முகப்பு
தலையங்கம்

எத்தனை காலம்தான் ஏமாறுவார்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்னை குறித்த தலையங்கம்...

Updated On : 8 ஜூலை 2026, 6:00 am IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்.
பகிர்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல ஆண்டுகளாகவே அரசுக்கு எதிரான மனநிலை நீறுபூத்த நெருப்பாகத் தொடர்கிறது. பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) திரண்டனர்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்ப் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர்.

அதிகரித்த மின்சாரக் கட்டணம், விண்ணைத் தொட்ட விலைவாசி உயர்வு, தங்கள் பகுதி வளங்களைச் சுரண்டி பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவை காரணமாக கடந்த 2023-ஆம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் பெரும் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தின் நீட்சியாக அரசுசாரா தன்னார்வ அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், சமூக - மத அமைப்புகள் ஆகியவை இணைந்து அவாமி கூட்டு அதிரடிக் குழு (ஜேஏஏசி) என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தின.

அதிகரித்த உணவுப் பஞ்சம் காரணமாக மானிய விலையில் கோதுமை வழங்குதல், மின்சாரக் கட்டணம் குறைப்பு, தங்களுக்கான சட்டப்பேரவையில் அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட 12 இடங்களை ரத்து செய்தல் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தியப் பிரிவினையின்போது ஜம்மு - காஷ்மீரில் இருந்து வெளியேறி பாகிஸ்தானில் குடியேறியவர்களுக்காக இந்த 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) அல்லது பாகிஸ்தான் தெஹ்ரீக் ஏ இன்சாஃப் கட்சியினரே வெற்றி பெறுவதால் மறைமுகமாக பாகிஸ்தான் தங்கள் குரலை ஒடுக்குகிறது என்பது போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டு.

Advertisement

Advertisement

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2024 மே மாதம் முஸஃபராபாத் நோக்கிச் சென்ற பேரணியின்போது கூட்டுக் குழுவைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர்; அப்போது ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் அரசு கண்துடைப்புக்காக சில அறிவிப்புகளை வெளியிட்டாலும் போராட்டம் ஓயவில்லை. கடந்த 2025 அக்டோபரில் நடைபெற்ற போராட்டத்தின்போதும் 10 பேர் உயிரிழந்தனர்.

இப்போது அங்கு மாகாண சட்டப்பேரவைக்கான தேர்தல் ஜூலை 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த ஜூன் 9-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 இடங்கள் அரசமைப்புச் சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்பட்டது என்பதால் அதை நீக்க முடியாது என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 7-இல் தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பு போராட்டக்காரர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது. இந்தப் பின்னணியில், தேர்தல் நேரத்தில் போராடினால் அனைவரின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதால் ஜூன் 9-ஆம் தேதி முஸஃபராபாத் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று கூட்டுக் குழு அறிவித்தது.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக அவாமி கூட்டு அதிரடிக் குழுவை தடை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. மேலும் அதன் தலைவர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் பெரும் தொகை அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதனால், கொந்தளித்த பொதுமக்கள் மீர்புர், ராவல்கோட், முஸஃபராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஜூன் 8-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற போராட்டங்களில் 4 போலீஸôர் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இணைய சேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பல நகரங்களிலும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பொதுமக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்களை அவமதித்ததுடன் தங்கம் மற்றும் மின்னணுப் பொருள்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொள்ளையடித்துச் சென்றனர். எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போன்று அவாமி கூட்டு அதிரடிக் குழுவின் தலைவர்களில் ஒருவரான ஷெளகத் நவாஸ் மீர், கடந்த ஜூன் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டது பெரும் எதிர்வினைகளை உண்டாக்கி உள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் பாகிஸ்தான் அரசின் அத்துமீறிய நடவடிக்கைகளால் இனியும் பாகிஸ்தான் அரசின் கீழ் அமைதியாக வாழ முடியும் என்பதை சாத்தியமற்றதாக ஆக்கிவிட்டதாகவும் தங்கள் கெüரவம், சுயமரியாதை, அடையாளம் ஆகியவற்றுக்கான போராட்டமாக மாறிவிட்டது என்றும் அவாமி கூட்டு அதிரடிக் குழு தலைவர்களில் ஒருவரான காலித் மஜீத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ள ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பி வளர்ச்சி அதிகரித்துவரும் அதே நேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும், வளர்ச்சியின்மையும் தலைவிரித்தாடுகிறது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து சர்வதேச அமைப்புகளிடம் கோரிக்கை வைக்கும் பாகிஸ்தான், தனது ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள், தேவைகள் குறித்து சட்டை செய்யவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இப்போது அங்கே எழுந்திருக்கும் அரசுக்கு எதிரான போராட்டம்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன்

மறந்தும் எண்ணக் கூடாது. எண்ணினால், எண்ணிய

வனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

திருக்குறள் (எண் 204) அதிகாரம்: தீவினை அச்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments