முகப்பு
தலையங்கம்

வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கிறது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:04 AM
இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - PTI
பகிர்:

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்குப் பிறகு உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டமைப்பு பலவீனமடைந்துவரும் நிலையில், நமது பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள இது போன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வது அவசியமாகிறது.

இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஆப்பிரிக்காவில் மோரீஷஸ்; வளைகுடா பகுதியில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன்; ஐரோப்பாவில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்பு; பசிபிக் கடல் பகுதியில் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இப்போது நியூஸிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கிறது.

Advertisement

தில்லியில் கையொப்பமாகி இருக்கும் இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்குப் பல புதிய வர்த்தகப் பரிமாற்ற வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கலாம். 2024-25 -இல், முந்தைய ஆண்டைவிட 49% அதிகரித்து, வர்த்தகம் 1.3 பில்லியன் டாலராக உயர்ந்தது என்றாலும்கூட, நியூஸிலாந்தின் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு வெறும் 1.84% மட்டும்தான். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறைந்தது இரட்டிப்பாகும் என்று நம்பலாம்.

இந்தியாவின் அனைத்து ஏற்றுமதிகளுக்கும் 100% இறக்குமதி வரி விலக்கு அளிக்க நியூஸிலாந்து முன்வந்திருக்கிறது. ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், பொறியியல் தொடர்பான உதிரி பாகங்கள் (என்ஜினீயரிங் ஸ்பேர் பார்ட்ஸ்), காலணிகள் ஆகியவற்றுக்கான 10% இறக்குமதி வரி விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, மருந்துத் தயாரிப்புகள், வேளாண் மதிப்புக்கூட்டுப் பொருள்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் 5% வரியும் நியூஸிலாந்தால் அகற்றப்படுகிறது.

ஆண்டொன்றுக்கு 1.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி, ஆயத்த ஆடைகளை நியூஸிலாந்து இறக்குமதி செய்கிறது.

11 பில்லியன் டாலர் மதிப்புள்ள என்ஜினீயரிங் சார்ந்த பொருள்களும், தோல் பொருள்கள், மருந்துகள், நெகிழிப் பொருள்கள், கடல்சார் பொருள்களும் நியூஸிலாந்தால் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்போது இந்தியாவுக்கு அதன் கதவுகள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் செராமிக்ஸ், காலணிகள், மோட்டார் வாகனங்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 10% இறக்குமதி வரியை நியூஸிலாந்து விலக்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல கம்பளி, நிலக்கரி, மதுபானங்கள், அவகோடா- ப்ளூ பெர்ரி உள்ளிட்ட பழ வகைகள் போன்றவற்றுக்கு இந்தியா விதித்திருந்த 95% இறக்குமதி வரியை இப்போது ரத்து செய்கிறது.

ஒரேயடியாக, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின்மூலம் இந்தியா இறக்குமதிக்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. பால் பொருள்கள், வெங்காயம், சர்க்கரை, நறுமணப் பொருள்கள், சமையல் எண்ணெய், ரப்பர் உள்ளிட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் வேளாண் பொருள்களுக்கு எந்தவித வரிச் சலுகையும் நியூஸிலாந்துக்கு வழங்கவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இந்தியா-நியூஸிலாந்து உறவின் வலிமை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வலுசேர்க்கும் என்பதில்தான் இருக்கிறது. உலகத் தரத்திலான சேவைக் கட்டமைப்புடன் கூடிய, 140 கோடி மக்கள்தொகையுள்ள நாடு இந்தியா. அதில் பெரும் பகுதி நுகர்வு சார்ந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினர். வர்த்தகத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்த மிகப் பெரிய சந்தை, நியூஸிலாந்துக்குக் கிடைத்திருக்கிறது. அதேபோல, வேளாண், உற்பத்தித் துறைகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை நியூஸிலாந்திடமிருந்து இந்தியா பெற முடியும்.

இந்தியாவுடன் நியூஸிலாந்து வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இன்னொரு காரணம் உண்டு. இப்போது தனது பெரும்பாலான தேவைகளை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது நியூஸிலாந்து. சீனாவை மட்டுமே நம்பியிருக்காமல், அடுத்தாற்போல வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரமான இந்தியாவிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள நியூஸிலாந்து விழைவதில் வியப்பில்லை.

இந்தியாவும் (49.9%) நியூஸிலாந்தும் (67.4%) சேவைத் துறையால் வழிநடத்தப்படும் பொருளாதாரங்கள். சுற்றுலா, கல்வி, கணினித் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு என்று இரு நாடுகளுக்கு இடையேயும் 118 சேவைகளுக்குச் சந்தை திறந்துவிடப்பட்டிருக்கிறது என்பதுடன் இரு நாடுகளுக்கிடையே பயணிக்கும் வாய்ப்பும் எளிதாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் "இடைக்கால நுழைவு அனுமதி' (டெம்ப்ரரி விசா). அதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 5,000 பேர் மூன்றாண்டு காலம் நியூஸிலாந்தில் தங்கிப் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய "ஆயுஷ்' மருத்துவப் பட்டதாரிகளான வல்லுநர்கள், இந்திய சமையல்கலை நிபுணர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நியூஸிலாந்தில் பணியாற்ற முடியும். அதேபோல, நியூஸிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் வாரத்துக்கு 20 மணி நேரம் பகுதிநேர வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஒப்பந்தம் அனுமதி அளிக்கிறது.

வேளாண் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதலில் நியூஸிலாந்து முன்னணி வகிக்கிறது. இந்த ஒப்பந்தம் நாம் அவற்றைப் பெறுவதற்கு வழிகோலும். உலகளாவிய அளவில் 422 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கும் நியூஸிலாந்து, அதில் 10% அளவிலாவது இந்தியாவில் முதலீடு செய்தாலும்கூட, இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றதாகப் பொருள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.