தொடர வேண்டும் மாற்றம்!
உலகில் தோன்றிய இளைஞர்களின் எழுச்சி என்பது ஆக்க சக்தியாகவும் இருந்திருக்கிறது; அழிவு சக்தியாகவும் இருந்திருக்கிறது. அந்த இளைஞர்களை வழிநடத்துபவர்களின் போக்கைப் பொருத்து அது அமைகிறது.
எஸ். ராமசிவசாமி
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படை திரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
இளைஞர்களின் எழுச்சி என்பது எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. பல சமயங்களில் அது "நீறு பூத்த நெருப்பாகவும்' ஆவதுண்டு. ஆங்காங்கே ஓர் இனக்குழுவாகவும், செயல்படுபவர்களையும் பல சமயங்களில் காண முடியும். ஹிட்லர் போன்ற சர்வாதிகார அரசைக் கட்டமைக்கவும், நாடுகளைக் கைப்பற்றவும் பயன்படுத்தப்பட்ட ராணுவ அமைப்பில் செயலாற்றியவர்களும் பெரும்பங்கு இளைஞர்களே.
Advertisement
Advertisement
ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியும், ஸ்டாலின் ஏற்படுத்திய சாம்ராஜ்யமும், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட புரட்சியின் வெளிப்பாடே. உலகில் தோன்றிய இளைஞர்களின் எழுச்சி என்பது ஆக்க சக்தியாகவும் இருந்திருக்கிறது; அழிவு சக்தியாகவும் இருந்திருக்கிறது. அந்த இளைஞர்களை வழிநடத்துபவர்களின் போக்கைப் பொருத்து அது அமைகிறது.
"நூறு இளைஞர்களைக் கொடுங்கள், நான் நாட்டையே மாற்றித் தருகிறேன்' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். நாடு சுதந்திரத்துக்காக போராடிய காலகட்டங்களிலும், அந்தந்த காலகட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது.
நாட்டுக்காக உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருந்த பகத் சிங், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற வீரர்கள் அனைவரும் இளைஞர்களே. மகாத்மா காந்தி வயதானவராக போராடிய போதும், அவரது அனைத்துப் போராட்டங்களிலும் பெருமளவில் பங்கேற்றவர்கள் அப்போதைய இளைஞர்களே.
மகாத்மா காந்தி காலத்துக்கு முன்பும், பல்வேறு போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்றது. மகாத்மா காந்தியைப் போல பல மடங்கு போராடிய, அவரைவிட பல மடங்கு தியாகங்கள் செய்த தலைவர்களும் இருந்தார்கள். ஆனால், மகாத்மா காந்திக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று?
ஆங்காங்கே சிற்றரசர்களால் போராட்டமாக வெடித்த போதும், வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்த இளைஞர்கள் கூட்டம் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய போதும், அதை பிரிட்டிஷ் அரசு லாவகமாக கையாண்டது. ஆனால், மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட இளைஞர் படை ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அகண்ட பாரதம் முழுவதும் அகிம்சை அறப் போராட்டமாக எழுச்சியாக உருவெடுத்தபோது, அதை அடக்க முடியாமல் பிரிட்டிஷ் அரசு தடுமாறியது.
இத்தகைய இளைஞர்களை நெறிப்படுத்தியும் ஒருங்கிணைந்த இந்தியா முழுவதும், சமூக ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில், செய்தித்தாள்கள், கடிதங்கள் மூலமாக இளைஞர்களை ஒருங்கிணைத்து எழுச்சியுறச் செய்து, அறவழியில் கொள்கைப் பிடிப்புடன் வழிநடத்திய மகாத்மா காந்தியின் அணுகுமுறையால், பிரிட்டிஷ் அரசின் மன உறுதி சீர்குலைக்கப்பட்டு, பின்வாங்கும் முடிவை அவர்கள் எடுத்தார்கள். நாடும் விடுதலை பெற்றது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், இளைஞர்களின் மாணவர்களின் மாபெரும் எழுச்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து, 1967-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சியில் அமர்ந்தது. அந்த வெற்றி எளிதில் பெற்ற வெற்றி அல்ல. சுமார் 20 ஆண்டுகால முயற்சி, உழைப்பு.
பிறகு அண்ணாவின் மறைவையடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது இளைஞர்களின் பெரும் ஆதரவே அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கும் இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் எழுச்சிதான் காரணம். ஆனால், அது "மௌனப் புரட்சி'யாக யாரும் ஊகிக்க முடியாத அளவுக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், இத்தகைய கவர்ச்சி இல்லாமலும் அது சாத்தியமாகாது என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.
இத்தகைய ஆட்சி மாற்றம் உண்மையில் மக்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றத்தைத் தருமா என்பதில்தான், நிறைய எதிர்பார்ப்பும் நடைமுறைச் சிக்கலும் இருப்பதைக் காண முடிகிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகு, பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆளும்கட்சியில் சேர்வதைப் பார்க்கும் போது, வருங்கால தேர்தலை மனதில் கொண்டுதான் அவர்கள் செல்கிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
குறிப்பாக, உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து கட்சி மாறுகிறார்கள். இதில் ஊழல்வாதிகளும் பெருமளவில் அடக்கம் என்பதே உண்மை. அவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டால் தேர்தல் நேரத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்படலாம். மேலும், அந்த இளைஞர்களின் உழைப்பும் கேள்விக்குள்ளாகும் நிலை வரலாம்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பளித்ததைப்போல, உள்ளாட்சித் தேர்தலிலும் படித்த, சாமானிய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் போது அதுவே உண்மையான மாற்றமாகவும், மக்களின் நன்மதிப்பை தொடர்ந்து தக்க வைக்கவும் ஆளும் கட்சிக்கு உதவும். பொறுத்திருந்து பார்ப்போம்; இந்த எழுச்சி மாற்றம் தருமா என்று...