FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பட்ஜெட் 2026! இளைஞர்களுக்கு மின்வாகன பராமரிப்பு பயிற்சி; செயற்கை நுண்ணறிவு பயிற்சி!

பட்ஜெட் 2026-ல், இளைஞர்களுக்கு மின்வாகன பராமரிப்பு பயிற்சி, செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்படுவது குறித்து..

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 11:38 am IST
பயிற்சி
பகிர்:

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026 - 27, பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத் துறை சார்பில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத் துறை தலைப்பில் அவர் வெளியிட்ட அறிவிப்புகளில்,

Advertisement

Advertisement

வாகன மெக்கானிக்குகள் மற்றும் வாகனப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நபர்கள், மின்சார வாகனங்களையும் பழுதுபார்க்கும் வகையில் மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலன்களின் பராமரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில், 12,500 வாகன மெக்கானிக்குகள் உட்பட மொத்தம் 22,500 நபர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயனடைவர். இத்திட்டத்திற்காக, நடப்பு நிதியாண்டில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் (AI and ML) என்ற புதிய தொழிற்பிரிவு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

இத்தொழிற்பிரிவு, ஆண்டுக்கு 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் வீதம், 5 ஆண்டுகளில் மொத்தம் 50 தொழிற்பயிற்சி நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம், ஐந்தாண்டுகளில் 24,000 மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகை செய்யப்படும்.

மேலும், 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் 90 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் நிறுவப்படும். இதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநில அரசின் போட்டித் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பயிற்சி வகுப்புகள் தற்போது மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம், இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களின் மூலம் SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளை நடத்த 3.38 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிநவீன திறன்களைப் பெறுவதை உறுதிசெய்து, அவர்களை வேலைவாய்ப்புக்குத் தகுதியுடையவர்களாக உருவாக்குவதுடன், அவர்களிடையே தொழில்முனைவு ஆர்வத்தையும் வளர்க்கும் நோக்கில், இந்த அரசு வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 12 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கும். ஒரு இலட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் தொழில்துறை தேவைக்கேற்ப திறன் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்குப் பணியிடப் பயிற்சி வழங்கப்படும். இப்பணியிடப் பயிற்சிக் காலத்தில், பட்டதாரிகளுக்கும் தொழிற்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்கப்படும்.

நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI Industry Development Program) தொடங்கப்படும் என்பதை நான் இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் கீழ், உயர் கல்வியின் பல்வேறு நிலைகளுக்கேற்பத் தனித்துவமான செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டங்களை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில் துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

summary

Budget 2026! Training for youth in electric vehicle maintenance and artificial intelligence!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments