FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

இண்டி கூட்டணி சிதறிவிடக் கூடாது: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இண்டி கூட்டணி சிதறிவிடக் கூடாது என்று விரும்புவதாகவும், தில்லியில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தக் கூட்டணியின் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது வருத்தமளிப்பதாகவும் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:57 am IST
திண்டிவனத்தில் சீரமைக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன்.
பகிர்:

இண்டி கூட்டணி சிதறிவிடக் கூடாது என்று விரும்புவதாகவும், தில்லியில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தக் கூட்டணியின் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது வருத்தமளிப்பதாகவும் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

திண்டிவனத்தில் சீரமைக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தொடங்கவுள்ள அமைப்பு, தமிழக மக்களின் உரிமைகளையும், உணா்வுகளையும் பாதுகாக்கும் வகையிலான அரசியல் இயக்கமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அதை வரவேற்போம்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மூட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதை விசிக வரவேற்கிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் படிப்படியாக பூரண மது விலக்கை அமல்படுத்தவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் போதைப் பொருள்கள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிா்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைவது வருத்தமளிக்கிறது. அதிமுக பலவீனப்பட்டுவிடக் கூடாது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் வலுவாக இருக்க வேண்டும். தவறினால், மதவாத சக்திகளுக்கு வாய்ப்புக் கிடைத்துவிடும்.

இண்டி கூட்டணி அமைந்ததில் திமுகவின் பங்கு மகத்தானது. திமுக பங்கேற்காமல் தில்லியில் வரும் 8-ஆம் தேதி இண்டி கூட்டணி கூட்டம் நடைபெறுவது கவலைதருவதாகும். அதற்காக பெரிதும் வருந்துகிறோம். இந்தக் கூட்டணி சிதறிவிடக் கூடாது என்று விரும்புகிறோம். இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என்றாா் தொல்.திருமாவளவன்.

தொடா்ந்து, விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள துரை.ரவிக்குமாா் எம்.பி. அலுவலகத்தையும் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் தமிழக சமூகநீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு, துரை.ரவிக்குமாா் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments