வேர்களும் மரங்களும் வரம்!
மனித வாழ்வும் இயற்கைச் சூழலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
-முனைவர் இளங்கோ கட்டிமுத்து
மனித வாழ்வும் இயற்கைச் சூழலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. பூமியின் இயற்கை சமநிலையைக் காக்கும் இயற்கை வளங்களில் காடுகள் முதன்மையானவை. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் வாழ்க்கையின் ஆதாரமாக காடுகள் விளங்குகின்றன. 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற 16-ஆவது ஐரோப்பிய விவசாய மாநாட்டில், காடுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன், மார்ச் 21-ஆம் தேதி "வன தினம்' கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. 2012-ஆம் ஆண்டு ஐ. நா. சபையின் அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதி "உலக வன தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மரங்கள் அடர்ந்த நிலப் பகுதி காடு அல்லது வனம் என்றழைக்கப்படுகிறது. வனம் என்பது காட்டு விலங்குகளுக்கு உரியது; காடுகள் உலகின் உயிர் நாடிகள். ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என ஐ.நா. சபை கூறுகிறது.
காடுகள் பூமியின் "பச்சை நுரையீரல்' என்றும் அழைக்கப்படுகின்றன. மரங்கள் கரியமில வாயுவை உறிஞ்சி, பிராண வாயுவை வெளியிடுவதால் காற்றின் தரம் சுத்தமாகிறது. காடுகள் பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
காடுகள், மழைச் சுழற்சிக்கு காரணமாகின்றன. காடுகள் அதிகமாக உள்ள பகுதிகளில் மழை அளவும் அதிகமாக இருக்கும். மரம் என்பது வரம்! ஒரு மரம் பூமிக்கு மேலே எப்படி குடை பிடிக்கிறதோ, அதைப் போலவே வேர்களும் பூமிக்குக் கீழே குடை விரிக்கின்றன.
மண் பாதுகாப்பிலும் காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரங்களின் வேர்கள், மண்ணை உறுதியாகப் பிடித்திருப்பதால், மண் அரிப்பு ஏற்படுவதைக் குறைக்கின்றன. காடுகள் இல்லாத இடங்களில் மழை பெய்யும்போது, மண் எளிதாகச் சரிந்து போகும். இது நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, காடுகள் இயற்கைப் பாதுகாப்புச் சுவராக செயல்படுகின்றன.
உலகில் உள்ள பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் காடுகள் விளங்குகின்றன. பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் தாவரங்கள் காடுகளில் வாழ்கின்றன. இந்த உயிரினங்களின் வாழ்க்கை காடுகளின் மீது முழுமையாகச் சார்ந்துள்ளது. காடுகள் அழிந்தால், இந்த உயிரினங்களின் வாழ்விடமும் அழிந்து விடும். இதனால், பல உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன. எனவே, உயிரின பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும் காடுகள் மிகவும் அவசியமானவை.
பழங்குடியினர் மற்றும் கிராமப்புற மக்கள் காடுகளின் வளங்களை நம்பி வாழ்கின்றனர். அவர்கள் காடுகளில் இருந்து கிடைக்கும் மரப்பொருள்கள், மூலிகைகள், தேன் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை நடத்துகின்றனர். எனவே, காடுகள் சமூக, பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு பிராண வாயுவை சுவாசிக்கிறான் என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு பிராணவாயு சிலிண்டரின் விலை ரூ. 700 என்று வைத்துக் கொண்டாலும் மூன்று சிலிண்டர்களின் விலை ரூ. 2,100. மனிதனின் சராசரி ஆயுள் காலம் 60 வயது என்று வைத்துக்கொண்டால்கூட, ஓராண்டுக்கு ரூ. 4 கோடிக்கும் அதிகமாக செலவாகும். இவ்வளவு விலை உயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக் காற்றை நமக்காக மரங்கள் இலவசமாகத் தருகின்றன.
ஆனால், இன்றைய உலகில் பல்வேறு காரணங்களால் காடுகள் அழிவைச் சந்தித்து வருகின்றன. சாலைகள், ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. வனப் பகுதியில் காட்டுத் தீயால் மரங்கள் எரிந்து சேதமடைகின்றன. மக்கள் பயன்பாட்டுக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளாக மாறுவதால் காடுகளின் அளவு குறைகிறது.
உலக வனத் துறை சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும்போது, அதற்குப் பதிலாக 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் ஒரு சதவீதம் மட்டுமே மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவரும் வீடுகளில் மரம் வளர்ப்பதுடன், ஏற்கெனவே இருக்கும் மரங்களைப் பராமரித்தால் வனங்களைப் பாதுகாக்கலாம்.
