முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

தியாகத்தின் உருவம்!

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தனது ஆசைகள், கனவுகளை தியாகம் செய்து உழைக்கும் மகத்தான மனிதர் தந்தை.

Updated On : 20 ஜூன் 2026, 4:31 am IST
தியாகத்தின் உருவம்! - கோப்புப்படம்
பகிர்:

- முனைவர் இளங்கோ கட்டிமுத்து

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை. தாய் அன்பின் உருவமாகக் கருதப்படுகிறார் என்றால், தந்தை தியாகத்தின் உருவமாகக் கருதப்படுகிறார். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தனது ஆசைகள், கனவுகளை தியாகம் செய்து உழைக்கும் மகத்தான மனிதர் தந்தை.

அவர்களது பங்களிப்பை நினைவுகூரவும், நன்றியை வெளிப்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை 'தந்தையர் தினம்' கொண்டாடப்படுகிறது.

Advertisement

Advertisement

அமெரிக்காவில்தான் தந்தையர் தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. சோனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண்மணியின் தந்தை வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட், தனது மனைவி இறந்த பிறகு ஆறு குழந்தைகளை தனியாளாய் வளர்த்தார். அவரது தியாகத்தையும் அன்பையும் போற்றும் வகையில் தந்தையருக்கென ஒரு சிறப்பு நாள் இருக்க வேண்டும் என்று சோனோரா முதன்முதலில் முன்மொழிந்தார். இதன் விளைவாக 1910-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

பின்னர், இந்த நாள் உலகம் முழுவதும் பரவி, பல நாடுகளில் முக்கியமான குடும்ப விழாவாக மாறியது. இன்று, உலகில் தந்தையர் தினம் நாட்டின் மரபுகள், வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களைப் பொருத்து பல்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 1966-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் லிண்டன் பி.ஜான்சன் என்பவர் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1972 -இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனால் "தந்தையர் தினம்' தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் சர்வதேச தந்தையர் தினம் சுமார் 52 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தந்தையர் தினம் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், தந்தையர் தினம் எல்லா நாடுகளிலும் ஒரே தேதியில் கொண்டாடப்படுவதில்லை. சில நாடுகள் நிலையான தேதிகளைப் பின்பற்றுகின்றன; மற்றவை வெவ்வேறு ஞாயிற்றுக்கிழமைகளையோ அல்லது உள்ளூர் மரபுகளையோ பயன்படுத்துகின்றன.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இந்தத் தேதியை (ஜூன் மூன்றாவது ஞாயிறு) பகிர்ந்து கொள்கின்றன. இருப்பினும், குறிப்பிடத்தக்க பிராந்திய வேறுபாடுகள் உள்ளன. ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடுகின்றன.

தந்தையின் வாழ்க்கை முழுவதும் தியாகங்களால் நிரம்பியதாகும். தனது குழந்தைகள் நல்ல கல்வி பெற வேண்டும் என்பதற்காக அவர் கடுமையாக உழைக்கிறார். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தனது தேவைகளைக்கூட புறக்கணிக்கிறார்.

ஒரு குழந்தையின் மனநிலை, சிந்தனை, லட்சியம் ஆகியவற்றில் தந்தையின் பங்கு மிகப் பெரியது. தந்தையின் அறிவுரைகளும் அனுபவங்களும் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன. தந்தையுடன் நல்ல உறவு கொண்ட குழந்தைகள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் பொறுப்புணர்வு கொண்டவர்களாகவும் வளர்கிறார்கள் என்று பல

ஆய்வுகள் கூறுகின்றன. தந்தையின் ஊக்கமும் ஆதரவும் குழந்தைகளின் கல்வி, விளையாட்டு மற்றும் பிற திறமைகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

காலம் மாறினாலும் தந்தையின் பொறுப்புகள் குறையவில்லை. மாறாக, அவை மேலும் விரிவடைந்துள்ளன. இன்றைய தந்தைகள் குடும்பத்துக்காக உழைப்பதுடன் மட்டுமல்லாமல், குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், மனநலன் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.

பிரசவ அறையின் வாசல் முதல், தன் பிள்ளையை கல்லூரி சேர்க்கும் வரை, கால் கடுக்க காத்திருப்பவர்தான் தந்தை. தமக்கு ஆடை வாங்கும்போது விலையையும், குழந்தைகளுக்கு வாங்கும்போது தரத்தையும் பார்ப்பவர். மெழுகுவர்த்தியாய் தன்னையே அழித்து குடும்பத்துக்காக வெளிச்சம் கொடுக்கும் தியாக திருஉருவங்கள் அப்பாக்கள்!

போராடும் குணத்தை, துணிச்சலைக் கற்றுத் தந்தவர் தந்தை. பிள்ளைகளின் முகத்தில் புன்னகையைக் காண, தன் முதுகுக்கு பின்னால் சோகத்தை மறைக்கும் தந்தையருக்கு நன்றி சொல்லும் விழா தந்தையர் தினம்.

10 வயது வரை என் தந்தையைவிட பலசாலி யாரும் இல்லை; என் தந்தைக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறோம். 15 வயதுக்குப் பிறகு தந்தை இந்தக் காலத்துக்கு பொருந்தாத ஆள் என்று நினைக்கிறோம். 20 வயதுக்கு மேல் என் தந்தைக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம்; 30 வயதுக்கு மேல் தந்தையிடம் ஆலோசனை கேட்டால் நல்லது என்று நினைக்கிறோம்; 40 வயதுக்கு மேல் இந்த பிரச்னைக்கு தந்தை இருந்திருந்தால் நல்ல தீர்வு சொல்லியிருப்பார் என்று நினைக்கிறோம்; இது அனைவரின் வாழ்விலும் நடைபெறும் விஷயம். தந்தையை நாம் புரிந்துக் கொள்ள வயதும் அனுபவமும் தேவைப்படுகிறது.

நமது நன்னடத்தை, சாதனைகளுமே தந்தைக்கு நாம் அளிக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு. அவர்களின் அறிவுரைகளை மதித்து நடப்பதும், அவர்களுக்கு உதவுவதும், அவர்களின் உழைப்பைப் புரிந்துகொள்வதும் நமது கடமையாகும். வயதான காலத்தில் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் கவனித்துக் கொள்வதும் பிள்ளைகளின் பொறுப்பாகும்.

நாளை (ஜூன் 21) தந்தையர் தினம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments