பாட, அதனிடையே இடைச்செருகல் (interlude) இணையும் இதனை ஹார்மோனி (hormony) வகை என்கிறோம்.

ஒரு மெட்டுக்குப் பின் அதனைப் பிரதிபலிக்கும் இசை அமைந்தால் அப்பாடலுக்கு ஹார்மோனி என்று பெயர். பல ஆண்டுகளாக இந்தியயிசை இப்படித்தான் இயங்கிக்கொண்டிருந்தது. இளையராஜா அந்த போக்கினை அபாரமாக மாற்றியமைத்தார். கலப்பில்லாத கர்நாடக இசை ஆதிக்கம் செய்துகொண்டிருந்த காலத்தில் அதனுடன் மேற்கத்திய செவ்வியல் இசைகளைப் புகுத்துவது, மேற்கத்தி பாணி ஆர்கெஸ்ட்ரா அமைப்பின் மூலம் பாடல்களை உருவாக்குவது, மேற்கத்திய இசைகளை கர்நாடக ராகங்களுடன் உடன் இணைந்து பல ஃபியூசன் இசைகளை (fusion) உருவாக்கி வித்தியாசமான அனுபவங்களுக்கு அழைத்துச் சென்றது என இளையராஜா கடந்த 50 ஆண்டுகளாக நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ராஜா ஒரு மேதை என்பதில் சந்தேகம் இல்லை. ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களும் பல்லாயிரம் பாடல்களுக்கும் அதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. இவ்வளவு வேகத்தில், இவ்வளவு துல்லியமான கலையனுபவத்தை எப்படி அவரால் வழங்க முடிந்தது?

எல்லாமே அன்னக்கிளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. இளையாராஜாவின் முதல் படமான அன்னக்கிளி திரைப்படம் யூட்யூபில் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து கவனியுங்கள், டைட்டில் கார்ட் போடும்போது கோவில் மணியோசையிலிருந்து தன் இசைப்பயணத்தை ஆரம்பிக்கும் ராஜா, அடுத்தடுத்து பெயர்கள் திரையில் தெரிய, மேள (தாளம்) இசையை மையமாக வைத்து நாதஸ்வரம், புல்லாங்குழல், தவில் உள்பட பல்வேறு இசைக் கருவிகளை அதனுடன் மோதவிட அந்தக் கோர்வை ஒவ்வொரு திரை நகர்வுக்கும் (slide) மிகச்சிறப்பான நாட்டுப்புற இசையனுபமாக மாற்றிக்கொண்டே வரும், சரியாக ’அறிமுகம் இளையராஜா’ எனக் கிளியைக் காட்டும்போது தீப்பற்றுவது போல, ’மச்சானைப் பார்த்தீங்களா’ பாடலின் இசை உச்சத்திற்கு சென்று மெல்ல கீழிறங்கி வரும். அபாரமான இசைச்செருகல்.

Advertisement

Advertisement

படத்தின் முதல் காட்சியில் வெட்ட வெளி காட்டப்படுகிறது. வெட்ட வெளியென்றாலே அது மேய்ப்பனுக்குரிய நிலம் அல்லவா? மிக அழகான புல்லாங்குழலை இசைக்கவிடுகிறார். கட் செய்தால் ஆண்டாளைத் திரையில் பார்த்தபடி அமர்ந்திருக்கும் நாயகி சுஜாதா அடுத்த காட்சி முடிந்ததும், ‘அன்னக்கிளி உன்னத்தேடுது பாடலில் இளையராஜா நாட்டுப்புற இசைக்கருவிகளுடன் மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு தன்னுடைய முதல் ‘திக்’ உணர்வைக் கொடுத்தார். ஹம்மிங்குடன் கூடிய அந்த பின்னணி இசைகளைக் கேட்க, கேட்க அதன் இசைக் குறிப்புகளை எவ்வளவு நேர்த்தியாக எழுதியிருந்தால் இப்படியொரு பாடலை உருவாக்கியிருக்க முடியும்? என வியக்காமல் இருக்க முடியாது.

