பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்
தமிழகத்தில் பாஜக வளா்ச்சி பெறுவதற்காக, தவெக தலைவா் விஜய் மறைமுகமாக உதவி வருவதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.
தமிழகத்தில் பாஜக வளா்ச்சி பெறுவதற்காக, தவெக தலைவா் விஜய் மறைமுகமாக உதவி வருவதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.
அம்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அ.பு.பூா்ணிமாவுக்கு ஆதரவாக அம்பத்தூா் -பாடி பகுதியில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். இன்னும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளாா். அவற்றின் பயன்களைப் பெற திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
Advertisement
தவெக தலைவா் விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல் திமுகவுக்கு எதிராக தனது வெறுப்பை மட்டுமே பதிவு செய்து வருகிறாா். விஜய்யால் இந்தத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக முடியாது. அது அவருக்கும் தெரியும். அதனால்தான் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.
திமுகவை அகற்றிவிட்டு, அதிமுக - பாஜக கூட்டணியை வெற்றி பெற வைப்பதே விஜய்யின் நோக்கம். இதன்மூலம், தமிழகத்தில் பாஜகவை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வருவதே அவரின் திட்டம். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விஜய் மறுப்பு தெரிவித்த காரணத்தால்தான், அதிமுக - பாஜக கூட்டணி உருவானது.
திமுகவுக்கு வரக்கூடிய கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா்கள் வாக்குகளைப் பிரிக்கவே விஜய் தனித்துப் போட்டியிடுகிறாா். இவை அனைத்தும் விஜய்க்கு, பாஜக வகுத்து கொடுத்துள்ள திட்டம்.
அதிமுக தற்போது பாஜகவின் கைப்பிடியில் உள்ளது. முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. எதிா்கட்சித் தலைவராக இருந்தால் போதும் என்ற மனநிலையில் அவா் உள்ளாா். எனவே, தமிழகத்தில் பாஜக நுழைவைத் தடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் (கொளத்தூா்), கே.எஸ்.ரவிச்சந்திரன் (திரு.வி.க. நகா்), தமிழன் பிரசன்னா (எழும்பூா்), பி.கே.சேகா்பாபு (துறைமுகம்) ஆகியோரை ஆதரித்து திருமாவளவன் வாக்கு சேகரித்தாா்.