முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

நாட்டின் முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பங்களைப் பற்றி...

Updated On : 11 மே 2026, 5:00 am IST
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்
பகிர்:

- முனைவர் இளங்கோ கட்டிமுத்து

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 1998-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் ஆராய்ச்சியாளருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தலைமையில், அணு சக்தி துறையின் தலைவராகப் பணியாற்றிய முனைவர் ஆர். சிதம்பரம் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இரண்டாவது முறையாக 'ஆபரேஷன் சக்தி' என்ற பெயரில், மூன்று அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தி இந்தியா முதல் வெற்றி கண்டது. மேலும் இரு சோதனைகள் மே 13-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டன. இதனால், உலகின் அணு ஆயுதப் பட்டியல் கொண்ட நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்தது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'திரிசூல்' ஏவுகணை, 'ஹன்சா-3' என்னும் அதிநவீன விமானம் ஆகியவையும் மே 11-ஆம் தேதிதான் முதன்முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.

Advertisement

உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடைபெற்ற அந்த சோதனைகளை நினைவுபடுத்தவும், அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்கவும், மக்களிடையே அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகவும், மே 11-ஆம் தேதி 'தேசிய தொழில்நுட்ப தினம்' என அறிவிக்கப்பட்டு, 1999-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய தொழில்நுட்ப தினம், 'ஆத்மநிர்பர் பாரத்' (தற்சார்பு இந்தியா) எனும் உணர்வை நினைவூட்டும் ஒரு வலிமையான நாளாகத் திகழ்கிறது.

நடத்தப்பட்ட ஐந்து அணு ஆயுதச் சோதனைகளில் முதல் சோதனை ஓர் இணைவுக் குண்டு ஆகும். மீதமுள்ள நான்கு சோதனைகளும் பிளவுக் குண்டுகள் ஆகும். இந்தச் சோதனைகளின் விளைவாக, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு எதிராகப் பல தடைகள் விதிக்கப்பட்டன. மேலும், அதே ஆண்டு பாகிஸ்தான் மே 28, 30-ஆம் தேதிகளில் அணுகுண்டு சோதனைகளை நடத்த தூண்டுதலாக அமைந்தது.

அணு என்பதே சிறு நுண் துகள்! அதைப் பிளக்க முடியும் என்று பொதுவாகத்தான் மேடம் க்யூரி தம்பதிகள் 19-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்துக் கூறி நோபல் பரிசு பெற்றார்கள். ஆனால், அணு சக்தியைக் கட்டுப்படுத்தி, மனிதருக்கு ஆக்க சக்தியாகவும் மாற்ற முடியும் என்று கண்டறிந்தவர்கள் நம் முன்னோர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடனான இந்தியாவின் பிணைப்பு ஒன்றும் புதிதல்ல. 'பசி, மற்றும் வறுமை சார்ந்த பிரச்னைகளை அறிவியலால் மட்டுமே தீர்க்க முடியும்' என்று ஆணித்தரமாக முழங்கிய பண்டித ஜவாஹர்லால் நேரு போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர இந்தியா தேசத்தைக் கட்டமைப்பதில் அறிவியல் ஆராய்ச்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தது.

அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் உள்நாட்டுத் தொழில்கள் ஆகியவற்றின் மீது பல தசாப்தங்களாகச் செலுத்தப்பட்ட கவனம், இந்தியாவின் தன்னிறைவுக்கான அடித்தளத்தை அமைத்தது. ஆசியாவிலேயே அணுசக்தித் திட்டத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்தத் திட்டம் 1944-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய அங்கமாக தார் பாலைவனத்தில் அமைந்துள்ள 'போக்ரான் சோதனைத் தளம்' விளங்கியது. இந்தியாவின் முதல் அணு ஆயுதச் சோதனை வெடிப்பு மே 18, 1974 அன்று 'சிரிக்கும் புத்தர்' என்று குறிக்கப்பட்ட அணுகுண்டு சோதனையை நடத்தியது.

கால் நூற்றாண்டுக்குப் பிறகு, மே 11, 1998 அன்று 'புத்த பூர்ணிமா' நாளன்று இரண்டாவது சோதனையை 'ஆபரேஷன் சக்தி' என்ற பெயரில் நடத்தியது. சக்தி என்ற சம்ஸ்கிருதப் பெயர், ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் ஹிந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல்லாகும். காலப்போக்கில், தேசிய தொழில்நுட்ப தினம் என்பது போக்ரான் சோதனைகளை நினைவூட்டும் நிகழ்வாக மட்டும் நின்றுவிடாமல், அனைத்துப் பொருளாதாரத் துறைகளிலும் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பச் சிறப்பைக் கொண்டாடும் ஒரு பரந்துபட்ட விழாவாக உருவெடுத்துள்ளது.

1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-சீனா பேரில், இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. சீனா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1964-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், 'அணுகுண்டுக்குப் பதில்... அணுகுண்டுதான்' என்று தெரிவித்தார். இந்தியா தொடர்ச்சியாக அணுகுண்டு சோதனை நடத்த முயன்றது. ஆனால், அந்த முயற்சிகள் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே போயின.

1995-ஆம் ஆண்டு பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு அணுகுண்டு பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்தது. பணிகள் வேகம் பெற்றன. எனினும், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ-யின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் பணிகளைக் கண்டறிந்ததுடன் தகுந்த ஆதாரங்களுடன், திட்டத்தைக் கைவிடும்படி இந்தியாவை எச்சரித்தது. 1998-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் 13-ஆவது பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார்.

பதவியேற்ற அடுத்த நாளே அப்போதைய மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் அணுசக்தி இயக்கத்தின் தலைவர் சிதம்பரம் உள்ளிட்டோரை அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானியுடன் ரகசியமாகச் சந்தித்துப் பேசினார் வாஜ்பாய். முதலில் ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதிதான் பரிசோதனைக்காக தேதி குறிக்கப்பட்டது.

எனினும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த தேதி மே 11-க்கு மாற்றப்பட்டது. இந்தியா நடத்தும் சோதனையை அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் முன்னதாகவே கண்டறிந்துவிட்டால், உடனடியாக சோதனைகளை நிறுத்த அழுத்தம் கொடுக்கும். இதனால், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.-வின் உளவு செயற்கைக்கோள் இந்தியப் பகுதியைக் கண்காணிக்காத காலத்தை முன்னரே கணித்து, அந்த நேரத்திலும் செயற்கைக்கோளின் கண்காணிப்புத் திறன் குறைவாக இருக்கும் இரவு நேரத்திலும் இந்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

இந்தத் திட்டமிடுதல் காரணமாக, அமெரிக்காவால் இந்தியாவின் அணுகுண்டு சோதனையை முன்னரே கணிக்க முடியவில்லை. சி.ஐ.ஏ.-வின் அப்போதைய இயக்குநர் ஜார்ஜ் டெனெட், 'நாங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவின் அணு சக்தி திட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். ஆனால், இந்தக் குறிப்பிட்ட திட்டத்தைத் தவறவிட்டு விட்டோம்' என்றார்.

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'இந்த வெற்றிகரமான சோதனைகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள், பொறியியலாளர்களை நான் வாழ்த்துகிறேன்' என, மே மாதம் 11-ஆம் தேதி, அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய் கூறியபோதுதான் உலக நாடுகள் தெரிந்துகொண்டன. கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் உலக அளவில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது.

போக்ரான்-2 அணு சோதனைகள் (1998), இந்தியாவின் நிலவு ஆய்வுத் திட்டம், இதில் சந்திரயான்-3 (2023) நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி, உலகின் நான்காவது நாடாக சாதனை புரிந்தது. செவ்வாய் சுற்றுப்பாதை திட்டம் (மங்கள்யான், 2014). குறைந்த செலவில் தனது முதல் முயற்சியிலேயே செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் நாடாக இந்தியா ஆனது.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் தலைமையில், இந்தியா உள்நாட்டு 5ஜி தொலைத்தொடர்பு கண்டுபிடிப்புகளில் நாட்டை ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ), ஏவுகணைகள், போர் அமைப்புகளில் உள்நாட்டுத் திறனை உருவாக்கியுள்ளது. நீண்ட தொலைவு செல்லக்கூடிய அக்னி, பிருத்வி பாலிஸ்டிக் ஏவுகணைகள் நம்பகமான தடுப்பு சக்தியை வழங்குகின்றன.

ரஷியாவுடனான ஒரு கூட்டு முயற்சியான 'பிரம்மோஸ்' சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை அனைத்து காலநிலைகளிலும், பல தளங்களிலும் செயல்படும் திறனுடன் ஒரு முக்கிய படைப் பெருக்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. டி.ஆர்.டி.ஓ, போர் விமானங்கள் (தேஜஸ் போர் விமானம்), மின்னணுப் போர் அமைப்புகள் மற்றும் கவச வாகனங்களையும் உருவாக்குகிறது. ஒன்றிணைந்து, இந்தத் திட்டங்கள் இந்தியாவின் வெளிநாட்டு ஆயுத இறக்குமதி மீதான சார்பை வியத்தகு முறையில் குறைத்து, ஒரு

விண்வெளி-தொழில்துறை தளத்தை உருவாக்கியுள்ளன. மேலும், இஸ்ரோ ஒரே திட்டத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது (2017) முதல் வரவிருக்கும் ககன்யான் மனித விண்வெளிப் பயணம் (2026-இல் திட்டமிடப்பட்டுள்ளது) மற்றும் பாரதிய விண்வெளி நிலையம் வரை, இஸ்ரோ விண்வெளி ஆய்வைத் தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது.

புதுமையாக்கமே தேக்கநிலைக்கு எதிரான மாற்று மருந்து என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியது நினைவு வருகிறது.

இந்தியாவின் முன்னோக்கிய பாதை, எண்ணற்ற சாத்தியக்கூறுகளால் நிறைந்துள்ளது; செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம், குவாண்டம் கணினி மற்றும் தூய ஆற்றல் ஆகியவை அவற்றில் சில.

இந்தியா பெரிய கனவுகளைக் கண்டு, புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், நாம் உலகளாவிய தொழில்நுட்பத் தலைவராக உருவெடுக்க முடியும். இன்றைய உலகில் தொழில்நுட்பம் இல்லாமல் எந்த முன்னேற்றமும் சாத்தியமில்லை. எனவே, நாம் அனைவரும் தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.