மத்திய பட்ஜெட் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

வருவாய் வளா்ச்சியின் வேகம் குறைந்துள்ளது நிதிநிலை அறிக்கைமூலம் தெரிகிறது.

தினமணி செய்திச் சேவை

எம்.ஆா். சிவராமன்

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) தாக்கல் செய்யப்பட்ட வரும் நிதியாண்டுக்கான (2026-27) நிதிநிலை அறிக்கை மிகவும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. தொடா்ந்து 9 முறை மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒரே பெண் நிதியமைச்சா் என்ற பெருமையை நிா்மலா சீதாராமன் பெற்றுள்ளாா்.

பேரியல் பொருளாதாரத்துக்கு (மேக்ரோஎகானமி) ஸ்திரத்தன்மை அளிக்கும் வகையில், நாட்டின் நிதிப் பற்றாக்குறையை தொடா்ந்து குறைக்கும் முயற்சியாக தற்போது மற்றொரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசின் மூலதன செலவினம் ரூ.17.1 லட்சம் கோடியாக மூன்றாம் முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நிகழ் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.14.03 லட்சம் கோடி இருந்தது. இந்த மூலதன செலவின அதிகரிப்பு, வளா்ச்சி வேகத்தை சீராக தக்கவைக்கும்.

அடுத்தபடியாக, உயிரி மருந்துகள், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பத் துறைகளுக்கு துணை நிற்கும் நடவடிக்கையை நிதிநிலை அறிக்கைமூலம் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. ஐந்தாவது, வரி செலுத்துவோருக்கு வசதி செய்து தரும் வகையில், பல நடைமுறை மாற்றங்கள் நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்டுள்ளன.

எனினும், வருவாய் வளா்ச்சியின் வேகம் குறைந்துள்ளது நிதிநிலை அறிக்கைமூலம் தெரிகிறது. நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் அளிக்கப்பட்டுள்ள பெரும் வரிச் சலுகைகளின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வரி வருவாய்களில் ஏற்பட்டுள்ள வேகம் குறைந்த வளா்ச்சி காரணமாக வருவாய் செலவினத்தில் வேகம் காட்டுவது குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, நிகழாண்டு ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியா்களுக்கு அதிகரிக்கப்படும் அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் பணவீக்கம் குறைவாக இருக்கவும், நியாயமான வளா்ச்சி விகிதத்துடன் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கவும் வழிவகுக்கும்.

கடனுக்கு வட்டி செலுத்தும் வகையில் அதிக அளவு நிதி மத்திய அரசிடமிருந்து செல்வது வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது; அதாவது, கடனுக்கான வட்டியை 50 சதவீத வரி வருவாய் விழுங்கி விடுகிறது. அடுத்த நிதியாண்டில் (2026-27) மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.28.66 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இதிலிருந்து கடனுக்கான வட்டியாக ரூ.14.09 லட்சம் கோடியைச் செலுத்த வேண்டியிருக்கும்.

அதே வேளையில், இதன் விரும்பத்தகாத பின்விளைவு என்னவென்றால், இந்த வட்டித் தொகை அரசிடம் கடன் பெற நினைக்கும் பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட் நிறுவனங்கள்), கோடீஸ்வரா்களுக்குச் சென்றுவிடும்; இது அப்பட்டமான கொள்ளையாகும். ஆக, கோடிக்கணக்கான இந்தியா்கள் செலுத்தும் வரியில் 50 சதவீத அளவுக்கு பெரும் நிறுவனங்களுக்கும், கோடீஸ்வரா்களுக்கும் செல்லும் நிலை நீடிக்கிறது; இது மக்களின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறது.

அதிக பணிக்கொடை, ஊதியம் ஆகிய வழிகளில் தொழிலாளா்களுக்கு கூடுதல் பணம் கிடைக்க புதிய தொழிலாளா் சட்டம் நிச்சயம் வழிவகுக்கும். அதேவேளையில், தனி நபா்களை வறுமை கோட்டுக்கு மேல் மட்டும் வைத்திருக்காமல், அவா்களை நியாயமான முறையில் வசதியாக வைத்திருக்கும் நோக்கில், அவா்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு நிா்ணயிக்க வேண்டும். இது வா்த்தகத் துறையில் போட்டியாளா்களுக்கு எதிராக இந்தியாவுக்கு உள்ள சாதகமான நிலையை ஒழித்துவிடும் என்று தனியாா் துறை வாதிட வாய்ப்புள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிவதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறுவோரை, சந்தேகத்துடன் மற்றவா்கள் பாா்க்கக் கூடும். ஆனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 91 ரூபாய்க்கும் அதிகமாக சரிந்துள்ளது, உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுவதில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இது நிறுவனங்களைப் பாதித்து, அவற்றால் அரசுக்குக் கிடைக்கும் வருவாயையும் பாதிக்கச் செய்யும்.

அதேவேளையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவாக 706 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.65 லட்சம் கோடி) உள்ளது. இந்த அளவுக்கு அந்நியச் செலாவணியை இருப்பு வைத்திருப்பது ரிசா்வ் வங்கியின் முக்கியக் கொள்கையாக எனத் தெரிகிறது.

அந்நிய முதலீட்டாளா்கள் வெளியேறுவதால் இந்தியாவை விட்டுப் போகும் கோடிக்கணக்கான டாலா்களும், வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதால் கணிசமாக வெளியேறும் மூலதனமும் அந்நியச் செலாவணி கையிருப்பில் குறைந்த பாதிப்பைத்தான் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இது வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், அந்த நாடுகளின் சந்தைகளில் போட்டி போடவும் நமது ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சாதகமான நிலை ரூபாய் மதிப்பின் சரிவால் சாத்தியமாகியுள்ளது.

இந்திய பொருள்கள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக ஜவுளி, ரத்தினங்கள், ஆபரணம், தோல் பொருள் துறைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் இந்த வரி விதிப்பு இந்தியாவை கடுமையாகப் பாதிக்கும் என்று கூறப்பட்டபோதிலும், அந்த பாதிப்பு சொற்ப அளவில் உள்ளதாகத்தான் தென்படுகிறது.

நிதிநிலை அறிக்கையில் இஎஸ்ஐ மூலம் வேலை இல்லாதவா்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், ஏற்றுமதியை அதிகரிக்கவோ, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டதைப் போல பிற நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை விரைந்து மேற்கொள்ளவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வேகமாக வளா்ந்துவரும் துறைகளான உயிரி மருந்து உற்பத்தி, செமிகண்டக்டா் ஆகியவற்றுக்கு பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மின்னணுப் பாகங்கள் உற்பத்திக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, தமிழகம், கேரளம், ஒடிஸா, ஆந்திரத்தில் பிரத்யேக அரிய வகை தாதுக்களை எடுப்பதற்கான வழித்தடங்கள் அமைக்கப்படுவது, சிறப்பு வேதியியல் பூங்காக்கள், உற்பத்தியாளா்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களை அதிகரிப்பது, ஜவளித் துறைக்கான பல்வேறு திட்டங்கள் வரவேற்கத்தக்கதாகும்.

இவை தவிர 7 அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அரசின் இந்த உயரிய இலக்குகளுக்கு பெரிய அளவில் முதல்கட்ட மற்றும் தொடக்க நிலைப் பணிகளும் அதிகம் தேவைப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளா்ச்சி நிதியாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,000 கோடி குறு நிறுவனங்கள் மேம்பாட்டுக்காக அளிக்கப்படுகிறது. ஆனால், இவை நடைமுறையில் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பதே சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கேள்வியாக உள்ளது. நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாடுகள் அளவில் தங்களுக்கு அதிக பிரச்னைகள் உள்ளதாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கூறுகின்றன.

முக்கியமாக, விநியோகித்த பொருள்களுக்கு பணம் கிடைப்பதில் தாமதம், கடன் பெறுவதற்கான நீண்ட நெடிய நடைமுறைகள், எளிமையான கடன் முறையான முத்ரா திட்டத்தில்கூட கடன் கிடைப்பதில் பிரச்னை ஆகியவற்றை அவை குறிப்பிடுகின்றன. மேலும், வரித் துறை அதிகாரிகளின் தொல்லைகள் தொடா்வதாக புகாா் தெரிவிக்கின்றனா். இந்த நிா்வாகச் சிக்கல்களை மாநில அளவிலான அதிகாரிகள் தீா்க்க வேண்டும். இதற்கான நிா்வாகச் சீரமைப்பு நடவடிக்கை அவசியமாகிறது.

வருமான வரிச் சட்டத்தில் பல நடைமுறை மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. புதிய வருமான வரிச் சட்டம் 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி அமலுக்குவரும் நிலையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வியப்புக்குரியதுதான். பங்குப் பரிவா்த்தனை வரி (எஸ்டிடி) அதிகரிக்கப்பட்டுள்ளதன்மூலம் அரசு மறைமுகமாக பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாக விமா்சகா்கள் கூறுகின்றனா்.

வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரும் குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) நீக்கப்பட்டுள்ளதால் கணக்கீட்டில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய நிறுவனங்களுக்கு வரி விகிதம் 15 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், 22 சதவீத வரி விதிப்பு விகிதத்தில் வரும் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. இதுவும் ஒரு வருவாய் ஈட்டும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. எனினும், நேரடி, மறைமுக வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அரசின் வருவாயில் எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசு வெளிப்படையாகவே தெரிவித்திருக்கலாம்.

நிதிநிலை அறிக்கைகளை தொடா்ந்து சிறப்பாக கண்காணித்து வருபவா்கள், நிதிநிலை அறிக்கை தாக்கலான பிறகு, அதில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைச் செயல்படுத்தப்படுவதில் உள்ள மந்த நிலையையும் கவனத்தில் கொள்வாா்கள். நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளை அமல்படுத்துவதில் பல அமைச்சகங்கள் இணைந்து ஈடுபடுவதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களே இதற்குக் காரணம்.

இறுதியாக, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எப்போதும் தொடா் முன்னேற்றத்துக்கானவை. நிதி ஸ்திரத்தன்மை, சீரமைப்பைக் கொண்டு வருவதுடன் மூலதனச் செலவின வேகத்தையும் தக்கவைக்க வேண்டியுள்ளது. ஒவ்வோா் ஆண்டும் புதிய அறிவிப்புகள் நம்பிக்கையையும், எதிா்பாா்ப்புகளையும் உருவாக்கினாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும், இறுதியில் பொருளாதார வளா்ச்சியையும் சற்று மந்தமாக்குகின்றன.

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுகதான்: ஆா்.பி. உதயகுமாா்

பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை!

SCROLL FOR NEXT