முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

தமிழ் சினிமாவின் முகம் மாற்றிய இயக்குநர்களின் முதல் படைப்புகளுக்கு 'இசை இளையராஜா'

நூற்றுக்கணக்கான இயக்குநர்களின் முதல் பட இசையமைப்பாளராக இளையராஜா இருந்தது பற்றி...

Updated On : 2 ஜூன் 2026, 8:00 am IST
இளையராஜா - DIN
பகிர்:

சினிமாவில் ஒவ்வொரு இயக்குநருக்கும் அவர்களுடைய முதல் படைப்பு எப்போதும் பெருமைக்குரியவை. விளக்குகள் அணைக்கப்பட்ட திரையரங்கம் ஒன்றில், ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே, பரந்துவிரிந்த வெண்திரையில் 'இயக்குநர்' என்ற பட்டத்துடன் அவர்களுடைய பெயர் வெளிவந்த நாளும் தருணமும் மறக்கவே முடியாதது என்றால் மிகையல்ல. அந்த வகையில் கோலிவுட்டின் நூற்றுக்கணக்கான இயக்குநர்களின் முதல் பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாதான்.

கோடம்பாக்கத்தில் அப்படி ஒரு காலம் இருந்தது. அப்போது ஒரு தயாரிப்பாளருக்கு கதையும், இயக்குநரும் கிடைத்துவிட்டால் அடுத்தகணம் அவர்கள் எதிர்நோக்கும் திசையாக இருந்தவர் இளையராஜா.

சாலிகிராமமும் பிரசாத் லேப்பும் புதிய இயக்குநர்களின் புகலிடமாகிக் கிடந்தது. புதியவர், திறமையானவர், பிரபலமானவர், வசதி படைத்தவர், செல்வாக்கு மிக்கவர் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், இளையராஜா அனைவருக்கும் தனது சிறந்த படைப்பையேக் கொடுத்திருக்கிறார். இந்த புதிய இயக்குநர்களின் வருகை ஒவ்வொரு காலக் கட்டத்திலும், இதுதான் தமிழ் சினிமா என்ற வரையறையைக் கடந்து வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன. இந்த மாற்றத்தின் முக்கிய முகமாக இசைஞானி இளையராஜாவும் இருந்திருக்கிறார்.

Advertisement

Advertisement

1976-ல் தேவராஜ் மோகன் தொடங்கி, 2026-ல் கார்த்திக் சுப்புராஜ் வரை 50 ஆண்டுகளில் 1540 திரைப்படங்களில் அனைத்து இயக்குநர்களையும் அவர் பார்த்துவிட்டார். இளையராஜாவிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியான, எப்படி இந்தப் பாடல்கள் வந்தன? என்ற கேள்விக்கு அவர் எப்போதும் கூறும் பதில், அந்த நேரத்தில் என்ன வருகிறதோ, அதுதான் என்பார். எதுவாகினும், முதல் படம் இயக்கும் ஒரு அறிமுக இயக்குநர்தானே, என்று இளையராஜா ஒருநாளும் பணியாற்றியதே இல்லை என்பதற்கு சான்றுதான் இவை;

மகேந்திரன் - கடந்த 1966-ல் இருந்து திரைத் துறையில் கதை, திரைக்கதை ஆசிரியராக பல்வேறு படங்களில் தனது முத்திரையைப் பதித்து வந்தவர் மகேந்திரன். அவரது இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளிவந்த அவரது முதல் திரைப்படம் 'முள்ளும் மலரும்'. பெயர் கேட்ட மாத்திரத்தில், காதின் வழியே 'செந்தாழம் பூவின்' நறுமணத்தை நாசிக்கு கடத்திச் சென்றவர் இளையராஜாதான். அண்ணன் தங்கைப் பாசத்தை மையாகக் கொண்ட கதையை பாடல்களாலும்,

பின்னணி இசையாலும் ரசிகர்களிடத்தில் உணர்வுப்பூர்வமாகக் கடத்தி காவியமாக்கியப் பெருமை ராஜாவையே சேரும். அதை இயக்குநர் மகேந்திரன், எனது எழுத்துக்கு உயிர் கொடுத்தது ராஜாவின் இசை என்று கூறுவார். தொடர்ந்த வெளியான மகேந்திரனின் திரைப்படங்களான 'உதிரிப் பூக்கள்','பூட்டாதப் பூட்டுகள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'நண்டு', 'மெட்டி' என அனைத்துப் படங்களுக்கும் இசை இளையராஜாவேதான்.

