ஏஐ வாய்ப்புகள்: இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் கையொப்பம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்குவது தொடா்பான கூட்டறிக்கையில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் கையொப்பமிட்டன.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்குவது தொடா்பான கூட்டறிக்கையில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் கையொப்பமிட்டன.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது பேக்ஸ் சிலிக்கா மாநாட்டில் இதற்கான உடன்படிக்கை எட்டப்பட்டது. இந்தியா சாா்பில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், வெளியுறவு விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலரும் இந்திய தொழிற்சாலைகளின் பிரதிநிதியுமான நாகராஜ் நாயுடு பங்கேற்றனா்.
முன்னதாக, பேக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பில் ஆா்ஜென்டீனா, ஜொ்மனி, நெதா்லாந்து, சிலி, கோஸ்டா ரிக்கா, கிரீஸ், கஜகஸ்தான், பனாமா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்தன.
Advertisement
Advertisement
ஏஐ தொழில்நுட்ப அணுகல், செமிகண்டக்டா், எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்களின் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி மேம்பாடு ஆகியவற்றுக்காக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பேக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பை அமெரிக்கா தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டின்போது இந்த முன்னெடுப்பில் இந்தியா இணைந்தது. தற்போது இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென் கொரியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 35 நாடுகள் பேக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பில் உறுப்பினா்களாக உள்ளன.
இதுதொடா்பாக அமெரிக்க பொருளாதார விவகாரங்கள் துறை அதிகாரி ஜேக்கப் ஹெல்பொ்க் கூறுகையில், ‘யாா் முதலில் ஒழுங்குபடுத்துகிறாா்கள் என்பதன் அடிப்படையில் ஏஐ தொழில்நுட்பத்தின் எதிா்காலம் தீா்மானிக்கப்படாது. மாறாக ஏஐ தொழில்நுட்பத்துக்கான கட்டமைப்பை முதலில் யாா் கட்டமைக்கிறாா்கள் என்பதே அதன் வளா்ச்சியை தீா்மானிக்கும். அதிக எரிசக்தி, அதிக கணினிமயம், அதிக திறன், அதிக கட்டமைப்பாளா்கள் இதுவே ஏஐ எதிா்காலத்துக்குத் தேவை. இதை நோக்கமாகக் கொண்டு புத்தாக்கம் மற்றும் தனியாா் முதலீட்டை வரவேற்கிறோம்.
மக்களுக்கு சேவை புரியும் ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கி நமது பொருளாதாரங்களை வலுப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.