முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

என்சிபிஎச் -பதிப்புப் பல்கலைக்கழகம்

மக்கள் இருக்கும் இடங்களை நோக்கி புத்தகங்களை எடுத்துச் சென்று எழுதப் படிக்க மட்டும் தெரிந்திருந்த பல்லாயிரம் பேரை வாசகர்களாக மாற்ற முயன்று வெற்றி கண்ட நிறுவனம் என்சிபிஎச்.

Updated On : 1 ஜூன் 2026, 3:13 am IST
என்சிபிஎச்
பகிர்:

தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951 -ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.

விடுதலைப் போராட்ட வீரரும் பொதுவுடைமை இயக்கத் தொடக்கக் காலத் தலைவர்களின் ஒருவருமான பி.சி. ஜோஷியின் முயற்சியால் 1942 -இல் பம்பாயில் தொடங்கப்பட்ட பதிப்பகம் பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ். இதன் கிளை 1948 -இல் சென்னையில் தொடங்கப்பட்டது. அதன் குழந்தையாக உருவெடுத்த நிறுவனம்தான் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.

விடுதலைப் போராட்ட வீரர்களாகவும், மக்கள் உரிமைப் போராளிகளாகவும் விளங்கிய தமிழகத் தியாகிகள் சிலரால் சென்னையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டது இந்தப் பதிப்பகம்.

Advertisement

Advertisement

சமூக உணர்வாளர்கள், தீவிர புத்தக வாசிப்புக்கு வசப்பட்டவர்கள், ஊதியத்தைக் காட்டிலும் மக்கள் ஊழியத்துக்கு முன்னுரிமை அளித்தவர்கள் இந்த நிறுவன ஊழியர்களாக அமையப் பெற்றனர்.

மக்கள் இருக்கும் இடங்களை நோக்கி புத்தகங்களை எடுத்துச் சென்று எழுதப் படிக்க மட்டும் தெரிந்திருந்த பல்லாயிரம் பேரை வாசகர்களாக மாற்ற முயன்று வெற்றி கண்ட நிறுவனம் என்சிபிஎச்.

மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் நம்பிக்கையுடன் புத்தகக் கடை விரித்தனர். தொடக்க காலத்தில் ஓடைகளைக் கடக்க படகுகள்கூட இல்லாத இடங்களில் அடுத்த ஊரை அடைந்து புத்தகக் கடை விரிக்கும் நோக்கில் கூடைகளில் புத்தகங்களை அடுக்கி குறைவான தண்ணீர் ஓட்டத்தை நடந்தே கடந்தனர் உணர்வுமிக்க ஊழியர்கள்.

நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னர் சில காலமும் பேருந்து வசதி பல ஊர்களுக்கு இல்லை. அத்தகைய சூழலிலும் சைக்கிள், மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்ற இருக்கிற வாகனங்களில் நூல்களை அங்குள்ள கல்வி நிலையங்களுக்கோ, ஊர்த் திருவிழாவுக்கோ எடுத்துச் சென்றுள்ளனர்.

ஊர்தோறும் மாதக்கணக்கில் தெருவோரக் கண்காட்சிகள், கல்வி நிலையங்களில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாக்கள் என்று தமிழகமெங்கும் வாசிப்பு வேள்வியை மேற்கொண்டு வரும் நூல் வெளியீட்டகம். இந்த நிறுவனம் "பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்' மற்றும் மாஸ்கோ பதிப்பகத்தார் வெளியிட்ட நூல்களை கடனுக்குப் பெற்று நூல்களை விற்றுத் தொகை செலுத்தும் நிலையில்தான் இருந்தது. அவற்றுடன் அந்தக் காலத்தில் சிறந்த நூல்களை மலிவான விலையில் பதிப்பித்த சக்தி காரியாலயம் வை. கோவிந்தன், தமிழ் புத்தகாலயம் கண. முத்தையா, ஸ்டார் பப்ளிகேஷன்ஸ் ராமநாதன் ஆகியோர் தாங்கள் வெளியிட்ட தலைசிறந்த தமிழ் நூல்களை விற்ற பின்னர் தொகை செலுத்தும் சலுகையுடன் உதவி செய்யும் நோக்கில் என்சிபிஎச் -க்கு வழங்கினர்.