பாரதிராஜா - 76-ல் இசையமைப்பாளராக முதல் வாய்ப்பு கிடைத்துவிட்ட இளையராஜா, முதல் ரீல் தொடங்கி சுபம் போடும் வரை இசைக் கருவிகளால் காட்சிகளை நிரப்புவதையே இசையமைப்பாகக் கொண்ட கோலிவுட்டின் எழுதப்படாத விதிகளால் அலுத்து, களைத்துக் காத்திருந்தார். 1977-ல் இயக்குநர் இமயம் பாரதிராஜா '16 வயதினிலே' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அந்தப் படத்துக்கு இசை இளையராஜா. மலையும் ஆறுகளும் மனதொத்தும் வாழும் தேனி மாவட்டம்தான் பால்ய நண்பர்களான இவர்கள் இருவருக்கும் சொந்த ஊர். மயிலும், சப்பாணியும் வாழும் கதைக்களம் ஒன்றில் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் கேட்கவா வேண்டும். பாரதிராஜாவும் இளையராஜாவும் இந்தப் படத்தின் மூலம் வணிக வெற்றியை மட்டும் பதிவு செய்தவர்கள் அல்ல. அதுவரை கோலிவுட் கட்டமைத்து வைத்திருந்த சினிமாவுக்கான பல்வேறு போலித்தனங்களை தகர்த்தெறிந்தனர். படத்தில் மீண்டும் மீண்டும் காட்டப்படும் கதாப்பாத்திரங்களின் முகத்துக்கான க்ஸோஸ்-அப்ஸ்கள், ஃப்ரீஸ் ஆகும் காட்சிகள், என இயக்குநர் பாரதிராஜாவின் அத்தனை புதிய முன்னெடுப்புகளையும் தனது பின்னணி இசையால் ராஜா உயிர்ப்பித்திருப்பார். இந்தப் படத்தில் வரும் 'செந்தூரப்பூவே' பாடலின் ஓப்பனிங் கிடாரும், புல்லாங்குழலும், வயலின் பேக்அப்பும் போதும், மேற்காசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர. இந்தப் பாடலைப் பாடிய எஸ்.ஜானகி தேசிய விருது பெற்றார். பனமுகத் திறமைக் கொண்ட கங்கை அமரன் பாடல் ஆசிரியரான முதல் பாடலும் இதுதான். இசைஞானியின் குரல் முதன்முதலில் 'சோளம் வெதக்கயிலே' பாடல் மூலம் திரையில் ஒலித்தது இந்தப் படத்தில்தான்.

தொடர்ந்து பாரதிராஜாவ - இளையராஜா காம்போவில் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், மண் வாசனை, புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் என பட்டியல் நீளும்...

