மாற்றத்துக்கான 'விசில்'
மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் மக்கள் நிகழ்த்தி இருக்கும் "வாக்குப் புரட்சி'
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பல்வேறு எதிர்பார்ப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி இருக்கின்றன. வாக்குகள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் மக்களாட்சி முறை இந்தியாவில் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி இருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்புவோர் இப்போது தங்களது தோல்விக்கு அதைக் காரணம் காட்ட மாட்டார்கள் என்று எதிர்பார்ப்போமாக...
2026 சட்டப்பேவைத் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலி இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருக்கும் அஸ்ஸôம் மாநிலத்திலும், புதுவை ஒன்றியப் பிரதேசத்திலும் அந்த ஆட்சிகள் தொடர மக்கள் வாக்களித்து ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள்.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆளும் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அஸ்ஸாமில் பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த மாநிலம் மேற்கு வங்கம். 2011 மே மாதம் 20-ஆம் தேதி, 34 ஆண்டுகால இடதுசாரிக் கூட்டணி ஆட்சியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினார் மம்தா பானர்ஜி. அவரது தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் அமைத்த கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்ல, அடுத்த 15 ஆண்டுகள் மேற்கு வங்கமும் முதல்வர் மம்தா பானர்ஜியும் இணை பிரிக்க முடியாத அளவுக்கு அவரது செல்வாக்கும் கொடிகட்டிப் பறந்தது.
2016 தேர்தலிலும் சரி, 2021 தேர்தலிலும் சரி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், அசைக்க முடியாத சக்தியாக மம்தா பானர்ஜியின் தலைமையில் அந்தக் கட்சி திகழ்ந்ததும் இப்போது வரலாற்றுப் பதிவுகளாகி விட்டன. தலா இரண்டு இடங்களுடன் காங்கிரஸýம், இடதுசாரிக் கூட்டணியும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன என்றால் 80 இடங்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர திரிணமூல் காங்கிரஸ் வாக்காளர்களால் பணிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக அடைந்திருக்கும் வெற்றி அசாதாரணமானது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக எப்படியும் மேற்கு வங்கத்தில் காலூன்றி ஆட்சி அமைத்தாக வேண்டும் என்கிற ஒற்றை முனைப்புடன் செயல்பட்ட பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். முன்பு இடதுசாரிகளையும், அதைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸையும் போல இனிமேல் அடுத்த சில ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் பாஜகவின் காலமாகத் தொடர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அஸ்ஸாமில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் பாஜக குறியாகவே இருந்தது. எல்லை மாநிலமான அஸ்ஸôம் கைநழுவிப் போய்விடாமல் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா. 2016-இல் கைப்பற்றிய அஸ்ஸôமில் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக. இரண்டாவது முறையாக முதல்வராகிறார் ஹிமந்த விஸ்வ சர்மா.
அதேபோல, புதுவையிலும் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வென்று, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் வலுவான எதிர்க்கட்சியாக உருவாகும் வாய்ப்புகூட காங்கிரஸுக்கு கிட்டவில்லை என்பது மிகப் பெரிய பின்னடைவு. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாத காரணத்தை கட்சித் தலைமை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
நாடு தழுவிய அளவில் தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதலாக அமைந்திருப்பது கேரளம் மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி படுதோல்வி அடைந்திருக்கிறது. 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 98 இடங்களில் வென்று ஆட்சி அமைக்க இருக்கிறது.
எல்லாக் கணிப்புகளையும் பொய்யாக்கி நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருப்பது மக்களாட்சிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட முறையில் விஜய்க்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். அவர் எதிர்பார்த்ததுபோல அளப்பரிய வெற்றியைப் பெற முடியாததும், குறைந்தபட்சம் தனிப்பெரும்பான்மை பெற முடியாததும் துரதிருஷ்டம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
1977-இல் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி 144 இடங்களிலும், 1983-இல் என்.டி. ராமாராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 201 இடங்களிலும் தனிப் பெரும்பான்மை பெற்றது போன்ற வெற்றியை, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஈட்ட முடியவில்லை. ஆனால், கடந்த அரை நூற்றாண்டு காலமாகக் கோலோச்சி வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அவரால் முற்றுப்புள்ளி வைக்க முடிந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். எம்ஜிஆர், என்டிஆர் போல அல்லாமல், கட்டமைப்புள்ள இரண்டு வலிமையான அணிகளை அவர் வீழ்த்தி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
1967-இல் முதல்வராக இருந்த எம். பக்தவத்சலம், 1996-இல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குப் பிறகு, தேர்தலில் தோல்வியைத் தழுவி இருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஒரே தலைமையில் திமுக தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றதில்லை என்கிற வரலாறு மீண்டும் தொடர்கிறது.
திமுக ஆட்சியின் மீதான பரவலான அதிருப்தியை அதிமுகவிடமிருந்து தவெக தட்டிப் பறித்துக் கொண்டுள்ள நிலையில், தமிழக அரசியலின் போக்கு இனிமேல் எப்படி இருக்கப் போகிறது என்பதை உடனடியாகக் கணிக்க முடியவில்லை. மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் மக்கள் நிகழ்த்தி இருக்கும் "வாக்குப் புரட்சி' இந்திய அரசியலில் பல மாற்றங்களுக்கு வழிகோலக்கூடும். மக்களாட்சியின் மகோன்னதம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.