அன்னக்கிளியில்...

அடுத்தடுத்த காட்சிகளையும் மொத்தமாக ராஜா தன் கட்டுப்பாட்டில் வைக்கிறார். கதாநாயகன் நடிகர் சிவகுமார், ஊஞ்சலில் நின்றுகொண்டு ஆட ஆசைப்பட ஒருவர் அதனை ஆட்டிவிடுகிறார். மிக வேகமாக அந்த ஊஞ்சல் முன்னே நகரும்போது பியானோவில் இசைக்கட்டைகள் உச்சத்தை அடைகின்றன. முன்னே சென்ற ஊஞ்சல் பின்னால் வர கட்டைகள் எதிர்வரிசையில் கீழிறங்குகின்றன. (ஊஞ்சல் பலகை - பியானோ கட்டை) வேகமாக ஆடுவதில் பாம்புகள் ஒன்றிணைவது போல், ஊஞ்சல் கயிர்கள் இணைந்துவிடுகின்றன. அப்போது, மணியோசை போன்ற இசையைப் வேகமாகப் பயன்படுத்தப்பட்டு சிவகுமார் அதிலிருந்து கீழே விழுகிறார். எடை இல்லாததால் ஊஞ்சல் திருகல்கள் விடுபடும்போது, அந்த இசை ஆடைகளின் பொத்தான்களைக் கழற்றுவது போல் மெல்ல விடுவிக்கப்படுகின்றன, சிவகுமாரின் அலறல் கேட்டு நாயகி சுஜாதா வருகிறார். அப்போது, அந்த இசை மென்மையாக முடிகிறது. ஊஞ்சலில் எப்படி அமர வேண்டுமென்பதை சுஜாதா விளக்கி மீண்டும் சிவகுமாரை ஊஞ்சலில் அமர வைக்கிறார். அப்போது இளையராஜா அதே பியானோவை பயன்படுத்துகிறார். ஆனால், முன்பு வேகமாக வாசிக்கப்பட்ட இசை அல்ல. மென்மையாக பியானோ கட்டைகள் ஒலிக்கின்றன. அதுதான் அடுத்து நாயகனுக்கும் நாயகிக்குமான நிகழும் காதல் தருணத்திற்கான முன்னிசை. ராஜா அங்கு செய்தது அன்றைய காலகட்டத்திற்கு அற்புதமானது. மேலே சொன்னவை அனைத்தும் படம் ஆரம்பித்து இருபது நிமிடங்களில் வருபவை. அதற்கு இடைப்பட்ட ஒவ்வொரு காட்சிகளில் இடம்பெற்றுள்ள இடங்கள், பொருள்களுக்குத் தக்க இசையை வழங்கி பிரமாதப்படுத்தியிருப்பார்.

தன் முதல் திரைப்படத்திலேயே ராஜா தன்னுடைய இசை நுட்பம் எவ்வளவு தீவிரமானது என்பதை பறைசாற்றிவிட்டு, அதன்பின் பல அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஹார்மோனி வகைப் பாடல்களை மட்டுமே கேட்டுப் பழகியிருந்த நம் காதுகளுக்கு மிகத் தீவிரமாக கவுண்டர் பாயிண்ட் (counter point) இசையைப் புகுத்தியவர் ராஜாதான். இசையமைப்பில் மிக சவாலானது கவுண்டர் பாயிண்ட் வகை. இரண்டு மெட்டுகள் ஒன்றோடு ஒன்று படற, ஒவ்வொன்றிருக்கும் வேறுவேறு இசைக்கருவிகள் தன் இலக்கணம் மாறாமல் ஒலிக்க, ஒட்டுமொத்தமாக கேட்டால் அதிலும் முழுமை கூட வேண்டும்.

