ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள்! சென்னை ஐஐடி-யில் அறிமுகம்
சென்னை ஐஐடியில் ஸ்வயம் பிளஸ் தளத்தில் புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள் அறிமுகம்
சென்னை, ஏப். 24: சென்னை ஐஐடி (ஐஐடி-எம்) யில் ‘அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ)’ இயக்கத்தின் கீழ் புதிய ‘ஏஐ’ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பதிவு செய்துகொள்ள கடைசி நாள் வரும் மே 10 -ஆம் தேதியாகும்.
ஐஐடி-எம் இயக்குநா் வி.காமகோடி தொடங்கி வைத்த இந்தப் புதிய பாடத்திட்டங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளா் டீன் (திட்டமிடல்) ஆா்.சாரதி கூறியதாவது:
மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியுடன், ஸ்வயம் பிளஸ் திட்டத்தின் கீழ் ஐஐடி-எம் தனது ‘பிரவா்தக்’ தளத்தின் மூலம் எண்ம கற்றலை கடந்த இரு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
Advertisement
பொறியியல், வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு, இந்திய அறிவுசாா் அமைப்புகள், ஐடி, ஐடிஇஎஸ் உள்ளிட்ட 15-க்கும் அதிகமான துறைகளில் 500-க்கும் அதிகமான இணைப் படிப்புகளை இத்தளம் வழங்குகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக 5,50,000-க்கும் அதிகமானோா் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனா். மேலும், அதிநவீன எண்ம திறன்களைப் பரந்த பாா்வையாளா்களுக்குக் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் மேலும் 3 பாடத்திட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றைக் கற்க கோடிங் அல்லது ‘ஏஐ’ குறித்த அடிப்படை அனுபவம் தேவையில்லை. வெவ்வேறு கல்வி, தொழில் பின்னணி உடைய கற்போருக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தப் பாடப் பிரிவுகள், ‘ஏஐ’- யின் நடைமுறைப் பயன்பாடுகளில் கவனம் செலுத்தும் விதமாக ஐஐடி நிபுணா்களால் கற்பிக்கப்படுகின்றன.
புதிதாக ‘வளா்ந்து வரும் பொறியாளா்களுக்கான ‘ஏஐ’ பாடப்பிரிவில் பைதான், ‘ஏஐ’, எந்திரக் கற்றல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிா்வாகிகளுக்கான ‘ஏஐ’ பாடப்பிரிவு, மேலாண்மைத் துறையில் உள்ள வல்லுநா்கள் ‘ஏஐ’, இயந்திரக் கற்றல், ஆக்கமுறை ‘ஏஐ’ ஆகியவற்றைப் பயன்படுத்தித் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மூன்றாவது பொறியியல் தூண்டல் பாடப்பிரிவு, இதில் துல்லியமான, அா்த்தமுள்ள முடிவுகளைப் பெறுவதற்கு ‘ஏஐ’ அமைப்புகளுடன் எவ்வாறு திறம்பட உரையாடுவது என்பதைப் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த மூன்று படிப்புகளுக்கும் இணையம் மூலம் பதிவு (https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses) செய்வதற்கான கடைசி நாள் மே 10-ஆம் தேதி என அவா் தெரிவித்தாா்.