நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

ராகதேவனின் இசையும் இசைக்குழுவும் போற்றுதலுக்குரியதே...

இளையராஜாவின் இசைக்குழுவில் உள்ள இசைக் கலைஞர்கள் பற்றி...

News image

இளையராஜா - DIN

Updated On :2 ஜூன் 2026, 11:31 am IST

ராகதேவன் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று. ஜென் எக்ஸ் தலைமுறையில் தொடங்கிய அவரது இசைப் பயணம், ஜென் ஆல்பா வரை நீடித்து நிலைத்திருக்கிறது. இப்போதும்கூட இன்ஸ்டாவில் இன்ஃபுளுயன்ஸ் செய்யும் ஆற்றல் கொண்டதாக அவருடைய படைப்புகள் உள்ளன. ஜென் எக்ஸ் மற்றும் மில்லினியல் காலத்தில் வெளியான திரைப்படங்களும், பாடல்களும் அதே அளவு உற்சாகத்தையும் புத்துணர்வையும் தற்கால தலைமுறைகளுக்கும் தருவித்துக் கொண்டேயிருப்பதுதான் ஆச்சரியம்.

இளையராஜா தனது இசைப் பயணத்தை தொடங்கிய காலத்தில் இருந்தே தன்னுடன் இணைந்து பயணிக்க ஒரு ரசனை மிகுந்த இசைக் கலைஞர்கள் படையை உருவாக்கினார். தாங்கள் செய்யும் வேலைக்கு ஊதியம் பெறுவதைத் தாண்டி, எப்போது கேட்டாலும் கேட்பவர்களை வசியப்படுத்தும் உயிர்ப்புள்ள இசையைப் படைப்பதே இந்த கலைஞர் படையின் முக்கிய நோக்கம். இளையராஜாவின் படைப்பாக்கம் எத்தனை போற்றுதலுக்குரியதோ, அவரோடு பயணித்த இசைக் கலைஞர்களும் போற்றதலுக்குரியவர்களே.

இந்த இசைக் கலைஞர்களில் சிலர் இறந்துவிட்டனர். அதில், விஜி மானுவல், புருஷோத்தமன், தபேலா கண்ணையா, தபேலா பிரசாத், சசிதரன் முனியாண்டி மற்றும் சுதாகர் முக்கியமானவர்கள். இந்திய திரையிசையை பேரரசர் இளையராஜா ஆண்டபோது, அவருக்கு தோளோடு தோள் நின்ற சிற்றரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் வலம் வந்தவர்கள் அந்த இசைக் கலைஞர்கள். இளையராஜாவின் இசைக்கு ஆத்மாவைக் கொண்டு வந்தவர்கள் இந்த இசைக் கலைஞர்கள்தான்.

விஜி மானுவல் - பேஸ் கிடார், அகௌஸ்டிக் கிடார், டிரம்ஸ் என பல்கலை வித்தகரான விஜி மானுவல், இளையராஜாவின் பிரதான கீ போர்ட் இசைக் கலைஞர். இசைஞானியுடன் சுமார் 40 வருடங்களுக்கும் மேல் இணைந்து பயணித்தவர். 'ப்ரியா', 'புன்னகை மன்னன்', 'ஹே ராம்', படங்கள் ஒரு சில உதாரணங்கள். 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி', 'ஓ பட்டர்ஃப்ளை', இப்படி நாள் முழுக்க பல பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கீ போர்டில் அவர் இளையராஜாவுக்காக பல மாயங்களைச் செய்தவர்.

புருஷோத்தமன் - இளையராஜாவின் பிரதான டிரம்ஸ் கலைஞர். பின்னர், இவர்தான் ராஜாவின் ஆர்கெஸ்ட்ரா கண்டக்டராக இருந்தார். 'நிழல்கள்' திரைப்படத்தில் வரும் 'மடைதிறந்து' பாடலில் டிரம்ஸ் வாசிப்பது போன்ற காட்சியில் தோன்றியிருப்பார். ராஜாவின் வெஸ்டர்ன் வகைப் பாடல்களில் புருஷோத்தமன் வாசித்திருக்கும் டிரம்ஸ் தாள நடைகளை இப்போதும்கூட கேட்டு சிலாகித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஜாஸ், ராப், தொடங்கி உள்ளூர் அடி வரை இளையராஜாவுடன் சேர்ந்து நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் ஏராளம். எந்தவொரு புதிய தாளக் கருவிகள் வாங்கினாலும், அதை ராஜாவின் அனுமதியோடு அதற்கு ஒரு பேட்டன் செட் செய்து வாசித்துவிடும் வித்தகரான புருஷோத்தமன் இளையராஜாவின் வலது கரம் என்றாலும் மிகையல்ல.