இந்த கவுண்டர் பாயிண்ட் இசையை உருவாக்கியது ஜோஹன் செபாஸ்டியன் பாக் (1675 - 1750). மேற்கத்திய இசை மேதைகளின் முன்னோடி. பாக் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுண்டர் பாயிண்ட்களை உருவாக்கிய அசாத்திய மேதை. அவருடைய காலத்தை ஒப்பிடும்போது அது அரிய செயல்தான். இசைக்குடும்பத்தில் பிறந்த பாக்கின் உருவாக்கங்கள் இன்றும் கேட்கப்பட்டு வருகின்றன. ராஜாவுக்கு பாக் மீது மிகப்பெரிய மயக்கம் இருந்திருக்கிறது. ஒரே நேரத்தில் இடைவெளி இல்லாமல் பல இசைக்கருவிகள் அதனதன் தனித்துவத்துடன், பொருள் இழக்காத தன்மையுடன் ஒலிக்கின்றன. ஒட்டுமொத்தமாகக் கேட்டாலும், ’ஒன்றென ஆன’ உணர்வெழுச்சிகளுடன் மிளிர்கின்றன. ஒழுங்கும் பெரும் நேர்த்தியும் கொண்ட அக்கலை ராஜாவின் படைப்பாற்றலுக்கு சவாலைக் கொடுத்திருக்கிறது.

ராஜா உருவாக்கிய முதல் கவுண்டர் பாயிண்ட் பாட்டு, சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற, “என் கண்மணி என் காதலி” பாடல். அதன் முதல் வரி முடிந்ததும் இடைவெளி இல்லாமல் அதன் மீது படியும் அடுத்த வரியில் இசையனுபவம் ஆரம்பித்துவிடும். இது என்ன வித்தியாசமாக இருக்கிறது என ரசிகர்கள் ஆர்பரித்துக்கொண்டிருந்த காலங்களில் இளையராஜாவை நாம் வெறும் திரையிசையுடன் நிறுத்திவிடவே முடியாது என்பதை உணர்த்தும் அவரின் how to name it? ஆல்பம் வெளியாகிறது. அன்னக்கிளி (1976) திரைக்கு வந்த பத்து ஆண்டுகளில் ஹவ் டூ நேம் இட் (How to name it?) என்கிற ஆல்பத்தை வெளியிடுகிறார். ராஜா பிற இசையமைப்பாளர்களிடமிருந்து தன்னை வலுவாக நிறுவிய ஆல்பம். அன்னக்கிளியிலிருந்து அந்த ஆல்பம் வரை கர்நாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் நன்றாக இசைக்கூடியவராகவும் ஒவ்வொரு இசைக்கருவிகளின் முயக்கங்களை அறிந்துகொண்டவராக ஆகியிருக்கிறார்.

செபாஸ்டியன் பாக், தியாகராஜா

இதற்கு என்னவென்று பெயரிடுவது? என்கிற பெயருக்குக் காரணம், இந்த ஆல்பம் செபாஸ்டியன் பாக்கின் கவுண்டர் பாயிண்ட்டையும் கர்நாடக இசை மேதை தியாகராஜாவையும் போற்றுவதற்காக படைக்கப்பட்டது. இதில், இந்திய - மேற்கத்திய இசைகள் ஒன்றோடு ஒன்று இணைகின்றன. வெவ்வேறு வகைகளைக் கொண்டு இதனைக் கவுண்டர்பாயிண்ட் ஆகவும் இந்தக் கலப்பால் அது ஃப்யூசனாகும் (fusion) ஆகிறது. ஆல்பத்தின் முதல் இசையான How to name it- வயலின் கருவி ஒலிக்க, அடுத்தடுத்து வீணைக்கு இசை நகர்கிறது. சாந்தமான இசை. தொடர்ந்து, mad mod mood on fugue -ல் மேற்கத்திய இசையின் பித்து நிலையைக் கொண்டு பாக்கை நினைவுறுத்தும் இசைக்கோர்வைகள். அடுத்ததிலும் மெல்ல, மெல்ல மேற்கத்திய இசைக் கருவிகளை இந்திய ராகத்துடன் இணைத்து பாக், தியாகராஜாவை ஒன்றென இணைத்துக்கொண்டே வருகிறார். சட்டென்று, Study for violin வருகிறது. பாக் மிகத்திறமையாக வயலின் வாசிகக்கூடியவர். வயலின் (நரம்பிசை) பங்கு இல்லையென்றால் கர்நாடக இசைக்கும் மேற்கத்திய இசைக்கும் உயிரில்லை. இந்த இருவரையும் ஒன்றென ஆக்குவதில் வயலினின் பங்கு மிக அதிகம். அந்த ஆய்வை மேற்கொள்கிறார்.