மணிரத்னம் - பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், என்.கே.விஸ்வநாத் என சீனியர் இயக்குநர் கோலோச்சிய தமிழ் சினிமாவின் அப்போதைய இளம் படைப்பாளியாக நுழைந்து தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் மணிரத்னம். இவரது முதல் படம் 1983-ல் 'பல்லவி அனு பல்லவி' என்ற கன்னடப் படம். அதன்பிறகு 1984-ல் 'உணரு' என்ற மலையாளப் படத்தை இயக்கினார். இந்த இரு படங்களுக்கும் இசை இளையராஜா. தமிழில் மணிரத்னம் இயக்கிய முதல் படம் 1985-ல் வெளியான 'பகல் நிலவு'. இது பாக்ஸ் ஆபீஸில் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை. ஆனால், இந்தப் படத்தின் பாடல்கள் இன்றுவரை பண்பலை மற்றும் மியூசிக் சேனல்களின் பாடல் ஒளிபரப்பு வரிசைகளில் நிலைத்திருப்பவை. தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய 'இதயகோயில்', 'மௌனராகம்', 'நாயகன்', 'அக்னி நட்சத்திரம்', 'அஞ்சலி', 'தளபதி' என இளையராஜா இயக்குநர் மணிரத்னத்துக்காக திரைக் களத்தில் இறங்கி செய்த சம்பவங்கள் ஏராளம். இயக்குநரின் படத்தைக் காண்பதை மேட்டித்தனமாக கருதும் பலரும் மறந்துவிட்டது அவரது ஆரம்பக் கால படங்களில் ராஜாவின் மெச்சத்தகுந்த பின்னணி இசையையும், அவரது பாடல்களையும்தான் சேர்த்துதான் என்பது சோகம்.

மணிவண்ணன் - தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டு பின்னர் இயக்குநராகி பிரகாசித்தவர்கள் ஏராளம். அதில் மணிவண்ணன் முக்கியமானவர், பாரதிராஜாவின் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்த அவரது முதல் திரைப்படம் 'கோபுரங்கள் சாய்வதில்லை'. 1982-ல் வெளியான இத் திரைப்படத்துக்கு இசை இளையராஜா. 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' என வாழும் அருக்காணிகளின் வாழ்வை நக்கலும், நகைச்சுவையாகவும் நகரும் படைப்புக்கு தனது இசையால் பக்கப்பலம் சேர்த்திருப்பார் இளையராஜா. தொடர்ந்து மணிவண்ணன் இயக்கத்தில் வந்த 'இளமைக் காலங்கள்', 'நூறாவது நாள்', '24 மணி நேரம்', 'விடிஞ்சா கல்யாணம்', 'முதல் வசந்தம்', 'பாலைவன ரோஜாக்கள்', 'ஜல்லிக்கட்டு', 'ராசாமகன்', 'அமைதிப்படை' என ஏராளமான படங்களுக்கு இளையராஜாதான் இசை. மணிவண்ணன் இயக்கத்தில் ஆரம்பக் காலத்தில் வந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படங்களில் எல்லாம் இசைஞானி தனது பின்னணி இசையால் கூஸ்பம்ப்ஸ் மொமன்டுக்களில் மெய் சிலிர்க்கச் செய்திருப்பார்.

ஆர். சுந்தர்ராஜன் - 1982-ல் வெளியான 'பயணங்கள் முடிவதில்லை' தான் இவரது இயக்கத்தில் வந்த முதல் திரைப்படம். சில்வர் ஜூப்ளி ஹிட் அடித்த திரைப்படமான இதில் வரும் 7 பாடல்களுமே சூப்பர் ஹிட். 'இளைய நிலா' பாடலில் வரும் அந்த கிடார் போர்ஷன்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் கேட்டாலும் சலிக்காது. லண்டனின் ட்ரினிட்டி இசைப் பல்கலைக்கழகத்தின் வழங்கிய தங்கப்பதக்கத்துக்கு தான் எத்தனை தகுதியான நபர் என்பதை ராஜா அந்தப் பாடலில் வரும் கிடார் இசையால் மெய்பித்திருப்பார். ஆர். சுந்தர்ராஜன்தான் இளையராஜாவின் இசையில் பாடல்களை மூட்டை மூட்டையாக கட்டி எடுத்துச் சென்றவர். 'வைதேகி காத்திருந்தாள்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'நான் பாடும் பாடல்', 'குங்குமச்சிமிழ்', 'மெல்லத் திறந்தது கதவு', 'என் ஜீவன் பாடுது', 'ராஜாதி ராஜா', 'தாலாட்டுப் பாடவா', 'சாமி போட்ட முடிச்சு', 'திருமதி பழனிசாமி' என அனைத்து படங்களிலும் மியூசிக்கல் ஆல்பமாகவே ஹிட் அடித்த பெருமை இவருடைய படங்களையேச் சேரும்.

பாண்டியராஜன் - பாரதிராஜா பட்டறையில் இருந்து வந்த இயக்குநர்கள் கே. பாக்யராஜுக்கு அவரது இயக்கத்தில் வந்த முதல்படத்துக்கு இளையராஜாவுடன் இணைய முடியவில்லை. ஆனால், அவரது உதவி இயக்குநரான பாண்டியராஜனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. 1985-ஆம் ஆண்டில் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'கன்னிராசி' மற்றும் 'ஆண்பாவம்' இரண்டு படங்களுக்குமே இசை அமைத்தவர் ராஜாதான். நகைச்சுவை கலந்த காதல் கதையைக் கொண்ட இந்த இரு திரைப்படங்களிலும், ராஜாவின் இசையும் பாடல்களும் உற்சாகத்தை தந்திருக்கும். நகைச்சுவைத் திரைப்படங்களை விரும்புகிறவரான இளையராஜா, காமெடி காட்சிகளுக்கான பின்னணி இசையிலும் தனது முத்திரையைப் பதித்திருப்பார்.

சுரேஷ் கிருஷ்ணா - பாலச்சந்தரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய முதல் திரைப்படம் 'சத்யா'. நெறி தவறிய அரசியல்வாதிகளின் கொட்டத்தோடு, சமூக சீர்கேடுகளைத் தட்டிக் கேட்கும் ஓர் கோபக்கார இளைஞனின் கதை தான் இந்தப்படம். 1988-ல் வெளியான இப்படத்தின் நாயகன் கமல்ஹாசன். கமலும் இளையராஜாவும் சேர்ந்தால் திரை அல்ல திரையரங்கே தீப்பிடிக்கும். படத்தின் பின்னணி இசையில் ராஜா மாயம் செய்திருப்பார். இதில் இடம்பெற்ற 'வளையோசை' பாடல் ஜென்-ஸி தலைமுறையிலும் லூப் மோட் பாடலாக இருந்து வருகிறது. இந்தப் பாடலின் ஓப்பனிங்கில் வரும் புல்லாங்குழல் இசைக் கோர்ப்பை எப்போது கேட்டாலும் புல்லரிக்கும். ராஜா ஸ்வரங்களை எழுதி ஸ்ருதியைப் பிடிப்பவர் அல்ல, மனதினுள் புகுந்து உயிரினில் கலப்பவர். புல்லாங்குழலின் துளை வழியே தப்பித் தவ்விக் குதிக்கும் இசையோடு சேரும் லதா மங்கேஷ்கரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்காத மில்லினியல் தலைமுறை மோட்சம் பெறாது. 'இந்திரன் சந்திரன்', 'ராஜா கைய வெச்சா', 'வீரா' உள்ளிட்ட இவரது படங்களுக்கு இளையராஜாதான் இசை அமைத்தார் என்றாலும், 'சத்யா' சுரேஷ் கிருஷ்ணா- இளையராஜாவின் மாஸ்டர் கிராஃப்ட்.

வசந்த் - பாலச்சந்தரின் பட்டறையில் இருந்து வந்த மற்றொரு இயக்குநர் வஸந்த். சிந்து பைரவி, புன்னகை மன்னண் உள்பட 18 படங்களில் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வஸந்த். அவருடைய முதல் திரைப்படம் 1990-ல் வெளிவந்த 'கேளடி கண்மணி'. பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை கதையின் நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 285 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. இதில் இசையமைப்பாளரான ராஜாவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. 'கற்பூர பொம்மை ஒன்று', 'தென்றல்தான்', 'மண்ணில் இந்த காதலன்றி', 'நீ பாதி நான் பாதி' என ராஜா வஞ்சகமின்றி தனது வாஞ்சையை வஸந்துக்கு அள்ளித் தந்திருப்பார். மூச்சுவிடாமல் பாடிய பாடல் என்ற விளம்பரம் படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களின் பெருமையை சற்றே குறைத்துவிட்டதோ என்று இப்போதும் எண்ணத் தோன்றும் வகையில் 'மண்ணில் இந்த காதலன்றி' பாடல் அப்படி கொண்டாடப்பட்டது, இன்றளவும் கொண்டாப்படுகிறது.