மனிதனுக்காக மட்டும் இந்த உலகம் படைக்கப்படவில்லை; ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் பொதுவானது. நீரும், நிலமும், காற்றும், ஆகாயமும், ஏன் அண்டவெளியும் எனக்கானது, என்னுடையது என்ற மனிதனின் குறுகிய எண்ணம்தான் காடுகள் ரிசார்ட்டுகளாக மாறவும், யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டவும், வன உயிர்களை மருந்துக்காகவும், அலங்காரப் பொருள்களுக்காகவும் வேட்டையாடவும் துணிச்சலைத் தந்திருக்கிறது.
மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும். ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. காடுகள் செழிப்பாக இருந்தால்தான், நாடு செழிப்பாக இருக்கும். காட்டு வளமே நாட்டுவளம். காடழிந்தால் நாடழியும் என்பது ஆன்றோர் வாக்கு.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண். (குறள் 742)
தூய்மையான நீரும், நிலமும், மலைப் பகுதியும், நிழலை அணியாக அணிந்த காட்டுப் பகுதியும், அதாவது வெயில் நுழைவு அறியாதவாறு மர அடர்வு கொண்ட காட்டுப் பகுதியும் ஒரு நாட்டின் பாதுகாப்பை, அதன் நல் இருப்பை உறுதி செய்யும் என்று திருவள்ளுவர் விளக்குகிறார்.
ஆண்டுதோறும் உலக வன தினத்துக்கு ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் அறிவிக்கப்படுகிறது. "காடுகள் மற்றும் பொருளாதாரங்கள்' என்பது நிகழாண்டின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை இந்தியாவுக்கான தேசியப் பணி, தேசிய காடு வளர்ப்புத் திட்டம், பாலைவனமாக்குதலை எதிர்த்து தேசிய செயல் திட்டம், வன தீத் தடுப்பு மற்றும் மேலாண்மைத் திட்டம் போன்ற முயற்சிகளை அரசு முன்னெடுத்து வருகிறது. தமிழக வனத் துறை சார்பில், கோவை மாவட்டம், காந்திபுரத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பசுமைக் காடுகள் இல்லையேல் மழை இல்லை. மழையின்றி மண்ணுயிர் இல்லை என்று திருவள்ளுவரும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கில், "பசுமை தமிழ்நாடு இயக்கம்' 2022}இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 12,000 ச.கி.மீட்டர் பரப்பளவில் 265 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வனத் துறை சார்பில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், பல்வேறு துறைகள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், தனி நபர்கள் இணைந்துள்ளனர். பசுமை தமிழ்நாடு வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 லட்சம் பாரம்பரிய வகை மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளுக்கு புகலிடமாக காடுகள் விளங்குகின்றன; வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துகின்றன; மண் அரிப்பைத் தடுக்கின்றன; மருந்து மூலங்கள் தருகின்றன; வெப்பமயமாதலைக் குறைக்க உதவுகின்றன. காடுகளில் இருந்து பலவிதமான உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. எனவே, மரங்கள் ஒரு வரம், மரங்களே நாட்டின் வளம்.
மார்ச் 21-ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச வன தினத்தையொட்டி, நாம் அனைவரும் "ஒரு மனிதன்-ஒரு மரம்' என்ற எண்ணத்துடன் மரக் கன்றுகளை நட்டு இயற்கையைப் பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும். நாம் இன்று காடுகளைக் காப்பாற்றினால்தான் எதிர்காலத் தலைமுறையினர் பசுமையான பூமியில் ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஒருபுறம் காடுகள் அழிப்பு; மறுபுறம் காடுகள் உருவாக்கம் என இரண்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. உலக அளவில் காடுகள் அழிவதால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனி மனிதச் செயல்பாடுகளால் நாம் ஒன்றிணைந்து, வரும் 2030}ஆம் ஆண்டுக்குள், இந்த விகிதத்தைக் குறைத்து, காடுகளின் பரப்பளவை அதிகரிப்போம் என்ற உணர்வால் ஒன்றிணைவோம்.
காடுகள் அழிவதில்லை; அழிக்கப்படுகின்றன. வனத்தைப் பெருக்குவதிலும், பாதுகாப்பதிலும் அரசுக்கும், வனத் துறைக்கும், சுற்றுச்சூழல் துறைக்கும் மட்டும் பொறுப்பல்ல. அது அவர்களுடைய பணியே, மாறாக அது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமை.
காடுகள் பூமியின் உயிர் வளமாகும். அவை மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமாக உள்ளன. காடுகள் இல்லாமல் பூமியின் இயற்கை சமநிலை குலைந்து விடும். எனவே, காடுகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் கடமையாகும். "காடு காக்கும் மனிதன் உலகைக் காக்கிறான்' என்ற உண்மையை உணர்ந்து, காடுகளைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த தலைமுறையினர் பாதுகாப்பாக வாழ காடுகளை அழிக்காமல் பாதுகாப்போம்.
நாளை (மார்ச் 21) உலக வன தினம்.
கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).