குடிமக்களை ஒரு நாட்டில் அந்த நாட்டு அரசு எப்படிப் பார்க்கிறது, எந்தக் கண்ணோட்டத்தில் அவர்களை நடத்துகிறது, குடிமக்கள் தங்களைத் தாங்களே எப்படிப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை வைத்துத்தான் சமூகத்தில் அரசின் செயல்பாடுகளும் மக்கள் செயல்பாடுகளும் வடிவமைத்துச் செயல்படுத்தப்படுகின்றன.
மக்கள் உழைக்காமல் எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு கிடையாது. ஓர் அரசு அதன் குடிமக்களை குழந்தைகளை தாய் நடத்துவதுபோல் நடத்த மக்கள்மேல் கரிசனம் கொண்டு மக்களைத் தயார் செய்ய வேண்டும். மக்களுக்குத் தேவையான சட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்கி, மக்களின் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கான மக்கள் நிறுவனங்களையும், அமைப்புகளையும் உருவாக்கி, அத்துடன் மக்களின் பொருளாதாரச் செயல்பாடுகளுக்குத் தேவையான நிதியை ஏற்பாடு செய்து தந்திடும்.
மக்களின் பொருளாதார மேம்பாடு எதில் நடைபெறும் என்றால், அரசு மக்களுக்கு அளிக்கும் இலவசங்களால் அல்ல. இலவசங்கள் என்பது நேரடியாக மக்களுக்கு ஒரு தொகையைத் தருவது. அதனால், எந்தப் பொருளாதார மேம்பாட்டையும் மக்களுக்குக் கொண்டுவர முடியாது. எப்போது பொருளாதார மேம்பாடு வரும் என்றால் மக்களின் குடும்ப மேம்பாட்டுத் திட்டத்துக்கு தேவையான நிதியைத் தரும்போது மட்டும்தான்.
ஒரு குடும்பம் மேம்பட அதற்கான பொருளாதாரத் திட்டம் இருக்க வேண்டும். அதற்குத்தான் நிதியுதவி அளிக்க நிதியங்கள், அமைப்புகள் தேவை. இந்தச் செயல்பாடுகளைத்தான் மக்களின் மேம்பாட்டுச் செயல்பாடுகள் என்கின்றனர். இந்த நிலைக்கு மக்களைக் கொண்டுவரத் தேவை மக்களுக்கான வழிகாட்டுதல். மக்களை மேம்பாட்டுக்கு ஆசைப்பட வைத்தல். தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்று வளமுடன் எல்லா குடும்பங்களும் மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தூண்டுதலில் மக்களைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்.
இந்த ஆசைகள் நிறைவேற மக்களுக்குத் திறனும், ஆற்றலும், அறிவும் வளர்த்தெடுக்க நிறுவனங்களை நிறுவுதல் வேண்டும். மக்கள் மேம்பாட்டுக்காக அரசு உருவாக்கும் அமைப்புகளை, நிறுவனங்களை குடிமக்கள் தங்கள் நிறுவனங்களாக மாற்றி அவற்றைத் தங்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தும் நிலைக்கு குடிமக்களைக் கொண்டுவர வேண்டும். அந்த நிலைக்கு குடிமக்கள் தன்னெழுச்சியாக வருவதில்லை; அதற்கு ஒரு குடிமக்கள் தயாரிப்பு வேண்டும்.
அதற்கு முதல் நிலை, குடிமக்கள் அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். "என்னை}என் குடும்பத்தை என் அரசு பாதுகாக்கும் மேம்படுத்தும், அதற்கு நான் உழைப்பதற்குத் தயாராக இருக்கிறேன்' என்ற மனப்பக்குவத்துக்கு குடிமக்கள் வர வேண்டும். அந்தச் சிந்தனைச் சூழலை அரசு உருவாக்க வேண்டும்.
குடிமக்களைத் தயார் செய்துவிட்டால், எந்த நிலையிலும் மக்களை அரசு பயனாளியாகவும் பார்க்காது, மனுதாரராகவும் பார்க்காது. குடிமக்கள் தன்முன் வந்து நிற்கும்போது இவர்களுக்காகத்தான் இந்த இடத்தில் நான் இவர்களுக்குப் பணி செய்ய நியமிக்கப்பட்டு இருக்கிறேன், இவர்களுக்கு வழிகாட்டுவது என் பொறுப்பு என்று எண்ணி, அவர்களை மரியாதையுடன் நடத்துவார்கள். அவர்கள் அப்படி அதிகாரிகளால் நடத்தப்படும்போது அவர்கள் தங்கள் அரசின் மீது நம்பிக்கை வைப்பார்கள், அவர்களும் தன்னம்பிக்கை பெறுவார்கள்.