நூல் விற்பனையில் வெற்றி பெற்ற பின்னர் 1955 -இல் பதிப்பகமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. ஒபாரினின் "உயிரின் தோற்றம்', எங்கல்ஸின் "குரங்கு முதல் மனிதன் வரை', ஜார்ஜ் பொலிட்ஸரின் "மார்க்ஸீய மெய்ஞ்ஞானம்' ஆகிய நூல்களைப் பதிப்பித்தனர். தமிழ் மொழியின் தனித்துவத்தை அறியாத அயலவர்க்கு அவற்றை வலுவாக எடுத்துச் செல்லும் நோக்கில் பேராசிரியர் வையாபுரி பிள்ளை எழுதிய "தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வரலாறு' என்ற ஆங்கில ஆய்வு நூலைப் பதிப்பித்து நாடெங்கும் பரவலாக எடுத்துச் சென்று ஏற்படுத்திய நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் பிரதான குறிக்கோளே அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சார்ந்த நூல்களையும் தமிழில் பதிப்பிப்பதேயாகும். தாய்மொழியில் அனைத்து வகை அறிவும் கிடைக்கப் பெறச் செய்ய பெரு முயற்சிகளை மேற்கொண்ட தமிழகத்தின் முதல் புத்தக நிறுவனம் என்று கூறலாம். தொடக்க காலத்திலேயே "தமிழில் முடியும்' என்ற சிறப்புமிக்க ஆய்வுக் கருத்தரங்கத்தை நடத்தியதுடன், அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து "தமிழில் முடியும்' என்ற நூலையும் பதிப்பித்தது.

இந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட "கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' என்ற நூல் அப்போதே ஒரு லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்று சாதனை படைத்தது. சோவியத் நூல்களைப் பதிப்பிப்போர் சென்னை வந்து இந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட தொடர்புக்குப் பிறகே மாஸ்கோவிலேயே தரம்மிக்க ஏராளமான தமிழ் நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினர்.

மார்க்சிம் கார்க்கியின் "தாய்', லியோ டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்' உள்ளிட்ட ஏராளமான ரஷிய இலக்கிய நூல்கள் பல்லாயிரக்கணக்கில் தமிழ்நாடெங்கும் விற்றுத் தீர்ந்தன. ரஷிய இலக்கிய நூல்கள் தமிழ் மக்களிடையே வேரூன்றியதற்கு முழுமுதற் காரணமாக விளங்கியது என்சிபிஎச். "சோவியத் புத்தகக் கண்காட்சி' என்ற பெயரில் நாடெங்கும் புத்தக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டன. ரஷியாவில் அச்சடிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கதை நூல்களும், அறிவியல், வரலாறு, மருத்துவம் உள்ளிட்ட பிற துறை தமிழ் நூல்களும் விற்கப்பட்டன.

என்னுடைய 12 -ஆவது வயதில் எனது தந்தை, டால்ஸ்டாய் எழுதிய "குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்' என்ற ஒரு பக்கம் கதை ஒரு பக்கம் ஓவியம் என்றிருந்த நூலொன்றை வாங்கிக் கொடுத்தார். அவ்வளவு பெரிய நூலின் விலை அப்போது ஐந்து ரூபாய். என்னுடைய வாசிப்பின் தோற்றுவாய் என்சிபிஎச் என்று உறுதிபடச் சொல்லலாம். புத்தகக் கண்காட்சி குறித்த புரிதலை எனக்குள் இளம் வயதிலேயே இனம் தெரியாமல் ஏற்படுத்தியது என்சிபிஎச்.

