ஜபல்பூர் எச்சரிக்கை!
பர்கி அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம்
மத்திய பிரதேச மாநிலம், பர்கி அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், நீர்நிலைகள் சார்ந்த சுற்றுலாவின்போது சுற்றுலாப் பயணிகளின் பொறுப்பின்மை, அவர்களின் பாதுகாப்பில் அரசு நிர்வாகம் காட்டும் அலட்சியம் போன்றவை குறித்த தீவிரமான கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. அந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஐவரும் அடங்குவர்.
ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதை ஆற்றில் கட்டப்பட்டுள்ள பர்கி அணையில் கடந்த வியாழக்கிழமை மாலை படகு விபத்து நிகழ்ந்தது. அணையின் கரைப் பகுதியிலிருந்து புறப்படும்போது அமைதியான சூழல்தான் நிலவியது. ஆனால், சுமார் 300 மீட்டர் தொலைவு வரை சென்றபோது பலத்த சூறைக்காற்று வீசி அணை நீரில் படகு கவிழ்ந்தது. படகில் பயணம் செய்த 40}க்கும் மேற்பட்டோர் அணை நீரில் விழுந்து தத்தளிக்க அவர்களில் 28 பேரையே மீட்க முடிந்தது.
விபத்துக்கு முன்னர் படகில் இருந்தவர்களால் கைப்பேசியில் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளின்மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலும் மீறப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. பயணிகளில் யாருமே "லைஃப் ஜாக்கெட்' எனப்படும் பாதுகாப்புக் கவசத்தை அணிந்திருக்கவில்லை. படகு மூழ்கத் தொடங்கிய பின்னர்தான் அவசரம் அவசரமாக பாதுகாப்புக் கவசங்களைப் பிரித்து அணியத் தொடங்கினார்கள். மரண பயத்தில் எத்தனை பேரால் அதைச் சரியாக அணிய முடிந்ததோ தெரியவில்லை.
Advertisement
விபத்தில் மீட்கப்பட்ட ஒரு பயணி, படகு புறப்படும்போது தங்களுக்கு பாதுகாப்புக் கவசம் தரப்படவில்லை எனப் புகார் தெரிவித்திருக்கிறார். படகில் பயணம் செய்த பயணிகளின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் இல்லை. படகில் ஏறுவதற்கான நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் பார்த்துத்தான் எத்தனை பயணிகள் படகில் சென்றுள்ளனர் என்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் என்பது மிகப் பெரிய அவலம். 29 பயணிகளுக்கே டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில், 40}க்கும் மேற்பட்டோர் எப்படி படகில் சென்றனர் என்பதும் புரியாத புதிர்.
படகு மூழ்கத் தொடங்கியதுமே படகு இயக்குபவரும், அவரது உதவியாளரும் பயணிகளைக் கைவிட்டுவிட்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக படகிலிருந்து குதித்து விட்டனர்.
இதனால், படகில் இருந்த பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டு, என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்னரே அணை நீரில் மூழ்கிவிட்டனர். அவர்களில் பாதுகாப்புக் கவசம் அணிந்திருந்த தாய் ஒருவர் தனது குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்த்தவர்கள் அனைவரின் இதயத்தையும் நொறுங்கச் செய்துவிட்டது.
எல்லா அசம்பாவிதங்களும் நடந்த பின்னர்தான் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு ஜபல்பூர் படகு விபத்தும் விதிவிலக்கல்ல. படகு இயக்குபவர், அவரது உதவியாளர், டிக்கெட் கவுன்ட்டர் பொறுப்பாளர் ஆகியோரைப் பணியிலிருந்து நீக்கம் செய்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டிருக்கிறது. படகு குழாம் மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது போன்ற சுற்றுலாப் படகுகள் இயக்கம், நீர் விளையாட்டுகள் அனைத்துக்கும் உடனடியாகத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் யமுனை நதியில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த படகு விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பஞ்சாபிலிருந்து ஆன்மிகச் சுற்றுலா வந்தவர்கள் உள்பட சுமார் 25 பேர் அந்தப் படகில் சென்றனர். நதியில் இருந்த மூங்கில் பாலத்தின் மீது மோதியதைத் தொடர்ந்து படகு கவிழ்ந்தது விபத்துக்கு பிரதான காரணம் என்றாலும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதும் ஒரு காரணம். படகில் பயணம் செய்தவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் அளிக்காதது உயிரிழப்பு அதிகரித்ததற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
மும்பையில் இந்தியா கேட் அருகே கடந்த 2024}ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த படகு விபத்து மிகவும் விசித்திரமானது. இந்தியா கேட் பகுதியிலிருந்து பிரபல சுற்றுலாத் தலமான எலிபண்டா தீவுக்குச் சென்ற படகில் 100}க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நடுக்கடலில் இந்தப் படகு மீது ஒரு விரைவுப் படகு மோதியதில் சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கடற்படையைச் சேர்ந்த மூவர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். நடுக்கடலில் படகுகள் மோதுவதை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?
நீர்நிலைகளில் படகுகள் மூலம் சுற்றுலா, நீர் விளையாட்டுகள் போன்றவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக நாடு முழுவதும் தீவிர ஆய்வு செய்ய வேண்டிய சூழலை ஜபல்பூர் படகு விபத்து உணர்த்தியிருக்கிறது. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் படகுகளில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனரா, காலநிலை குறித்த எச்சரிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா,
ஒவ்வொரு சவாரி முடிந்த பின்னரும் படகுகளின் இயக்க ஆயத்தம் சோதனை செய்யப்படுகிறதா என்பதைக் கவனிப்பது அவசியம்.
ஒவ்வொரு சுற்றுலாப் படகிலும் குறைந்தது நன்றாக நீந்தத் தெரிந்த இருவராவது அதிகாரபூர்வமாக பணியில் அமர்த்தப்பட வேண்டும். பாதுகாப்புக் கவசத்தை பயணிகள் அணியச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்களும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது ஆபத்தைத் தவிர்க்க உதவும்.
ஜபல்பூரில் பாதுகாப்புக் கவசம் தரவில்லை எனக் கூறும் பயணிகள், பாதுகாப்புக் கவசத்தைத் தராவிட்டால் படகில் பயணிக்க மாட்டோம் என உறுதியாகத் தெரிவித்திருந்தால், இந்தத் துயரத்தை தவிர்த்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இப்போது குறைகூறி என்ன பயன்?