பொருளாதார சமநிலை இல்லாத வளர்ச்சி
உலகின் வளர்ச்சியானது சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
முனைவர் ஹாஜா முகைதீன்
புவிசார் அரசியல் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலை, சுற்றுச்சூழல் பாதிப்புகள், கட்டாய இடம் பெயர்தல் ஆகியவற்றால் பட்டினி பேரழிவை நோக்கி ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன என்று உலக பட்டினி குறியீடு - 2025 அச்சமூட்டிய நிலையில், தற்போதைய உலக சமத்துவமின்மை அறிக்கை-2026 ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்துகிறது.
பாரிஸில் செயல்படும் உலக சமத்துவமின்மை ஆய்வகம், பொருளாதார அறிஞர்களான லூகாஸ் சான்செல் ரெக்கார்டு, ரிக்கார்டோ கோமஸ்-கரெரா, ரோவைடா மோஷரிஃப், தாமஸ் பிக்கெட்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் உதவியோடு தயாரித்த உலக சமத்துவமின்மை அறிக்கை-2026 வருமானம், சொத்து, பாலினம், வாங்கும் திறன் உள்ளிட்டவற்றில் உலக அளவிலும் இந்தியாவிலும் அதிக அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை வெளிக்கொணர்ந்துள்ளது.
Advertisement
2018, 2022-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக இந்த அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. உலக மக்கள்தொகையில் 10% நபர்களின் வருமானம் மீதமுள்ள 90% மக்களின் வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. உலகின் 53% வருமானத்தை முதல் 10% மக்கள் கொண்டுள்ளனர்.
முதல் 10% செல்வந்தர்களிடம் உலகின் சொத்துகளில் 75% உள்ளன. அவர்களில் முதல் 1% செல்வந்தர்கள் 37% சொத்துகளை வைத்துள்ளனர். உலக மக்களில் பாதி பேர் வைத்துள்ள சொத்துகளைவிட இது 18 மடங்கு அதிகமாகும். அடித்தட்டில் வாழும் 50% மக்களின் சொத்துகள் வெறும் 2% மட்டுமே 60,000 நபர்களின் கையில் உலகின் பாதி பேரின் சொத்துகளைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான சொத்துகள் உள்ளன. உலகின் சொத்துகளில் இவர்களின் பங்கு 4%-லிருந்து 6%-ஆக உயர்ந்துள்ளது.
கீழ்த்தட்டில் உள்ளவர்களின் சொத்துகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக செல்வந்தர்களின் சொத்துகள் வளர்ந்துள்ளது. காலநிலை மாற்றத்துக்குக் காரணமான கார்பன் வெளியேற்றத்தில் உலகின் ஏழ்மையான 50% மக்களின் பங்கு வெறும் 3% மட்டுமே. அதேசமயம் முதல் 10% செல்வந்தர்கள் தங்களின் முதலீட்டுத் தொழில்கள், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்புகள் மூலம் வெளியேற்றுகிற கார்பனின் அளவு 77% ஆகும். மேலும், முதல் 1% செல்வந்தர்களின் பங்கு கார்பன் வெளியேற்றத்தில் 41% ஆகும். குறைந்த வருமான நாடுகளின் ஏழ்மையான மக்கள் இதன் அபாயங்களை முழுமையாக எதிர்கொள்கின்றனர்.
ஊதியம் வழங்கப்படுவதிலும் பாலின ரீதியான ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. குறிப்பாக, அமைப்புசாரா துறையில் அதிகமாக உள்ளன என அறிக்கை கூறுகிறது. ஊதியம் இல்லாத வீட்டு வேலை செய்யும் நேரத்தையும் சேர்த்தால் பெண்கள் வாரத்துக்கு சராசரியாக 53 மணி நேரம் உழைக்கிறார்கள். ஆண்கள் 43 மணி நேரமே உழைக்கிறார்கள். ஊதியம் இல்லாத வீட்டு வேலையை நீக்கினால்கூட ஆண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 61% மட்டுமே பெண்கள் பெறுகிறார்கள் என்றும், ஊதியம் இல்லாத வீட்டு வேலையையும் சேர்த்தால் இந்த விகிதம் 32% மட்டுமே என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
பெண் தொழிலாளர்களின் வருமானம் 1990-களுக்கு பிறகு உயரவே இல்லை என்பதுடன், அவர்களின் சேமிப்புத் திறனும் அரசியல் பங்கேற்பும் தொழில் வாய்ப்புகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதையும் இந்த அறிக்கை தெளிவாக்கியுள்ளது.
இந்தியாவின் முதல் 10% பணக்காரர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் 58% ஈட்டுகின்றனர். கீழ்மட்டத்தில் இருக்கும் 50% மக்கள் 15% வருமானத்தை மட்டுமே ஈட்டுகின்றனர். நாட்டின் மொத்த சொத்துகளில் 65% சொத்துகளை மேல் தட்டில் உள்ள முதல் 10% பணக்காரர்கள் வைத்துள்ளனர். அவர்களில் 1% பணக்காரர்கள் 40% சொத்துகளை வைத்துள்ளனர்.
கீழ்த்தட்டில் வாழும் 50 % சதவீதத்தினரின் சொத்துகள் 6% விட குறைவானதாகும். இந்தியாவில் வருமானம் மற்றும் சொத்துகள் பகிர்வில் மிகப் பெரும் அளவில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதாகவும் கடந்த பத்தாண்டுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் வரும் காலங்களில் இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்புகளும் தெரியவில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
உலக சராசரியான 34 சதவீதத்தைவிட மொத்த உழைப்பாளர் வருமானத்தில் 18 சதவீதத்தை மட்டுமே பெண் தொழிலாளர்கள் இந்தியாவில் சம்பாதிக்கின்றனர். மேலும், தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு 15.7 % மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நவீன தாராளமய வரிவிதிப்பு கொள்கைகள் பணக்காரர்களின் மீதான வரிக் குறைப்பைத் தொடர்ந்து ஆதரிப்பதே ஏற்றத்தாழ்வு நீடிக்கவும், அதிகரிக்கவும் காரணம் என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கல்வி, சுகாதாரம், காலநிலை சவால்கள் மீதான அரசின் செலவினங்கள் குறைவதற்கும் இத்தகைய வரி முறையே காரணம் என்றும் கூறுகிறது.
மக்கள் நலன் நாடும் அரசாகச் செயல்படுவதற்கு தேவையான வருமானத்தை திரட்டவும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் வழிவகை செய்கிற முற்போக்கான வரி விதிப்பு அவசியம்.
ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க வழி கண்டுபிடிக்காமலும் சமத்துவத்தை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்காமலும் பூமி வெப்பமயமாதலைத் தடுப்பது குறித்துக் கற்பனை செய்யவே முடியாது. சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் பொருளாதார அறிஞர்கள் மட்டுமல்லாது, அரசியல், மானுடவியல், சமூகவியல் மற்றும் வரலாற்று அறிஞர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என தாமஸ் பிக்கெட்டி குறிப்பிடுவதாக புதுவை பல்கலைக்கழக பிரெஞ்சு துறை முன்னாள் தலைவர்.எஸ்.ஆர் கிருஷ்ணமூர்த்தி பதிவிட்டுள்ளார்.
உலகின் வளர்ச்சியானது சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.