1967 -இல் சோவியத் யூனியனின் 50 -ஆம் ஆண்டின்போது தமிழ்நாட்டில் 50 புத்தகக் கண்காட்சிகளும், 1971 -இல் லெனின் நூற்றாண்டின் போது நூறு கண்காட்சிகளும் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் சுமார் 150 புத்தகக் கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டன. தற்போது தமிழ்நாடெங்கும் பரவலாக என்சிபிஎச் கண்காட்சிகள் ஏராளமாக நடைபெற்றவாறு உள்ளன.

1956 -இல் மதுரையிலும், 1959 -இல் கோவையிலும் அதன் பின்னர் பிற நகரங்களிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன. தற்போது 20 நிரந்தரக் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்திய விடுதலைப் போரிலும்

விடுதலைக்குப் பின்னர் நடைபெற்ற மக்கள் இயக்கங்களிலும் பங்கேற்று சிறைப்பட்ட பொதுவுடைமை இயக்க ஆளுமைகள் இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், மேலாண்மை இயக்குநர்களாகவும், இயக்குநர்களாகவும் விளங்கியுள்ளனர். ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி இதன் நேரடிப் பொறுப்பில் பல காலம் இருந்துள்ளார். இந்நிறுவனத்தின் லாபம் இதை வழிநடத்திய தனி நபர்களுக்கோ அமைப்புக்கோ செல்வதில்லை.

ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி, அறிவார்ந்த சமூகம், விழிப்புணர்வுள்ள மக்கள், கல்வி மேம்பாடு, மக்களின் சுய சிந்தனை வளர்ச்சி, அறிவியல் கண்ணோட்டம், வரலாற்று அறிவு, இலக்கியச் செல்வம், மக்களிடையே ஒற்றுமை, தமிழ் மொழி வளர்ச்சி, தாய்மொழிக் கல்வி, மருத்துவச் சேவை, சட்ட ஞானம், பொது அறிவு விவசாய மேம்பாடு, தொழில் வளர்ச்சி, அரசியல் அறிவு, தத்துவ விளக்கம் உள்ளிட்டவையே என்சிபிஎச் -இன் பதிப்பு நோக்கமாக என்றென்றும் இருந்து வந்துள்ளது.

இந்தப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்களாக உள்ளன. சாகித்திய அகாதெமி உள்ளிட்ட மத்திய - மாநில அரசுகளின் பல பரிசுகளை இந்தப் பதிப்பக நூல்கள் பெற்றுள்ளன. இந்தப் பதிப்பகம் சார்பில் "உங்கள் நூலகம்', "சமூக விஞ்ஞானம்' ஆகிய இரு இதழ்கள் வெளிவருகின்றன. சங்க இலக்கிய நூல்கள், அம்பேத்கர் நூல்கள், லெனின் திரட்டு நூல்கள் எனப் பல தொகுதிகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் பல தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

பாவை பப்ளிகேஷன்ஸ், அறிவுப் பதிப்பகம், தாமரை பப்ளிகேஷன்ஸ், நெஸ்லிங் புக்ஸ் ஆகியவை என்சிபிஎச் நிறுவியுள்ள சகோதரப் பதிப்பகங்கள். இதுவரை என்சிபிஎச் மற்றும் சகோதரப் பதிப்பகங்களால் சுமார் 8,000 நூல்களுக்கும் அதிகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளன.

1980 -இல் டிராக்டரை இழுவையாக வைத்து ரயில் பெட்டி போன்ற அமைப்பில் நடமாடும் புத்தகக் கண்காட்சி ஊர் ஊராக நடத்தப்பட்டது. பின்னர் மகாகவி பாரதியார், பாரதிதாசன்

பெயரில் இரண்டு நடமாடும் புத்தக நிலையங்கள் பேருந்துகளைக் கொண்டு அமைக்கப்பட்டு தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் சென்று புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

என்சிபிஎச் -இன் 75 ஆண்டுகால வரலாற்றையும் பங்களிப்பையும் ஆழ்ந்து ஆய்வு செய்தால் இதை "பதிப்புப் பல்கலைக்கழகம்' என்று அழைத்தல் மிகையன்று.

இன்று (ஜூன் 1) என்சிபிஎச் -இன் 75 -ஆம் ஆண்டு நிறைவு நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.