இந்த நிலைக்கு நாடு வருவதற்கு புது உளவியலை அரசுப் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் உருவாக்க வேண்டும். சுதந்திர நாட்டில் அரசு தன்னை எப்படிச் சுதந்திர நாட்டுக்கானதாக மாற்றிக்கொள்ள ஆளுகை நிர்வாகக் கட்டமைப்புக்களை புனரமைத்துச் சீர்திருத்த வேண்டும். மக்களை அடிமை மனநிலையில் இருந்து குடிமக்கள் மனநிலைக்கு மாற்ற வேண்டும். அரசுப் பணியாளர்கள் நிர்வாகத்தை உயர் அதிகாரிகளை எஜமானர்களாகப் பார்த்து செயல்பட்டுக் கொண்டிருப்பதிலிருந்து மக்களுக்குப் பொறுப்புடன் பணி செய்வதுதான் என் பணி, சட்டத்தை சரியாகச் செயல்படுத்துவதுதான் என் பொறுப்பு என்று அச்சமற்று மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாட்டின் மேல் பற்றுக்கொண்டு செயல்படும் மனநிலைக்கு கொண்டுவரவேண்டும். அப்படி மக்களும் அரசும் தயாராக்கப்படும்போது அரசு இயந்திரம் ஒளிவு மறைவற்று வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் தன்மையுடையதாக மாறிவிடும்.
அந்த நிலையில் அரசை மக்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அரசு அதிகாரிகளால் தவறுகள் செய்ய இயலாது. அதே நேரத்தில் தன்மானம் மிக்கவர்களாக அரசு அதிகாரிகள் செயல்படுவார்கள். அவர்களுக்கு தங்கள் பணியில் ஒரு பெருமிதம் கிடைக்கும். மக்களும் தாங்கள் ஏழையாக இருந்தாலும் மரியாதையுடைய வாழ்வை வாழ்வதில் பெருமிதம் கொள்வார்கள். இந்த நிலையை அடைய அரசும் மக்களும் ஒரு பெரிய கனவை பின்புலத்தில் வைத்து கடினமாகச் செயல்பட்டாலன்றி, ஏழைகள் அதிகமான எண்ணிக்கையில் வறுமையிலும் எல்லை இல்லாத ஏற்றத்தாழ்வுகளுடன் வாழும் சூழலில் இதற்கான சாத்தியக் கூறு மிகவும் குறைவு என்பதும் உலகில் நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.
இந்தச் சூழலை ஒரு நாட்டில் உருவாக்க இரண்டு சாத்தியக் கூறுகள் உள்ளன. ஒன்று, ஓர் அரசு தன் அசுர பலத்தால் மக்களை, தான் சொல்வது மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்ப வைத்து கடினமாக உழைக்க வைக்க வேண்டும். அந்த இடத்தில் மக்களாட்சியின் பெரும்பான்மையான அடிப்படைக் கூறுகளை இழக்க வேண்டி வரும்.
இரண்டு, அரசு தன் கரங்களுடன் குடிமக்களின் கரங்களைக் கோக்க குடிமக்களுக்கு அரசின் மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கான அரசுக் கட்டமைப்புக்களை மக்கள் வாழுகிற இடங்கள்வரை உருவாக்கி மக்களைச் செயல்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
முதல்நிலை எளிதானது; அதை சீனாவில் பார்த்தோம்; அது பெரிய நாடு. சிங்கப்பூரில் பார்த்தோம்; அது மிகச் சிறிய நாடு. இரண்டு இடங்களிலும் நெறிமுறைப்படுத்தப்பட்ட மக்களாட்சி என்று கூறுகிறார்கள். இரண்டாவது நிலையில், அரசுடன் மக்களைக் கைகோக்க வைக்க வேண்டுமென்றால் அரசின் தலைமைப் பதவிகளில் இருப்போரும், நிர்வாகத்தில் இருப்போரும் நாட்டின் மீது பற்று வைத்து, மக்களின் மீது பற்று வைத்து நேர்மையாக நடக்கும்போது மட்டும்தான் அதற்கான வாய்ப்பிருக்கும்.
அடுத்து, அவர்கள் நேர்மையுடன் செயல்பட்டாலும் மக்களின் மீது நம்பிக்கையும், மக்களை மதித்து நடத்தும் மனநிலையும் இருக்க வேண்டும். அத்துடன் மக்களுக்கு இலவசங்கள் தருவதற்குப் பதிலாக, அவர்களின் குடும்ப வருமானத்தைப் பெருக்கத் தேவையான அத்தனை வழிமுறைகளையும் உயர்நிலையில் இருந்து சிந்திக்காமல், மக்களிடம் இருக்கும் அறிவின், திறனின், ஆற்றலின் அடிப்படையில், மக்களின் திட்டத்தில் செயல்படக் கொள்கையும் நிதி ஒதுக்கீடும் அந்த இடத்தில் நடைபெறவேண்டும். அது ஒட்டுமொத்த அதிகாரப் பகிர்வில் நடைபெற்று அந்த நாடு உயர்வது; அப்படி உயர்ந்த நாடு ஸ்விட்சர்லாந்து.
இந்த பின்புலத்தில் இந்திய நாட்டின் மேம்பாட்டு வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நமக்குப் புலப்படுவது வளர்ச்சி அல்லது மேம்பாட்டுக் கோட்பாட்டுக்கு நேர் எதிர்மறையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடாக நம் நாடு இருக்கிறது. மக்களுக்கு வெகுதொலைவில் அரசுக் கட்டமைப்புகள் இருக்கின்றன. மக்களை அந்நியப்படுத்தி அரசு தொலைவில் வைத்துக் கொள்கிறது. மக்களுக்கு எதையாவது கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அவை அனைத்தும் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள என்பதைவிட, தேவையோ தேவை இல்லையோ, எதாவது ஒரு பொருளாதாரச் சலுகையைக் கொடுப்பது. மக்களும் பயனாளியாக இருக்க, மனுதாரராக இருக்கப் பழகி, சுகமும் கண்டுகொண்டு விட்டனர்.
அரசைப் பிடிக்கத் தெரிந்தவருக்கு அரசு வேலை செய்கிறது. பதவிகளைப் பிடித்தவர்களுக்கும் திட்டங்களைப் பிடித்தவர்களுக்கும் மேம்பாடு சாத்தியமானது. இந்த இரண்டுமே இந்தியாவில் ஏழைகளுக்குச் சாத்தியப்படவில்லை. காரணம், ஏழைகளுக்கு அரசுடன் இணையத் தெரியவில்லை. அத்துடன் அவர்களுக்கு அரசு ஆளுகை, நிர்வாகம் குறித்து தெரியாத நிலையில் பயனாளியாக-மனுதாரராக இருக்கவே விரும்புகின்றனர். இதன் விளைவுதான், மக்களுக்குச் சேரவேண்டியது சேராமல் ஊழலாக ஒரு குறிப்பிட்ட வர்க்கங்களுக்குப் பலன்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. மக்களாட்சியில் இருக்கும் மாபெரும் ஆயுதம் வாக்குரிமை-வாக்குச் சுதந்திரம். அதையும் ஏழை மக்களின் ஏழ்மையையும் அவர்களிடமுள்ள அறியாமையையும் பயன்படுத்தி அந்தச் சுதந்திரத்தையும், உரிமையையும் விலை கொடுத்துப் பறித்து, மக்களாட்சியை மாண்பற்றதாக வைத்துள்ளது இந்திய நாட்டுக்கு தலைகுனிவான செயல்.
இந்தச் சூழலை வென்றெடுப்பது எப்படி என்பதுதான் இன்று பெரும் மாற்றம் இந்திய நாட்டில் வரவேண்டும் என்று எண்ணுகின்ற அனைவருக்கும் எழும் பெரும் கேள்வி. இதற்குத் தேவை மக்களுடன் செயல்பட, மக்களுக்கு வழிகாட்ட, மாற்றுத் தலைமை ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு நகர வார்டுக்கும் தேவை. அந்தத் தலைமை என்பது மக்களை மேய்க்கும் தலைமை அல்ல; மக்களுக்கு வழிகாட்டும் தலைமை. அது ஒற்றைத் தலைமை அல்ல; அது ஒரு கூட்டுத் தலைமை. அந்தத் தலைமை அதிகாரத் தலைமை அல்ல, அது பொறுப்புக்கான ஒரு கூட்டுத் தலைமை.
நகரமோ கிராமமோ அந்தந்த கிராமத்தை மேம்படுத்த நாங்கள் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம் என்று தயாராகி ஒன்றிணைந்து மக்களை மேம்பாட்டுப் பணிகளில் இணைக்க வேண்டும். அது அங்கு உள்ள குப்பை மேலாண்மை செய்வதாக இருக்கலாம், கிராமத்தை தூய்மை செய்வதாக இருக்கலாம், பள்ளிக்கூடத்தை கல்விக் கோயிலாக மாற்றுவதாக இருக்கலாம், இல்லங்களை செம்மை இல்லங்களாக மாற்றுவதாக இருக்கலாம். இதுபோன்று எண்ணற்ற செலவில்லாச் செயல்பாடுகள் செய்வதற்கு மக்களைத் தயார் செய்யும்போது, அங்கே மிகப் பெரிய மக்கள் சக்தி ஒருங்கிணைந்து உருவாகும்; கட்சிகளைக் கடந்து, ஜாதிகளைக் கடந்து... அந்த சக்திதான் மக்கள் சக்தி மகத்தான சக்தி. அதை நோக்கிச் செயல்பட நாம் தயாராக வேண்டும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.