கண்ணையா மற்றும் பிரசாத்: இவர்கள் இருவரும்தான் இளையராஜாவின் தபேலா கலைஞர்கள். இப்போதுகூட இளையராஜாவின் பாடல் மறந்தாலும், அவரது தாள நடையை நம் செவியின் வழியே மனதுக்குள் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்கள். இளையராஜா பாடல்கள் என்றாலே, வயலின், புல்லாங்குழல், தபேலாவின் இசை சிறப்பானதாக இருக்கும். அதற்கு காரணம் இவர்கள்தான். இருவரது பங்களிப்பில் இளையராஜா ரசிகர்கள் கேட்டுப் மயங்கிய ஆனந்த ராகங்கள் ஏராளம். அவர்கள் மரித்திருந்தாலும், இளையராஜா இசையில் அவர்கள் வாசித்த ஏராளமான பாடல்களின் வழியே இன்றும் அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.

சசிதரன் முனியாண்டி - இளையராஜாவின் மைத்துனர் சசிதரன். இளையராஜாவிடம் பல ஆண்டுகளாக பேஸ் கிடாரிஸ்டாக இருந்தவர் இவர்தான். எந்த இளையராஜா பாடலைக் கேட்டாலும், அந்த இசைக் கோர்வைகளின் பின்னணியில் மெலிதாக ஒரு அழுந்தும் ஓசையைக் கேட்க முடியும். சந்தேகமே வேண்டாம், அது பேஸ் கிடார்தான். இன்னும் சொல்லப் போனால், இளையராஜா அளவுக்கு திரையிசைப் பாடல்களில் பேஸ் கிடார் என்ற இந்த மேற்கத்திய இசைக் கருவியை பயன்படுத்தியவர்கள் சொற்பமானவர்களே. அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் காதல் ஓவியம், ரெட்டைவால் குருவியில் வரும் கண்ணன் வந்து பாடுகின்றான், பாடல்கள் குட்டி உதாரணங்கள். சற்றே உற்று கவனித்து பாடல்களைக் கேட்டால், இளையராஜாவின் இந்த பேஸ் கிடார் கேட்பவர்களைக் வசீகரிக்கும்.

சுதாகர் - இளையராஜாவின் பிரதான புல்லாங்குழல் இசைக் கலைஞர் சுதாகர். அருண்மொழியின் வருகைக்கு முன்பு வரை வந்த அனைத்துப் பாடல்களுக்கும் சுதாகர்தான் புல்லாங்குழல் இசைக் கலைஞர். வங்கி ஊழியரான இவர் இசையால் ஈர்க்கப்பட்டு வந்துசேர்ந்த இடம் இளையராஜா. சுதாகரின் இசை ஆர்வத்தை பெருக்கியதோடு, திரை ரசிகர்கள் லயித்துப் போகும் பல புல்லாங்குழல் பாடல்களைப் பிரசவித்தார் இளையராஜா. மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' படத்தின் டைட்டில் கார்டு மற்றும் தீம் மியூசிக்கில் ரிக்கார்டர் எனும் குழல் இசைக்கருவியை சுதாகர் பயன்படுத்தி இருப்பார்.

இவர்கள் தவிர, கிடாரிஸ்ட் சதா, புல்லாங்குழல் அருண்மொழி, செனாய் பல்லேஷ், செல்லோ சேகர், மிருதங்கம் சுந்தர், ட்ரம்பெட் மேக்ஸ்வெல், சாக்ஸபோன் ராஜூ, தாளக் கருவிகள் ஜெய்சா உள்ளிட்ட பலர் ராஜாவோடு தொடர்ந்து பயணித்து வருகின்றனர். குறிப்பாக ராஜாவின் குழுவில் வயலின் இசைப்பவர்கள், கோரஸ் பாடுபவர்கள், வீணை, சாரங்கி, நாதஸ்வரம், உள்ளிட்டவைகளை இசைப்பவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டதுதான் இளையராஜாவின் இசைக்குழு. காலம் கடந்து நிற்கும் எத்தனையோ இளையராஜாவின் பாடல்களில் இந்த நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்களும் கலந்தே இருக்கின்றனர். இளையராஜாவை உச்சிமுகரும் ஒவ்வொரு முறையும், இந்த கலைஞர்களும் நினைக்கப்பட வேண்டியவர்களே.

Summary

The musicians in Ilaiyaraaja musical troupe and their importance in his music journey

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.