இந்த ஆல்பத்தில் ஆரம்பத்திலிருந்தே மேற்கத்திய இசையையும் கர்நாடக இசையையும் இணைத்து வரும் ராஜா, Chambers welcomes thiyagaraja மூலம் மேற்கத்திய இசை அரங்கிற்கு வாருங்கள் மாஸ்டர் என தியாகராஜரை அழைத்துச் செல்கிறார். அந்த இசைக்கோர்வையைக் கேளுங்கள். இயல்பாகவே ராஜ மரியாதைக்கு உண்டான நிமிர்வு எழுகிறது. ஞானம் இல்லையென்றால் இப்படி ஒரு ஆக்கமே இல்லை. ஆனால், சுவாரஸ்யமாக I met bach in my house- ல் தவில், செல்லோ இசைகளுடன் மரியாதையாக பாக்கை தன் இல்லத்திற்கு ராஜா அழைக்கிறார். அங்கு அதில், அவர் ஊறிக்கொண்டிருக்கிற கர்நாடக இசையின் இடைச்செருகல்கள் உள்ளன. இந்த மொத்த ஆல்பத்திலும் இசைக்கருவிகள் மட்டுமே வாசிக்கப்பட அடுத்த உரையாடல் இசையில் (And we had a talk), ராஜாவும் பாக்கும் உரையாடுவதின் குறிப்பாக வயலின் உள்பட நரம்பிசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு, இறுதியில் ‘அ..’ என இரு குரல்கள் ஒலிக்கின்றன. நம் மொழிகளின் முதல் உயிரெழுத்து.

இசைக்கென சொற்றொடர் உண்டு. நமக்கறிந்த இசை மூலம் ராஜாவின் துணுக்குளில் அவை உண்டு என்பதைக் கூறிய ஆல்பம். தன் கலைப்பதற்றத்தை எங்காவது ஏற்றும் ஏணியாக பாக்கின் காலகட்டத்தைச் சேர்ந்த தியாகராஜனின் கீர்த்தனைகளுடன் செபாஸ்டியன் பாக்கின் தேவாலய மேற்கத்திய இசையைக் கொண்டு தன் மேஜிக்கை செய்கிறார்.

அந்த உரையாடல் முடிந்ததும் ராஜா தன்னை அறிந்தவராக Dont compare இசையைக் கொடுக்கிறார். மாபெரும் கலைஞர்களில் யாரும் யாரைவிடவும் குறைவானவர்கள் அல்ல. நம் துறையின் மாஸ்டர்களை நாம் மீறிச் செல்லும் தருணங்கள் அமையலாம். ஆனால், ஒப்பிடுதல் ஆகாதது. எந்தொரு கலையிலும் நம் ஆணவத்தை நாம் அந்தந்த மாஸ்டர்களின் காலடியில் வைக்காமல் ஏறவே முடியாது. ராஜா அந்த இடத்தை அப்போதே அடைந்துவிட்டார். நம்முடைய மேதைகளையும் நம்மையும் ஒன்றென நினைக்க வேண்டாம். செல்லும் தொலைவு மிக அதிகம் என ஏற்றுக்கொள்கிறார். கலைஞர்களுக்குத் தன்னைக் கண்டடைவதில் ஏக திருப்தி இருக்கிறது. அதன் பொருட்டே, Do anything- இசையுடன் இந்த ஆல்பம் முடிவடைகிறது. இறுதியிசைக்கு இடையே ஒரு நாட்டுப்புற இசை எழுச்சி அமைகிறது. இந்த இசையை ஒவ்வொரு முறை கேட்கும்போது நம்பிக்கைகள் பிறக்கின்றன. எங்கும் எதுவும் மாறிவிடவில்லை என்கிற சித்திரம். அது ராஜா அவருக்கே விடுத்துக்கொண்டே சவாலாகத்தான் இருக்க வேண்டும்.

