முகப்பு
தலையங்கம்

மாற்றத்துக்கான நேரம்

இந்தியாவின் ஏனைய மாநிலத் தலைநகரங்களும், மாநகராட்சிகளும் மின்சார வாகனங்களுக்கு மாறும் முனைப்பை முன்னெடுப்பது அவசியம்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 6:16 AM
காற்று மாசுபாடு (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:54 AM

சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் காற்று மாசை எதிர்கொள்ள தில்லி மாநில அரசு முனைப்புடன் சில முடிவுகளை எடுத்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான (2026-2030) புதிய மின் வாகனக் கொள்கையை வகுத்து, அதற்கான வரைவு அறிக்கை பொதுமக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் ஆட்டோக்களும், அதற்கு அடுத்த ஆண்டு (2028) பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்களும் பதிவு செய்யப்படுவது முழுமையாக ரத்து செய்வதை பரிந்துரைத்திருக்கிறது தில்லி அரசின் வரைவு அறிக்கை.

2028-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல்}டீசல் வாகனங்களைப் படிப்படியாக தடை செய்யும் வகையில் மாநில அரசின் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Advertisement

ஏற்கெனவே தலைநகர் தில்லியில் பல ஆண்டுகளாகவே பொதுப் போக்குவரத்தில் பெட்ரோல்} டீசல் வாகனங்களுக்குத் தடை இருந்து வருகிறது. பேருந்துகளும் சிற்றுந்துகளும் வேன்களும் வாடகை கார்களும் எரிவாயுவில்தான் (சிஎன்ஜி) இயங்கி வந்தன. தனியார் வாகனங்களும்கூட சிஎன்ஜி-க்கு மாறி வந்தன.

பொதுப் போக்குவரத்து சிஎன்ஜி மற்றும் மின்வாகனங்களாக மாறியதைத் தொடர்ந்து, புகையால் ஏற்படும் மாசு பெருமளவு குறைந்திருந்தது. ஆனாலும்கூட, அதிகரித்துவரும் மக்கள்தொகை காரணமாக பெட்ரோல்-டீசல் வாகனங்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்திருப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்திய மேற்காசிய போர்ச்சூழல் புதைபடிவ எரிவாயுவிலிருந்து மாற வேண்டிய கட்டாயத்தை உலக நாடுகள் அனைத்துக்குமே ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் தில்லியைப் பொருத்தவரை குளிர்காலங்களில் ஏற்படும் காற்று மாசு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றைய சூழலைப் பயன்படுத்தி தலைநகரில் இயங்கும் அனைத்து வாகனங்களும் பெட்ரோல்-டீசலைத் தவிர்க்கும் வகையில் தில்லி அரசு திட்டமிடுவது வரவேற்புக்குரிய முடிவு.

வரும் 2028-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பெட்ரோல் பைக்குகள், ஸ்கூட்டர்களின் பதிவு நிறுத்தப்பட்டு மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் . அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அதேபோல மின்சார ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்கிறது வரைவு அறிக்கை.

2030-ஆம் ஆண்டுக்குள் கல்வி நிலையங்களின் பேருந்துகளும் மின்சார வாகனங்களாக மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தில்லி மாநில அரசின் பயன்பாட்டுக்காக இனிமேல் கொள்முதல் செய்யப்படும் வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்று அந்த வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.

மக்கள் மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும் வகையில் வரைவு அறிக்கையில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோவாட்டுக்கு ரூ.10,000 என்ற வகையில் முதல் ஆண்டில் ரூ.30,000 வரை மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளில் இந்த ஊக்கத்தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதால், பலரும் காலதாமதமில்லாமல் தங்களது இரு சக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற முனைப்புக் காட்டுவார்கள் என்பது எதிர்பார்ப்பு.

இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், மின்சார ஆட்டோக்களுக்கு முதல் ஆண்டில் ரூ. 50,000}மும், மின்சார சரக்கு வாகனங்களுக்கு முதல் ஆண்டில் ரூ. 1 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்க இருக்கிறது தில்லி அரசு. இந்த ஊக்கத்தொகையும் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

"பிஎஸ்-4' வகை இரு சக்கர வாகனங்களுக்குப் பதிலாக, மின்சார வாகனம் வாங்கினால் ரூ. 10,000-மும், மின்சார ஆட்டோ வாங்கினால் ரூ. 25,000-மும் பழைய வாகனங்களை மாற்றி மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான "ஸ்க்ராப்' ஊக்கத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல, ரூ. 30 லட்சம் வரையிலான பெட்ரோல் காரை மின்சார வாகனமாக மாற்றினால் ரூ. 1 லட்சம், சரக்கு வாகனங்களுக்கு ரூ. 50,000 வழங்குவதன் மூலம் அடுத்த ஆறு மாதங்களில் கணிசமான வாகனங்கள் மின்சாரத்தில் இயங்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

மின்சார வாகனங்களுக்கான சாலை வரி, பதிவுக் கட்டணத்தில் 100% விலக்கு; ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு முழு விலக்கு; பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் ஹைபிரிட் வகை கார்களாக இருந்தால் 50% விலக்கு; ரூ.30 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள மின்சார கார்களுக்கு எந்தவிதச் சலுகையும் இல்லை.

மின்சார வாகனங்களை அதிகப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில், தில்லி முழுவதும் அதற்குத் தேவையான மின் ஏற்ற மையங்களை (சார்ஜிங் சென்டர்) அமைப்பதற்கான உள்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை மறந்துவிடவில்லை. ஆங்காங்கே மின் ஏற்ற மையங்கள் நிறுவப்படும் நிலையில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மாநில அரசு எதிர்பார்க்கிறது. மின் ஏற்ற மையங்கள் மட்டுமல்லாமல், பழைய மின்கலன்களை சுழற்சி முறையில் கையாள மின்கல சேகரிப்பு மையங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.

பொதுமக்களின் கருத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த வரைவு அறிக்கையின் அடிப்படையில், இந்தியாவின் ஏனைய மாநிலத் தலைநகரங்களும், மாநகராட்சிகளும் மின்சார வாகனங்களுக்கு மாறும் முனைப்பை முன்னெடுப்பது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.