கதிர் - 'காதல் தேசம்', 'காதலர் தினம்' படங்களின் இயக்குநர் கதிர். ஓவியக் கல்லூரி மாணவரான அவர் பாக்யராஜ் உள்ளிட்ட பலரிடம் டிசைனராக பணியாற்றியவர். அவரது முதல் திரைப்படம் 1991-ல் வெளியான 'இதயம்'. நாயகியை ஒருதலையாக விரும்பும் நாயகனின் கதை. ரகசியமான காதலின் ரணங்களை திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களுக்கு உணர்த்த வேண்டும். ராஜ வைத்தியக் கருவியான வயலினைத்தான் படம் முழுக்க பின்னணி இசையில் ராஜா பயன்படுத்தியிருப்பார். நாயகியின் அறிமுகக் காட்சியில் தெடங்கி இறுதிக்காட்சி வரை வரும் பின்னணி இசைக்கோர்ப்பின் வழியாக இளையராஜா காதலை அணுஅணுவாக வயலின்களால் மனதுக்குள் விதைத்திருப்பார். கம்பிக் கருவிகளில் காதலைச் சொல்லும் வித்தைக் கற்ற இசைஞானியின் ரொமான்டிக் தீசிஸ்தான் இந்தப் படத்தின் பின்னணி இசை. காதல், வலி, துயர், ரணம், பிரிவு, தனிமை, சோகம், அச்சம்,ஆற்றாமை, தாழ்வு மனப்பான்மை என படத்தில் நாயகன் முரளி காட்டும் அத்தனை முகபாவங்களையும் தனது இசைக்கருவிகளைக் கொண்டு வெளிப்படுத்தியிருப்பார் இளையராஜா. இது எல்லாம் போக கதிருக்கு அடித்த ஜாக்பாட்தான் இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும். அதிலும்,'பொட்டு வைத்த ஒரு வட்டநிலா' பாடல் ஆழ்மனது காதலின் மூழ்கியெடுத்த முத்து.

ஆர்.கே. செல்வமணி - இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இருந்தவர் ஆர்.கே. செல்வமணி. 1990-ல் வெளியான இவரது முதல் திரைப்படமான 'புலன் விசாரணை' இசையமைத்தவர் இளையராஜா. ஆட்டோ ஷங்கர் கொலைகளை மையமாக வைத்து வெளியான இந்தப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சஸ்பென்ஸ், த்ரில் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்துக்கு இளையராஜா தனது வித்தியாசமான பின்னணி இசையால் உயிர் கொடுத்திருப்பார். இந்தப் படத்துக்கு பாடலே தேவையில்லை என ஆர்.கே.செல்வமணி நினைத்திருந்தாலும், படத்தில் மூன்று பாடல்களை இளையராஜா கொடுத்திருப்பார்.

தனது புதுமையான இயக்கத்துக்கு எதிராக பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும், இளையராஜா அவருக்கு உறுதுணையாக இருந்தார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு இளையராஜா வழக்கமாக இருப்பது போல இல்லாமல், புதுமையான ஒலிகளைப் பயன்படுத்தியிருப்பார்.இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'கேப்டன் பிரபாகரன்', 'செம்பருத்தி' உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார். அந்த இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளின் பட்டியலில் எப்போதும் இடம்பெற்றிருப்பவை. இவர்கள் தவிர, பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள், மலையாளத்தில் இருந்து வந்த பாசில் உள்ளிட்ட பிறமொழி இயக்குநர்கள் என புதிய இயக்குநர்கள் பலருக்கும் வழிகாட்டிய, வழிகாட்டும் கலங்கரை விளக்கம் இசைஞானி இளையராஜாவே.....

summary

Ilaiyaraaja was the music composer for the first debut films of hundreds of directors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.