அதுவரை தியாகராஜருக்கும் பாக்கிற்குமான இடைவெளியைக் கர்நாடக - மேற்கத்திய செவ்வியல் தன்மையுடன் கவுண்டர் பாயிண்டுடன் கூடிய ஃப்யூசன் இசையை உருவாக்கியவர், இறுதியில் அவருக்கான இசையாக அதனை வடிவமைத்துக்கொண்டார். எதையாவது செய்து வா! ஆச்சரியப்படும் வகையில் இந்த இசையை இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய வீடு திரைப்படத்தில் சொக்கலிங்க பாகவதர் தன் சொந்த வீடு உருவாகும் அழகைப் பார்க்கும்போது இளையராஜா பயன்படுத்தியிருப்பார். அது வெறும் வீடா? do anything என ராஜா தன்னைத்தானே எழுப்பிக்கொண்டு வந்த சாம்ராஜ்யம் அல்லவா?

இத்தனை ஆண்டுகளில் அவர் உருவாக்கிய கவுண்டர் பாயிண்ட் பாடல்கள் மிக அதிகம். 16 ஆம் நூற்றாண்டிலேயே இசை நுணுக்கமும், இசைக்கருவிகளின் கணித துல்லியமும், ஆன்மீக இணைப்புமென அரசபைகளிலும், தேவாலயங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்த கவுண்டர்பாயிண்ட் இசையை நம் திரையிசையில் நாட்டுப்புற, கர்னாடிக் இசைகளுடன் நெளியக்கொடுத்து மிளரச் செய்த ஆசாத்திய மேதை நம்முடைய இளையாராஜா. தென்றல் வந்து தீண்டும்போது பாடலைக் கேட்காத காதுகள் உண்டா? ஹார்மோனி, கவுண்டர் பாயிண்ட், ஃப்யூசன் என ராஜா புது ராகங்களைப் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்.

இளையராஜாவுக்குள் எப்போதும் மேதைகளை மீறிச்செல்லும் விழைவு இருந்துகொண்டே இருப்பதுதான் அவரின் அசாத்திய இசைப்பாய்ச்சலுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. தன்னைப் பகடையாக மாற்றிக்கொண்டு இருபுறமும் தன் ஆதர்சங்களுடன் விளையாடிய ஆள். செவ்வியல் இசையில் மேதைகளாக விளங்கிய மேற்கத்திய இசைக் கலைஞர்களை உயர்வாக எடுத்துக்கொண்டு அவர்கள் ஒவ்வொருவரையும் மீறிச் சென்றிருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன் மலைப்பாக இருந்த செபாஸ்டியன் பாக்கை விட தற்போது தான் பெரிய ஆள் என்கிற எண்ணம் இளையராஜாவுக்கு உண்டு. ஆனால், தன் ஆதர்சத்தை மீறிச்சென்ற நிறைவும் அவருக்கு இருப்பதுபோல் தெரியவில்லை.

தன் கலையில் மேதைகளாக மதிக்கக் கூடியவர்களை இன்றும் ஆச்சரியமாக பார்க்கும் ராஜா, தன் செயல் ஊக்கத்தால் பல மேதைகளுக்கு அருகேவும் மீறியும் சென்ற ராஜா. தன்னை நெருங்க முடியாத இலக்குகளைப் படைத்த நம் ஞானதேசிகர்!

Music composer Ilaiyaraaja celebrates his 83rd birthday today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.